தவமாய் தவமிருந்து

நடிகர்கள்: ராஜ்கிரண், சரண்யா, சேரன், பத்மபிரியா
இசை: சபேஷ்-முரளி
இயக்கம்: சேரன்

தமிழ் சினிமா என்ற சீக்காளிக்கு அவ்வப்போது தனது திரைப்படங்களின் மூலம் இரத்த தானம் அளித்து உயிரோடு நீடிக்க வைத்துக் கொண்டிருந்த சேரன், தன் 'தவமாய் தவமிருந்து' திரைப்படத்தின் மூலம் ஒரு அறுவைச் சிகிச்சை செய்து வெற்றிகரமாக நிமிர்ந்து உட்கார வைத்திருக்கிறார்.

பிள்ளைகள், தங்கள் இருபத்தைந்து வயது வரை வாழ்ந்து உயர தகப்பன்கள் அமைத்துக் கொடுக்கும் அடித்தளம் பற்றிய கதை என்று ஆரம்பத்திலேயே சொல்லி விடுகிறார். கதையில் புதுமை இல்லையென்றாலும் கதையின் யதார்த்தம், தமிழ் சினிமா அரிதாகக் கண்டிருக்கும் புதுமை.

படத்தைத் 'திரையில் ஒரு நாவல்' என்று பொருத்தமாகச் சொல்வது போல், தகப்பனாக வாழ்ந்து காட்டியிருக்கும் ராஜ்கிரணை, 'நடிப்பில் ஒரு இமயம்' என்று தயங்காமல் சொல்லலாம். மலைக்க வைக்கும் இவரது நடிப்பின் முன் பிறர் காணாமல் போகின்றனர். தீபாவளிப் பண்டிகையின் போது பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தரப் பணம் சேர்க்கும் பொருட்டு இரவெல்லாம் போஸ்டர் ஒட்டி, காலையில் வீடு திரும்பி களைத்துப் படுத்திருக்கிறார். அப்போது புத்தாடை உடுத்தின பிள்ளைகள், கேப் வெடிக்கும் துப்பாக்கியுடன் வந்து அவர் மேல் ஏறி விளையாடும் போது களைப்புடன் கண்விழித்து, "டிரஸ் பிடிச்சிருக்கா? வெடி வெடிக்கிறீங்களா?" என்று கேட்டு பூரிப்புடன் மீண்டும் கண் மூடும் காட்சியின் மகத்துவம் சொல்லில் அடங்காதது.வட்டிக்குப் பணம் வாங்கத் தவிக்கும் காட்சியிலும் முத்திரை பதிக்கிறது இவரது நடிப்பு. இந்த ஆண்டில் மட்டுமில்லாது கடந்த சில ஆண்டுகால தமிழ் சினிமாவின் பண்பட்ட நடிப்பு. அட்டகாசம். இவரைப் போய் 'மாணிக்கம்' போன்ற திரைப்படங்களில் வெட்டி ஹீரோயிஸம் பண்ண வைத்துக் கொண்டிருந்த தமிழ் சினிமாவை எங்கே போய் நொந்து கொள்வதோ?

தந்தையின் கதை என்று பரவலாக அறியப்பட்டாலும், தாயாக நடிக்கும் சரண்யா, அங்கங்கு தனது இருப்பை வலிமையாக உணர்த்தியபடி இருக்கிறார். கணவனின் அதிகாரம் அல்லது அனுபவம், மூத்த மருமகளால் கேள்விக்குள்ளாக்கப்படும் போது கோபத்தில் வெடிக்கும் போதும், மனம் திருந்தி வந்த சேரனைக் கண்டு கதவை அறைந்து சாத்தும் போதும் ஜொலிக்கிறார்.

கல்லூரி மாணவிக்குரிய குறுகுறுப்பு, இளம் மருமகளுக்குரிய பக்குவம், தாய்மைக்குரிய கண்ணியம் என்று அத்தனையும் பொருத்தமாகக் கூடி வந்து, எந்தக் குறைபாடும் இல்லாத நிறைவான பங்களிப்பைச் செய்திருக்கிறார் பத்மபிரியா. பார்க்கவும் அழகாக இருக்கிறார். நடிப்பிலும் சில காட்சிகளில் சீனியர்களை விஞ்சி நிற்கிறார். அருமையான புது வரவு.

பிரிண்டிங் ப்ரெஸ் உதவியாளர் இளவரசு, மூத்த மகன், மூத்த மருமகள் என அனைவரும் சிறப்பாகப் பங்களித்திருக்கும் திரைப்படத்தில் நடிப்பு விஷயத்தில் குறை வைப்பது சேரன் மட்டுமே. குரலும் பொருந்தாலும், முகபாவங்களும் சரிவரக் கைவராமல் சேரன் அநேகக் காட்சிகளில் கஷ்டப்படுத்தி விடுகிறார். ஆட்டோகிராஃப் வெற்றிக்குப் பிறகு சேரனின் இயக்கத்தில் நடிக்க சில/பல நடிகர்கள் முன்வந்திருப்பார்கள் என்பதே எனது அனுமானம். அவர்களில் யாரையேனும் பயன்படுத்தி, இயக்கத்தில் மட்டுமே கவனம் செலுத்தியிருக்கலாம் சேரன்.

பாத்திரப் படைப்புகளின் யதார்த்தமும் நிதர்சனமும் ஒன்றையொன்று விஞ்சுகின்றன. குறிப்பாக மூத்த மகனின் கதாபாத்திரம். அப்பாவின் மீதான பாசமும் விலகாமல், மனைவியின் மேலான பிரியமும் கலந்து, இளமையின் விறைப்புடன் கூட்டணி சேரும் குழப்பமான மனநிலையைத் தெளிவாகப் படம் பிடிக்கின்றன அத்தனை காட்சிகளும்.

உரையாடல்கள் வாழ்க்கைக்கு மிக நெருங்கிய விதத்தில் பொருந்தி நிற்கின்றன. குறிப்பாக சரண்யா பேசுகின்ற அத்தனை வசனங்களுமே. 'அப்பா எது சொன்னாலும் நல்லா யோசிச்சு உன் நல்லதுக்காகத் தான்ப்பா சொல்வேன்' போன்ற வசனங்கள், ஒவ்வொருவரும் பல தருணங்களில் கேட்டிருக்கக் கூடிய வசனங்களே. கண்டிப்பாக நான் நிறைய கேட்டிருக்கிறேன்.

பாடல்களைப் பற்றிப் பெரிதாக சொல்லுமளவிற்கு எதுவுமில்லை என்றாலும் உறுத்தாமல் கதையோடு கலந்து நிற்கின்றன. அது கதையின் பலமே தவிர வேறொன்றுமில்லை.

கல்லூரிக் காலத்திலும் அதற்குப் பிறகு வேலைக்குப் போய் சம்பாதிக்கத் துவங்கிய பிறகும், நான் என் அப்பாவிடம் சில பொய்கள் சொல்லியிருக்கிறேன். அவர் மனம் வருந்தும் படி சில காரியங்கள் செய்திருக்கிறேன். அவற்றைக் குறித்த தீவிரமான வெட்கத்தையும் பதற்றத்தையும் எனக்குள்ளே ஏற்படுத்தியது இந்தப் படம். அந்த வகையில், தனிப்பட்ட முறையில் எனக்கு இது வெறும் படம் அல்ல, பாடம்.

எனக்குத் திருமணமாகிக் குழந்தைகள் பிறந்து நான் தந்தையான பிறகு இந்தப் படத்தின் இன்னும் பல பரிமாணங்களை நான் உணர்வேன் என்று உறுதியாக நம்புகிறேன்.

தமிழ் சினிமாவின் வெளிச்சமான எதிர்காலத்துக்கான தீப்பந்தம், சேரனின் கையில் இருக்கிறது. அந்த நெருப்பை அணையாமல் போற்றிப் பாதுகாக்க வேன்டிய பொறுப்பு தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இருக்கிறது.

5 Comments:

Blogger Jagan said...

//எனக்குத் திருமணமாகிக் குழந்தைகள் பிறந்து நான் தந்தையான பிறகு இந்தப் படத்தின் இன்னும் பல பரிமாணங்களை நான் உணர்வேன் என்று உறுதியாக நம்புகிறேன்.
//

excellent well said meenaks.

1:40 AM  
Blogger கொங்கு ராசா said...

//கல்லூரிக் காலத்திலும் அதற்குப் பிறகு வேலைக்குப் போய் சம்பாதிக்கத் துவங்கிய பிறகும், நான் என் அப்பாவிடம் சில பொய்கள் சொல்லியிருக்கிறேன். அவர் மனம் வருந்தும் படி சில காரியங்கள் செய்திருக்கிறேன். அவற்றைக் குறித்த தீவிரமான வெட்கத்தையும் பதற்றத்தையும் எனக்குள்ளே ஏற்படுத்தியது இந்தப் படம். அந்த வகையில், தனிப்பட்ட முறையில் எனக்கு இது வெறும் படம் அல்ல, பாடம். //
இதையேதாங்க எப்படி சொல்றதுன்னு தெரியாம இந்த படத்தை பத்தி இன்னும் எழுதாம தள்ளிப்போட்டுகிட்டே வந்தேன்.. நீங்க சரியா சொல்லிட்டீங்க.. அதுவும் எங்கய்யன பக்கத்துலயே வச்சுகிட்டு படம் பார்த்தப்ப ஒரு அவஸ்தை பட்டேன் பாருங்க. ம்.. அத எப்படி சொல்றதுன்னு தெரியலை.. ;-)

2:33 AM  
Blogger சிங். செயகுமார். said...

"குரலும் பொருந்தாலும், முகபாவங்களும் சரிவரக் கைவராமல் சேரன் அநேகக் காட்சிகளில் கஷ்டப்படுத்தி விடுகிறார். ஆட்டோகிராஃப் வெற்றிக்குப் பிறகு சேரனின் இயக்கத்தில் நடிக்க சில/பல நடிகர்கள் முன்வந்திருப்பார்கள் என்பதே எனது அனுமானம். அவர்களில் யாரையேனும் பயன்படுத்தி, இயக்கத்தில் மட்டுமே கவனம் செலுத்தியிருக்கலாம் சேரன்"

யாரேனும் புதியவரை அறிமுகம் செய்திருக்கலாம்!

2:59 AM  
Blogger icarus prakash said...

இன்னாடா இது... இன்னும் ஆளைக் காணோமேன்னு நினைச்சிட்டு இருந்தேன்...

3:04 AM  
Anonymous Anonymous said...

very nice film

4:06 AM  

Post a Comment

<< Home

Old Commenting System: |

Very Old Commenting System: