புதுப்பேட்டை

நடிகர்கள்: தனுஷ், சிநேகா, சோனியா அகர்வால்
இசை: யுவன் ஷங்கர் ராஜா
இயக்கம்: செல்வராகவன்

புதுப்பேட்டை - Survival of the Fittest. படத்தின் முதல் பாதியில் 'மாநகராட்சிப் பள்ளியில சந்தோஷமாப் பட்ச்சிக்கினிருந்த கொக்கி குமாரு' எப்படி ஒரு fittest தாதாவாக உருமாறுகிறான் என்பதைப் பிரமாதமாக, யதார்த்தமாகச் சொல்லியிருக்கும் செல்வராகவன், படத்தின் இரண்டாம் பாதியில் அவன் அரசியல் ஆசைகளுடன் அந்தக் களத்தின் எப்படி survive ஆகிறான் என்பதைச் சொல்வதில் போட்டு சொதப்பி எடுத்திருக்கிறார். அதிக எதிர்பார்ப்புகளுக்கும் தனுஷின் மறு எழுச்சிக்கும் ஆப்பு வைக்கும் விதமாக இருக்கிறது படம்.

படத்தின் நிறைகளில் முதலிடம் வகிப்பது யதார்த்தமான பின்னணியும் அதற்கேற்ற வசனங்களும். ஒவ்வொரு கட்டமாக தனுஷ் குற்றங்களில் நிபுணத்துவம் பெறுவது - கஞ்சாப் பொட்டலங்களைக் கைமாற்றுவது, முதல் 'கையெடுக்கும்' அஸைன்மெண்ட் - இப்படி ஒவ்வொன்றாக அவர் முன்னேறி ஒரு கட்டத்தில் தன்னை வளர்த்துவிட்ட தாதா அன்புவைப் போட்டுத் தள்ளி அவரது தலையோடு வெளியேறித் தன்னை establish செய்து கொள்வது வரை பட்டையைக் கிளப்புகிறது. தனுஷ் ரொம்பவே உயிரைக் கொடுத்து நடித்திருப்பது என்னவோ உண்மை தான். எதிர் கோஷ்டியிடம் கடுமையாக அடி வாங்கிய பிறகு அவர் உயிர்ப்போடு ஒரு அடி திருப்பி அடிக்கும் காட்சியில் தியேட்டரில் கைதட்டல்களுக்குப் பஞ்சமில்லை. தன் தாயைப் பற்றிக் கண்கலங்கிப் பேசும் காட்சிகளிலும் உயிர்ப்போடு செய்திருக்கிறார்.

படத்தின் நிறைகளில் அடுத்தபடியாக சொல்ல வேண்டியது யுவன் ஷங்கர் ராஜாவின் இசையும், சில பாடல்களின் சுவையான படமாக்கலும். பின்னணி இசையிலும் யுவன் ஒரு 'இளைய' ராஜா என்று இந்தப் படத்தில் சொல்ல வைத்திருக்கிறார். நெருப்பு வாயினில் பாடலில், மகாபாரதப் போர் ரேஞ்சுக்கு தனுஷும் அவரைக் கொல்ல வருபவர்களும் கத்தியை சுழற்றிக் கொள்வது மட்டும் பொருந்தாமல் இருக்கிறது.

படத்தின் நிறைகளில் அடுத்து சொல்லக் கூடியது அரவிந்த் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவும், காட்சிகளைக் கத்திரி போட்டு ஒட்டிச் சேர்த்த விதமும். சில காட்சிகளின் முடிவைக் கண நேரம் கண்முன்னால் காட்டி மாற்றி விடும் அதே கத்திரி, சில காட்சிகளின் முடிவில் கொஞ்ச நேரம் தயங்கிப் பார்வையாளனின் கண் வழியே உள்ளத்திற்கும் புகுத்தி விட்டே அடுத்த காட்சிக்கு நகர்கிறது.

படத்தின் மிகப் பெரிய சறுக்கல், சோனியா அகர்வாலின் கதாபாத்திரமும், தனுஷ் அவர் மீது ஆசை கொண்டு செய்து கொள்ளும் திருமணமும். சோனியா அகர்வால் பாத்திரம் இல்லாமல், தனுஷின் அரசியல் ஆசைகளை மட்டுமே கொண்டு சென்று படத்தில் இதே முடிவை எட்டியிருக்க முடியும். செல்வராகவன் உச்சகட்டமாய்ச் சொதப்பியிருப்பது இந்த மண்டை காய வைக்கும் காட்சிகளையே.

சிநேகா ஒரு பாலியல் தொழிலாளியாக இருப்பினும் தனுஷ் அவர் மீது பெரிதாய் காதல் மாதிரி ஏதோ ஒன்று ஏற்பட்டதாலேயே சேர்கிறார் என்பது போல் முதல் பாதியில் காட்சிகள் பில்டப் செய்கின்றன. ஆனால் சோனியாவுடன் முதலிரவு முடிந்த பிறகு தனுஷ், பெண்ணோடு சேர்வதில் உள்ள சுகத்தையும், மன அமைதியையும் பற்றி தனது ஆட்களிடம் நீளமாய் லெக்சர் அடிக்கும் போது, இதையெல்லாம் அவர் சிநேகாவிடம் உணரவேயில்லையா என்ற சந்தேகம் எழுந்து, அவர்களது உறவின் foundation கடுமையாக ஆட்டம் காண்கிறது.

தனுஷின் அரசியல் ஆசைகள் மூலம் இன்றைய அரசியல் சூழலை நுட்பமாக நையாண்டி செய்யும் நிறைந்த காட்சிகள் இல்லாமல் இல்லை. (முதலில் இருக்கும் கட்சியில் உரசல் வந்த பிறகு, தனுஷைத் தங்கள் கட்சியில் இணைந்து கொள்ள பல கட்சிக் காரர்கள் வருகிறார்கள். அதில் ஒரு கட்சியின் பெயர் 'வா.வா.போ.') But Selvaragavan takes a long time to come to his point. அதை மட்டும் தவிர்த்திருந்து, இரண்டாம் பாதியில் இன்னும் கொஞ்சம் வேகத்தைக் கூட்டியிருந்தால் மிக சிலாகிக்கத்தக்க படமாக புதுப்பேட்டை அமைந்திருக்கும்.

பேட்டை மட்டுமே இருக்கிறது. 'புது' missing.
Old Commenting System: |

Very Old Commenting System:

Munich

நடிகர்கள்: Eric Bana, Geoffrey Rush, Ayelet Zurer
திரைக்கதை, வசனம்: Tony Kushner and Eric Roth
இயக்கம்: Steven Spielberg

இந்த மாதிரி படங்களெல்லாம் தமிழில் வராதா என்று ஏங்க வைப்பதே அண்ணன் ஸ்பீலுக்கு அண்மைக்காலத்தில் பொழைப்பாப் போச்சு. அந்த வரிசையில் வந்திருக்கும் இன்னொரு படம் தான் Munich.

முனிக் ஒலிம்பிக் விளையாட்டுகளில் பங்குபெற வந்திருக்கும் இஸ்ரேலிய விளையாட்டு வீரர்களை பாலஸ்தீன விடுதலை இயக்கத்தினர் கடத்திச் சென்று விமான நிலையத்தில் சுட்டுக் கொல்லும் நிகழ்வில் படம் துவங்குகிறது. பழிக்குப் பழி வாங்க இஸ்ரேல் பெண் பிரதமர் உளவு நிறுவனமான Mossad-க்கு உத்தரவிடுகிறார். முனிக் பயங்கரத்துக்குக் காரணமான பாலஸ்தீனியர்களை ஒவ்வொருவராக தேடிப் பிடித்து அழிக்கும் பணிக்கு ஒரு சிறப்புக் குழு தேர்ந்தெடுக்கப்படுகிறது. அதன் தலைவராக நியமிக்கப் படுகிறார் இளம் ஏஜெண்ட் Eric Bana. அவரது மனைவி, பிரசவத்திற்குக் காத்திருக்கும் தருணத்தில் நாட்டுக்காக அவரைப் பிரிந்து செல்கிறார் Bana. கொஞ்சமும் விறுவிறுப்புக் குறையாமல், அரபு-பாலஸ்தீன-இஸ்ரேலிய சித்தாந்த மாறுபாடுகளை சார்பு காட்டாமல் விவாதித்துக் கொண்டே ராக்கெட் வேகத்தில் சீறிப் பாய்ந்து பயணிக்கிறது படம்.

ஒவ்வொரு ஆளாகத் தேடிக் கண்டுபிடித்து, திட்டமிட்டு assassinate செய்யும் காட்சிகளின் தொழில்நுட்ப நேர்த்தியும், பிரம்மாண்டமும், பிண்ணனி உழைப்பும் பிரமிக்க வைக்கின்றன. ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு விதமான வெடிகுண்டு தயார் செய்து, ஐவர் குழுவானது மூன்றாகப் பிரிந்து, ஒருவர் கவனித்து சமிக்ஞை தர, இன்னொருவர் வெடிகுண்டை இயக்க, கடைசியாய் ஒருவர் குற்றச் சம்பவ இடத்திலிருந்து தங்களை incriminate செய்யக் கூடிய தடயங்களை அழித்து வர என்று பட்டையைக் கிளப்புகிறார்கள். கடைசி நிமிட மாறுதல்கள், திடீர்த் திருப்பங்கள் என்று இயல்பான திகிலூட்டும் காட்சிகள் படத்துக்கு வேகம் கூட்டுகின்றன. Frederick Forsyth நாவல்களில் எப்போதும் உலகின் மிகச் சிற்ந்த உளவு நிறுவனமாக Mossad குறிப்பிடப்பட்டிருக்கும். அதை நிரூபிப்பது போல் அவர்களின் திட்டமிடுதலும் நிறைவேற்றுதலும் இருநதன.

புகைப்படத்தை மட்டும் வைத்து ஆள் யார், எங்கே இருப்பார், என்ன பழக்க வழக்கம் என்று அறிந்து சொல்லும் நபரும் அவரது பின்னணியும் ஒரு சுவாரஸ்யமான கிளைக்கதை. ஒரு கட்டத்தில் Eric Banaவிடம் வந்து அவரது புகைப்படங்களைக் காட்டி, யாரோ கொலை செய்யும் நோக்கத்துடன் அவரைப் பற்றி விசாரிப்பதை குறிப்பால் உணர்த்தி பயங்கரத்தின் பின்னணியை உணர வைக்கும் காட்சி மிக நேர்த்தியானது.

ஐரோப்பாவில் மட்டுமே தங்கள் "வேட்டையாடு விளையாடு" வேலையை வைத்துக் கொள்ள வேண்டுமென்று அறிவுறுத்தப்பட்டிருந்தாலும், முக்கிய எதிராளியைப் பற்றிய தகவல் கிடைத்ததும், அவரைக் கொல்ல லெபனானுக்குத் தாங்களே செல்வதாக சண்டையிட்டு மேலதிகாரியை சம்மதிக்க வைக்கும் காட்சி, ஒரு கட்டத்தில் கொலையில் இவர்களுக்கு ஒரு வெறித்தனமான கிறக்கம் ஏற்பட்டு விடுவதை எடுத்துணர்த்துகிறது. சிறப்ப்க் குழுவைச் சேர்ந்த ஐந்து பேரும் சுற்றி அமர்ந்து சாப்பிடும் போதே ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வது, சின்னச் சின்ன சண்டைகளைப் போட்டுக் கொண்டே காரியங்களை முடிப்பது, என கதாபாத்திர வளர்ச்சியும் முன்நகர்தலும் மிக இயல்பாக அமைகின்றன.

Assassinகளுக்கேயுரிய சலனமற்ற பார்வைகளும், ஸ்டைல் மிகுந்த நடவடிக்கைகளுடனும் மிக அருமையாக தன்னை வெளிப்படுத்தியிருக்கிறார் Eric Bana. "Troy" படத்திலேயே மூத்த இளவரசனாக வந்து ஹெர்குலிஸால் கொல்லப்படும் பாத்திரமாக மிளிர்ந்திருப்பார். அதை இந்தப் படத்திலும் தொடர்கிறார். தன் குழந்தையின் முதல் பேச்சைத் தொலைபேசி மூலம் கேட்டு உணர்ச்சி வசப்பட்டு அழுவது மிக நெகிழ்வைத் தரும் காட்சி.

ஹாலந்து நாட்டை சேர்ந்த கொலையாளிப் பெண்ணின் நடிப்பும், flirting பார்வைகளும் அட்டகாசம். அநியாயமாய்ச் செத்துப் போவதும் பரிதாபம்.

இறுதியில், கண்ணுக்குக் கண் எடுத்துக் கொண்டிருந்தால் உலகம் முழுவதும் குருடர்களே நிரம்பியிருப்பார்கள் என்ற தத்துவம் புரிந்து, இவற்றிலிருந்து விலகியிருக்க Eric Bana முடிவு செய்வதும், அந்த முடிவின் அழுத்தம் அவரைப் பின் தொடர்வதும் ரசமான கட்டங்கள். குழந்தையைத் தூக்கிக் கொண்டு நடைப்பயிற்சிக்கு வந்தவர், தங்களைக் கொல்ல யாரேனும் காரில் காத்திருக்கிறார்களோ என்று பதறித் தவிப்பது திகில் நேரம்.

இயல்பான நகைச்சுவை மிளிரும் வசனங்கள், பிரச்சாரத் தொனி இல்லாத திரைக்கதை, அட்டகாசமான நடிப்பு, எல்லாவற்றையும் ஒருங்கிணைத்த ஸ்பீல் அண்ணாத்தேவின் இயக்கம் என்று வெகுவாக என்னைக் கவர்ந்தது திரைப்படம். அவசியம் பார்க்கலாம்.
Old Commenting System: |

Very Old Commenting System:

Ice Age 2 - The Meltdown

சிறிசும் பெரிசுமாய் நாலு கதாபாத்திரங்களை வைத்துக் கொண்டு என்னமாய் பட்டையைக் கிளப்புகிறார்கள் ஹாலிவுட்டில்? தானே உலகின் கடைசி mammoth என்ற வருத்தத்தில் இருக்கும் Manny, தன்னை யாரும் மதிப்பதில்லை என்ற வருத்தத்தில் இருக்கும் Syd, இவர்களின் உற்ற நண்பனான Diego என்ற புலி ஆகிய மூவர் குழு, அவர்களைச் சார்ந்த பிற மிருகங்களுடன் உறைபனிக்காலத்தின் கடைசி தினங்களில் தாம் வாழும் பள்ளத்தாக்கை விட்டு வேறு பாதுகாப்பான இடத்திற்கு புலம் பெயர்கின்றனர். அவர்கள் சந்திக்கும் அனுபவங்களே திரைப்படத்தின் மையக் கரு. தவிர, தனக்கு விருப்பமான பழத்தை விண்ணைக் கடந்தும் மண்ணைக் குடைந்தும் கூட எப்பாடுபட்டேனும் அடைந்து விடும் Scrat என்ற அணிலும் தனி டிராக்கில் கலக்குகிறது.

புலம்பெயர்கையில் Ellie என்ற இன்னொரு mammoth இவர்களின் கண்களில் படுகிறது. அதுவோ, சிறுவயதில் தனது கூட்டத்திலிருந்து காணாமல் போய், possum என்ற சிறிய மிருகங்களுடன் வளர்வதால் தன்னையும் possum என்று நினைத்துக் கொண்டிருக்கிறது. அது அடிக்கும் லூட்டிகளும், அதனை mammoth என்று நிரூபிக்க Manny செய்யும் முயற்சிகளை நம்பாமல் நக்கல் பேச்சு பேசுவதும் அட்டகாசம்.

Ellieயின் 'தம்பி'களான இரண்டு possumகள் செய்யும் அட்டகாசங்கள் எவரையும் ரசிக்க வைக்கும். நடுநடுவே Manny தனது ஹீரோயிஸத்தைக் காண்பிக்க ஏதுவாய் முதலைகளின் தாக்குதலும் உண்டு.

படத்தில் Animation and Special effects நம்மை வெகுவாகக் கவர்கிறது. சென்னையின் கோடைக்கு இதமாய் பனிக்கட்டிகளைப் பார்த்துக் கொன்டே இருக்கலாம் போல இருக்கிறது. ஒன்றிரண்டு காட்சிகளில் அப்படியே பனிக்கட்டி உலகிற்குள் நாம் வசிப்பது போல் தத்ரூபம்.

ஒரு கட்டத்தில் சின்னஞ்சிறிய காட்டு மிருகக் கூட்டத்தினரால் Syd கடத்திச் செல்லப்பட்டு, 'நெருப்புக் கடவுள்' என்று வழிபடப்படுகிறது. அந்தச் சமயத்தில் அருமையான இசை மற்றும் நடனத்திற்கு கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளாமல் இருப்பது ஏமாற்றம் அளிக்கிறது. இதைப் போன்ற கட்டத்தில் Madagascar என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற இசை நடனம் மிக அருமையாக இருந்தது.

படம் முழுக்க ரசித்துச் சிரித்துக் கொன்டே இருக்கலாம். உங்கள் இல்லத்தில் இருக்கும் குழந்தைகளுக்கும், உங்கள் உள்ளத்தில் இருக்கும் குழந்தைக்கும் ஏற்ற அருமையான திரைப்படம்.
Old Commenting System: |

Very Old Commenting System: