தவமாய் தவமிருந்து

நடிகர்கள்: ராஜ்கிரண், சரண்யா, சேரன், பத்மபிரியா
இசை: சபேஷ்-முரளி
இயக்கம்: சேரன்

தமிழ் சினிமா என்ற சீக்காளிக்கு அவ்வப்போது தனது திரைப்படங்களின் மூலம் இரத்த தானம் அளித்து உயிரோடு நீடிக்க வைத்துக் கொண்டிருந்த சேரன், தன் 'தவமாய் தவமிருந்து' திரைப்படத்தின் மூலம் ஒரு அறுவைச் சிகிச்சை செய்து வெற்றிகரமாக நிமிர்ந்து உட்கார வைத்திருக்கிறார்.

பிள்ளைகள், தங்கள் இருபத்தைந்து வயது வரை வாழ்ந்து உயர தகப்பன்கள் அமைத்துக் கொடுக்கும் அடித்தளம் பற்றிய கதை என்று ஆரம்பத்திலேயே சொல்லி விடுகிறார். கதையில் புதுமை இல்லையென்றாலும் கதையின் யதார்த்தம், தமிழ் சினிமா அரிதாகக் கண்டிருக்கும் புதுமை.

படத்தைத் 'திரையில் ஒரு நாவல்' என்று பொருத்தமாகச் சொல்வது போல், தகப்பனாக வாழ்ந்து காட்டியிருக்கும் ராஜ்கிரணை, 'நடிப்பில் ஒரு இமயம்' என்று தயங்காமல் சொல்லலாம். மலைக்க வைக்கும் இவரது நடிப்பின் முன் பிறர் காணாமல் போகின்றனர். தீபாவளிப் பண்டிகையின் போது பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தரப் பணம் சேர்க்கும் பொருட்டு இரவெல்லாம் போஸ்டர் ஒட்டி, காலையில் வீடு திரும்பி களைத்துப் படுத்திருக்கிறார். அப்போது புத்தாடை உடுத்தின பிள்ளைகள், கேப் வெடிக்கும் துப்பாக்கியுடன் வந்து அவர் மேல் ஏறி விளையாடும் போது களைப்புடன் கண்விழித்து, "டிரஸ் பிடிச்சிருக்கா? வெடி வெடிக்கிறீங்களா?" என்று கேட்டு பூரிப்புடன் மீண்டும் கண் மூடும் காட்சியின் மகத்துவம் சொல்லில் அடங்காதது.வட்டிக்குப் பணம் வாங்கத் தவிக்கும் காட்சியிலும் முத்திரை பதிக்கிறது இவரது நடிப்பு. இந்த ஆண்டில் மட்டுமில்லாது கடந்த சில ஆண்டுகால தமிழ் சினிமாவின் பண்பட்ட நடிப்பு. அட்டகாசம். இவரைப் போய் 'மாணிக்கம்' போன்ற திரைப்படங்களில் வெட்டி ஹீரோயிஸம் பண்ண வைத்துக் கொண்டிருந்த தமிழ் சினிமாவை எங்கே போய் நொந்து கொள்வதோ?

தந்தையின் கதை என்று பரவலாக அறியப்பட்டாலும், தாயாக நடிக்கும் சரண்யா, அங்கங்கு தனது இருப்பை வலிமையாக உணர்த்தியபடி இருக்கிறார். கணவனின் அதிகாரம் அல்லது அனுபவம், மூத்த மருமகளால் கேள்விக்குள்ளாக்கப்படும் போது கோபத்தில் வெடிக்கும் போதும், மனம் திருந்தி வந்த சேரனைக் கண்டு கதவை அறைந்து சாத்தும் போதும் ஜொலிக்கிறார்.

கல்லூரி மாணவிக்குரிய குறுகுறுப்பு, இளம் மருமகளுக்குரிய பக்குவம், தாய்மைக்குரிய கண்ணியம் என்று அத்தனையும் பொருத்தமாகக் கூடி வந்து, எந்தக் குறைபாடும் இல்லாத நிறைவான பங்களிப்பைச் செய்திருக்கிறார் பத்மபிரியா. பார்க்கவும் அழகாக இருக்கிறார். நடிப்பிலும் சில காட்சிகளில் சீனியர்களை விஞ்சி நிற்கிறார். அருமையான புது வரவு.

பிரிண்டிங் ப்ரெஸ் உதவியாளர் இளவரசு, மூத்த மகன், மூத்த மருமகள் என அனைவரும் சிறப்பாகப் பங்களித்திருக்கும் திரைப்படத்தில் நடிப்பு விஷயத்தில் குறை வைப்பது சேரன் மட்டுமே. குரலும் பொருந்தாலும், முகபாவங்களும் சரிவரக் கைவராமல் சேரன் அநேகக் காட்சிகளில் கஷ்டப்படுத்தி விடுகிறார். ஆட்டோகிராஃப் வெற்றிக்குப் பிறகு சேரனின் இயக்கத்தில் நடிக்க சில/பல நடிகர்கள் முன்வந்திருப்பார்கள் என்பதே எனது அனுமானம். அவர்களில் யாரையேனும் பயன்படுத்தி, இயக்கத்தில் மட்டுமே கவனம் செலுத்தியிருக்கலாம் சேரன்.

பாத்திரப் படைப்புகளின் யதார்த்தமும் நிதர்சனமும் ஒன்றையொன்று விஞ்சுகின்றன. குறிப்பாக மூத்த மகனின் கதாபாத்திரம். அப்பாவின் மீதான பாசமும் விலகாமல், மனைவியின் மேலான பிரியமும் கலந்து, இளமையின் விறைப்புடன் கூட்டணி சேரும் குழப்பமான மனநிலையைத் தெளிவாகப் படம் பிடிக்கின்றன அத்தனை காட்சிகளும்.

உரையாடல்கள் வாழ்க்கைக்கு மிக நெருங்கிய விதத்தில் பொருந்தி நிற்கின்றன. குறிப்பாக சரண்யா பேசுகின்ற அத்தனை வசனங்களுமே. 'அப்பா எது சொன்னாலும் நல்லா யோசிச்சு உன் நல்லதுக்காகத் தான்ப்பா சொல்வேன்' போன்ற வசனங்கள், ஒவ்வொருவரும் பல தருணங்களில் கேட்டிருக்கக் கூடிய வசனங்களே. கண்டிப்பாக நான் நிறைய கேட்டிருக்கிறேன்.

பாடல்களைப் பற்றிப் பெரிதாக சொல்லுமளவிற்கு எதுவுமில்லை என்றாலும் உறுத்தாமல் கதையோடு கலந்து நிற்கின்றன. அது கதையின் பலமே தவிர வேறொன்றுமில்லை.

கல்லூரிக் காலத்திலும் அதற்குப் பிறகு வேலைக்குப் போய் சம்பாதிக்கத் துவங்கிய பிறகும், நான் என் அப்பாவிடம் சில பொய்கள் சொல்லியிருக்கிறேன். அவர் மனம் வருந்தும் படி சில காரியங்கள் செய்திருக்கிறேன். அவற்றைக் குறித்த தீவிரமான வெட்கத்தையும் பதற்றத்தையும் எனக்குள்ளே ஏற்படுத்தியது இந்தப் படம். அந்த வகையில், தனிப்பட்ட முறையில் எனக்கு இது வெறும் படம் அல்ல, பாடம்.

எனக்குத் திருமணமாகிக் குழந்தைகள் பிறந்து நான் தந்தையான பிறகு இந்தப் படத்தின் இன்னும் பல பரிமாணங்களை நான் உணர்வேன் என்று உறுதியாக நம்புகிறேன்.

தமிழ் சினிமாவின் வெளிச்சமான எதிர்காலத்துக்கான தீப்பந்தம், சேரனின் கையில் இருக்கிறது. அந்த நெருப்பை அணையாமல் போற்றிப் பாதுகாக்க வேன்டிய பொறுப்பு தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இருக்கிறது.
Old Commenting System: |

Very Old Commenting System:

சூப்பர் ஸ்டாருக்கு திரைக்கதை எழுதி இயக்கிய அனுபவம்

IIM Bangalore-ல் சூப்பர் ஸ்டாரின் பிறந்த நாளைக் கொண்டாடியதைப் பற்றிய இந்தப் பதிவைப் பார்த்ததும் எனக்குள் மலரும் நினைவுகள். 2001-2003க்கு இடைப்பட்ட காலத்தில் அங்கே படித்த போது நாங்கள் செய்ததெல்லாம் நினைவுக்கு வந்தது. நாங்கள் சூப்பர் ஸ்டாரின் பிறந்த நாளைக் கொண்டாடவில்லையென்றாலும், பொங்கல் திருநாளைக் கொண்டாடும் போது நிகழ்ச்சியின் மையப் புள்ளி சூப்பர் ஸ்டார் தான். சாம்பார் மாஃபியா எனப்படும் எங்களுக்கு இரண்டு விஷயங்கள் உயிர். ஒன்று சாம்பார், இன்னொன்று சூப்பர் ஸ்டார்.

முதலாம் ஆண்டில் பொங்கல் நிகழ்ச்சியைக் கொண்டாட முடிவு செய்த போது ஸ்கிட் போடுவது என்று முடிவு செய்தோம். சூப்பர் ஸ்டார் IIM Bangalore-க்குப் படிக்க வந்தால் என்னென்ன நடக்கும் என்பது கதை. ஒவ்வொன்றாக காட்சிகள் உருவாக ஆரம்பித்தன. ஒவ்வொரு ஸீனுக்கும் ஒரு பஞ்ச் டயலாக். முதலில் சூப்பர் ஸ்டார் Common Admissions Test எழுதி முடித்து விட்டு Group Discussion-க்கு வருவார். அங்கே கய்யா முய்யா என்று எல்லோரும் கூச்சல் போட்டுக் கொண்டிருக்க, தலைவர் எழுந்து நின்று, "அதிகமா கோபப்பட்ட ஆம்பளையும், அதிகமா சவுண்டு விட்ட பொம்பளையும் உருப்பட்டதா சரித்திரம் கிடையாது" என்று தத்துவம் சொல்கிறார். அதிலே மிரண்டு போகும் ஆசிரியர்கள் அவரை நேர்முகத் தேர்வுக்கு அழைத்துச் செல்கிறார்கள். (இன்னொரு காமெடி என்னவென்றால், மொத்தக் கதையும் ஆங்கிலத்தில் நடக்கும். பஞ்ச் டயலாக் மட்டும் தமிழில் சொல்லி ஆங்கிலத்தில் மொழி மாற்றம் செய்தோம். மேலே சொன்னதன் மொழி மாற்றம் - The man who increases his anger and woman who increases her voice, are never able to increase their status in life..!!).

நேர்முகத் தேர்வு ஒரு கண்ணாடி அறைக்குள் நடைபெறுகிறது. என்ன பேசுகிறார்கள் என்று யாருக்கும் கேட்காது. ஆனால் தலைவர் பேசப் பேச, ப்ரொஃபஸர்கள் ஒவ்வொருத்தராக வியப்போடு எழுந்து நிற்கிறார்கள். இறுதியாக தலைவர் வெளியே வந்ததும், சுற்றியுள்ள அனைவரும், "என்ன கேட்டாங்க? நீங்க என்ன சொன்னீங்க?" என்று கேட்க, தலைவர், "உண்மைய சொன்னேன்..!! (I told them the truth)" என்று மந்தகாசச் சிரிப்பு சிரித்து விட்டுப் போகிறார். தலைவர் முதல் நாள் கல்லூரிக்குள் நுழையும் போது, தமிழ் மாணவர்கள் எல்லோரும் பூசணிக்காயில் ஆரத்தி எடுத்து, மாலை போட்டு வரவேற்கிறார்கள். தலைவர் ஒரு சிகரெட்டை ஸ்டைலாகப் போட்டு வாயில் பிடித்து, பிறகு அதை எடுத்து விட்டு, "No Smoking in public places" என்று சொல்லி நெஞ்சைத் தொடுகிறார். (அப்போது கர்நாடகா அரசு அத்தகைய தடை உத்தரவைப் பிறப்பித்திருந்தது.)

Summer Internship-க்கு அமெரிக்காவின் CIA நிறுவனம் தலைவரைக் கூட்டிப் போகிறது. ஒஸாமா பின்லாடனைப் பிடிக்க வேண்டிய வேலைக்காக.! தலைவரும் ஆஃப்கானிஸ்தான் கிளம்பிப் போகிறார். ஒஸாமா பின்லாடன், அண்ணாமலை வில்லன் போல "I am a bad man" என்று அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பவன். இரண்டு உயரமான மாணவர்கள் அருகருகே நிற்க அவன் ஒரு பேப்பர் ராக்கெட் விட்டு அவர்களைக் கீழே சாய்த்துத் தள்ளுவது போல் சிம்பாலிக்காக 9/11-ஐயும் காட்டினோம்.

இங்கே கமல் ரசிகர்கள் ஓரிருவரின் ஆசையைப் பூர்த்தி செய்யும் பொருட்டு பின் லாடனைச் சந்திக்கும் சூப்பர் ஸ்டார், "நீ நல்லவனா கெட்டவனா?" என்று கேட்டு அவனை ஒரே செண்ட்டியாக்கி அந்தக் களேபரத்தில் அமுக்கிப் பிடிப்பது போல் காட்சியமைப்பு.

கல்லூரியின் மாணவர் சங்கத் தேர்தல் நடக்கிறது. தலைவரைப் போட்டியிடுமாறு நாங்கள் எல்லோரும் வற்புறுத்த அவர் மறுத்து, "பணம், பதவி, பொண்ணு - இதையெல்லாம் நாம தேடிப் போகக் கூடாது, அது நம்மளைத் தேடி வரணும்." என்று அரசியல் மெஸ்ஸேஜ் கூட இருந்தது.

கடைசியில் படிப்பு முடித்து விட்டு, மீண்டும் கலைச் சேவை புரிய தமிழ்த் திரைப்படத் துறைக்கே மீண்டும் செல்கிறார். வடக்கத்திய மாணவர்களிடம் இந்நிகழ்ச்சிக்கு செம வரவேற்பு. அன்றைக்கு இசை நிகழ்ச்சியும் வைத்திருந்தோம். நான் இரண்டு தலைவர் பாடல்களைப் பாடினேன். ('ஆசை நூறு வகை' - நானும் பள்ளிப் பருவத்திலிருந்து மேடையில் பாடிக் கொண்டிருக்கிறேன், நான் மேடையில் பாடி இதுவரை மிகுந்த வரவேற்பைப் பெற்ற பாடல் இதுவே ஆகும், அப்புறம் 'காட்டுக் குயிலு மனசுக்குள்ளே'). நிகழ்ச்சி முடிந்து சிற்றுண்டி அருந்திய பிறகு இரவு 'பாட்ஷா' திரைப்படம் டிவி அறையில் காட்டப்பட்டது. இப்படியாக அன்றைய தினம் மிக திருப்திகரமாக இருந்தது.

முதல் ஆண்டு அமர்க்களப் படுத்தி விட்டதால், இரண்டாம் ஆண்டு பொங்கல் பண்டிகை நிகழ்ச்சிக்கு கல்லூரி மாணவர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு நிலவியது. இந்த முறையும் சூப்பர் ஸ்டார் தான் என்று முடிவாகி விட்டது. ஆனால் அவர் ஏற்கெனவே போன வருடம் படித்து முடித்து விட்டதால் அந்தக் கதை ஒத்து வராது. அப்போது நாங்கள் (இரண்டாம் வருட மாணவர்கள்) ப்ளேஸ்மெண்ட்டுக்காகக் காத்திருந்த நேரம். எல்லோரும் மெக்கின்ஸி (McKinsey), பிஸிஜி (BCG - Boston Consulting Group) என்று தூக்கத்தில் கூட முனகிக் கொண்டு திரிந்த காலம். தலைவர் படிப்பு முடித்து, சினிமாவும் பிடிக்காமல், இமயமலையும் போரடித்து பாபா கன்ஸல்டிங் க்ரூப் (BCG - Baba Consulting Group) என்ற பெயரில் ஒரு நிறுவனம் ஆரம்பித்து அதில் பணியாற்ற மாணவர்களைத் தேர்ந்தெடுக்க வருவது போல் கதையை அமைத்தோம். மீண்டும் கல்லூரியில் நடப்பதையும் தலைவர் படங்களையும் இணைத்து சில காட்சிகளை அமைத்தோம். அதுவும் மிக உற்சாகமாக வரவேற்கப் பட்டது.

எதிர்காலத்தில் சினிமாவுக்கு திரைக்கதை, வசனம் எழுத வேண்டுமென்று எனக்கு ஒரு பேராசை உண்டு. நான் எழுத வரும்போது தலைவர் நடித்துக் கொண்டிருப்பாரோ என்னமோ, அவருக்கு எழுத முடியுமோ என்னமோ. கல்லூரியில் அவர் தோன்றுவது போல் திரைக்கதை எழுதி அதை இயக்கி, தலைவருக்கு டப்பிங் குரலும் கொடுத்த திருப்தி இருக்கிறதே, அது மிக இனிமையான அனுபவம். இங்கே நான் விவரித்திருப்பதை விட பல நூறு மடங்கு திருப்தியளித்த அனுபவம்.
Old Commenting System: |

Very Old Commenting System:

After the sunset

நடிகர்கள்: Pierce Brosnan, Salma Hayek, Woody Harrelson, Naomie Harris
எழுதியவர்: Paul Zbyszewski
இயக்கம்: Bret Ratner

வழக்கமாக ஹெர் மெஜஸ்டியின் இரகசியப் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு, உலகின் அதி பயங்கர வில்லன்களிடமிருந்து எல்லோரையும் காப்பாற்றும் 'ஜேம்ஸ் பாண்ட்' Pierce Brosnan, இந்தப் படத்தில் சட்டத்திற்கு வெளியே வாழும் ஹை-டெக் திருடராக நடித்திருக்கிறார் என்று கேள்விப் பட்டதும் எனக்கு ஆர்வம் ஏற்பட்டது. அந்த ஆர்வத்தைக் குறைத்து விடாமல் படம் முழுக்க தீனி போட்டிருக்கிறார்கள். நல்ல பொழுதுபோக்கு திரைப்படம் பார்த்த திருப்தி.

மேக்ஸ், லோலா இருவரும் திருடர்களான காதலர்கள். (எல்லா காதலர்களுமே திருடர்கள் தான், அது வேறு விஷயம்!!). எஃப்.பி.ஐ. வசமிருந்து ஒரு வைரத்தை சாமர்த்தியமாகக் கொள்ளையடித்து விட்டு திருட்டுத் தொழிலுக்கு முழுக்குப் போட்டு விட்டு பாரடைஸ் தீவுக்கு வந்து விடுகிறார்கள். லோலாவுக்கு எல்லாவற்றையும் விட்டொழித்து விட்டு திருமணம் செய்து கொள்ள ஆசை. மேக்ஸ் இன்னும் முடிவு செய்யவில்லை. மேலும் அவனால் திருட்டை முழுமையாக விடவும் இயலவில்லை.

வைரத்தைப் பறி கொடுத்த எஃப்.பி.ஐ. ஏஜெண்ட் லாயிட், அவர்களைத் தொடர்ந்து தீவுக்கு வந்து சேருகிறார். அந்தத் தீவின் வழியாகச் செல்லும் சொகுசுக் கப்பல் ஒன்றில் 'நெப்போலியன் வைரம்' காட்சிப் பொருளாக வைக்கப்பட்டிருக்கிறது. 'அதை ஆட்டையைப் போடுவதற்குத் தான் இங்கே சுற்றிக் கொண்டிருக்கிறீர்கள், உங்களைப் பிடித்துக் காட்டுகிறேன் பார்' என்று லாயிட் வீர வசனம் பேசுகிறார். மேக்ஸ் அவரை ஒதுக்கித் தள்ளினாலும், தீவின் லோக்கல் 'பெரிய மனுஷன்' வைரத்தைத் திருடித் தருமாறு மேக்ஸிடம் கேட்கிறார். தொடர்ந்த சம்பவங்களும், ட்விஸ்ட் முடிவு வேண்டுமென்பதற்காகவே வலிந்து திணித்த முடிவுமே மிச்சப் படம்.

இதற்கு முன் ரஷ் ஹவர் (Rush Hour) படங்களை இயக்கிய Bret Ratner-ன் படம் என்பதால் நகைச்சுவைக்குப் பஞ்சமே இல்லை. அடித்து பட்டையைக் கிளப்புகிறார்கள் அனைவரும். குறிப்பாக மேக்ஸ்-லாயிட் இடையேயான காட்சிகளும் வசனங்களும் படத்தின் குறிப்பிடத்தகுந்த அம்சங்கள்.

ஆரம்பக் காட்சியிலேயே அசத்தி விடுகிறார்கள். கூடைப் பந்தாட்ட மைதானத்திலிருந்த படியே எஃப்.பி.ஐ. காரை கடத்திக் கொண்டுவந்து, வைரத்தைத் திருடி ஆரம்பிக்கும் அளப்பரை, இறுதி வரை தொடர்கிறது.

மழுமழுவென்ற ஜேம்ஸ் பாண்ட் தோற்றத்துக்கு மாற்றம் தர வேண்டி, படம் முழுக்க இரண்டு நாள் தாடியுடன், நரைத்த மயிருடன் வலம் வருகிறார் Pierce Brosnan. நல்ல casual தோற்றம், கேரக்டருக்கு வலு சேர்க்கிறது. 'Dry sense of humour' என்று சொல்வார்களே, அது மனிதருக்கு தண்ணி பட்ட பாடு.

Salma Hayek-க்கு அதிகமாக வேலை இல்லை. அவர் வரும் காட்சிகளில் முகத்தைப் பார்க்க விடாமல் இம்சிக்கின்றன அவரது உடைகள். படம் முழுக்க வெவ்வேறு accent-களில் பேசுவது குழப்பமாக இருக்கிறது.

எஃப்.பி.ஐ. ஏஜெண்ட் லாயிட்டாக வரும் Woody Harrelson கலக்கியிருக்கிறார். அநாயாசமாக நகைச்சுவை வருகிறது இவருக்கு. தீவின் லோக்கல் பெண் போலீஸ் அதிகாரியிடம் வழியும் போதும், மேக்ஸோடு மீன் பிடிக்கச் செல்லும் காட்சியிலும் ரசிக்க வைக்கிறார்.

முடிவு மட்டும் சற்று சோகையாக இருக்கிரது. அதையும் நகைச்சுவையாக மாற்றியிருப்பது நன்றாக இருக்கிறது..

இரண்டு மணி நேரங்களை சுவாரஸ்யமாகக் கழிக்கத் தோதான, ஜாலியான திரைப்படம்.
Old Commenting System: |

Very Old Commenting System:

ஆறு

நடிகர்கள்: சூர்யா, த்ரிஷா, ஆஷிஷ் வித்யார்த்தி, வடிவேலு, டெல்லி கணேஷ்
இசை: ஸ்ரீகாந்த் தேவா
இயக்கம்: ஹரி

சரண் தயாரிப்பு, ஹரி இயக்கம், சூர்யா நடிப்பு என்ற சுவாரஸ்யமான கூட்டணியிலிருந்து இப்படியொரு தொம்மையான படமா என்று பலமான அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது 'ஆறு'. முதல் அரை மணி நேரத்தைத் தாங்கிக் கொண்டு மிச்சப் படத்தைப் பார்க்க உத்தேசிக்கும் பார்வையாளர்கள் மிகப் பெரும் பொறுமைசாலிகளாக இருக்க வேண்டியது மிக அவசியம். வெகுவாக சோதிக்கிறது படத்தின் ஆரம்பம்.

"அடியாள் கதை" என்று சொல்கிற gangster movie எடுக்க ஆசைப்பட்டிருக்கிறார்கள். ஆனால் வரிக்கு வரி கெட்ட வார்த்தை பேசுவதாலேயோ அல்லது சத்தமாகக் கூச்சல் போட்டு விடுவதாலேயோ மட்டும் எவனும் 'macho' ஆக முடியாது என்ற அடிப்படையை யாருமே புரிந்து கொள்ளவில்லை. கம்பெனி (Company) என்ற இந்தித் திரைப்படத்தில் அஜய் தேவ்கன், தன் பார்வையை இந்தப் பக்கமிருந்து அந்தப் பக்கம் திருப்பும் தோரணையிலேயே நடுங்க வைப்பார். அவர் அசல் ganster. சும்மா இவர்களைப் போல் சவுண்டு விட்டுக் கொண்டிருப்பவர்கள் வெத்து வேட்டு.

'நாதன் & கோ' என்ற பெயரில் நான்கு சகோதரர்கள் சென்னையின் பிரபல தாதாக்கள். அவர்களிடம் விசுவாசமான அடியாளாக இருக்கிறார் சூர்யா. ஒரு கட்டத்தில் அவர்களால் ஏமாற்றப்படுகிறார். அவர்களை பழிக்குப் பழி வாங்கும் டொச்சுத்தனமான கண்றாவிக் கதை. இந்தக் கதையை தன் குருநாதர் சரணுக்குச் சொன்ன ஹரியை நொந்து கொள்வதா, தயாரிக்க முன்வந்த சரணை நொந்து கொள்வதா, நடிக்க ஒப்புக் கொண்ட சூர்யாவை நொந்து கொள்வதா, அடப் போங்கடா டேய்.

மிஸ்டர் சூர்யா, இந்த மாதிரி படம் முழுக்க ஒண்ணுமே செய்யாமல் வந்து போய், பட எண்ணிக்கையை ஒன்று உயர்த்திக் கொள்ள இண்டஸ்ட்ரியில விஜய் மாதிரி ஹீரோக்கள் இருக்கிறார்கள் சார். உங்களுக்கு ஏன் இந்த விபரீத ஆசை? உங்க கிட்ட நாங்க எதிர்பார்க்கிறது டோட்டலா வேற சார். புரிஞ்சுக்கோங்க ப்ளீஸ். ஆக்ஷன் படங்களைக் கூட உங்களால வித்தியாசமாகத் தேர்ந்தெடுத்துப் பண்ன முடியும்ங்கிற எங்க நம்பிக்கையில் மண்ணள்ளிப் போட்டுராதீங்கப்பு.

பொதுவாக எனக்கு ரொம்ப ஒல்லியான கதாநாயகிகளைப் பிடிக்காது. அதைக் கூட கொஞ்சம் பொறுத்துக் கொள்ளலாம். இந்தப் படத்தில த்ரிஷா, ஒல்லி என்பதையும் தாண்டி எலும்பும் தோலுமாய் இருக்கிறார். அவுட்டோர் போன இடத்தில் எதுவுமே சாப்பிடாமல் பத்து நாள் பட்டினி கிடந்த மாதிரி. என்ன கொடுமையோ இதெல்லாம்.

பாராட்டத்தக்க நடிப்பு என்று குறிப்பிட்டுச் சொல்லும்படியாக யாருமே இல்லை. எல்லோரும் கடனே என்று வந்து போகிறார்கள்.

முதல் அறிமுகப் பாடலில் தான் கானா கிங் தேவாவின் வாரிசு என்பதை நிரூபிக்கிறார் ஸ்ரீகாந்த் தேவா. பிறகு அவரும் காணாமல் போய் விடுகிறார்.

கொஞ்சமும் நாகரிகமில்லாத காட்சிகளும் படத்தில் வசனங்களும் நிறைந்திருக்கின்றன. நெளிந்து கொண்டே பார்க்க வேண்டியிருக்கிறது. 'ஏ' சர்ட்டிஃபிகேட் மிகப் பொருத்தம்.

காமெடி டிராக் என்ற பெயரில் வடிவேலு ரொம்பவே டார்ச்சர் செய்து விட்டார். அது தனிக் கொடுமை.

படத்தின் கடைசி பத்து நிமிடங்கள் நான் தியேட்டரில் தூங்கியே விட்டேன். ஆனால் படம் முடிந்து வீடு வந்து சேர்ந்த பிறகு, 'ஏண்டா இந்தப் படத்திற்குப் போய்த் தொலைச்சோம்?' என்று இரவு முழுக்க எனக்குத் தூக்கமே வரவில்லை.

கஜினியில் சூர்யாவுக்குக் கிடைத்த நல்ல பெயரையெல்லாம் அதல பாதாளத்தில் ஆழக் குழி தோண்டிப் புதைத்து விடுகிறது 'ஆறு'. பரிதாபம்.
Old Commenting System: |

Very Old Commenting System: