வல்லவன்

நடிகர்கள்: சிம்பு, நயன்தாரா, ரீமா சென், சந்தியா
இசை: யுவன் ஷங்கர் ராஜா
இயக்கம்: சிம்பு

பள்ளிப் பருவத்திலும் கல்லூரிப் பருவத்திலும் ஏற்படும் காதல் மற்றும் நட்பு; ஒரு நாயகன், மூன்று நாயகியர் என்று சேரன் ஸ்டைலில் இன்னொரு ஆட்டோகிராஃப் படைக்க முனைந்து விட்டாரோ சிம்பு என்று சற்று நேரம் பார்வையாளர்களை குழம்பச் செய்கின்றன வல்லவன் திரைப்படத்தின் போஸ்டர்கள் மற்றும் ஏனைய பில்டப்கள். ஆனாலும் திரைப்படம் துவங்கிய சிறிது நேரத்திலேயே, தனக்கும் அது போன்ற முயற்சிகளுக்கும் ரொம்ப தூரம் என்று தெளிவுபடுத்தி விடுகிறார் இயக்குனர்/நடிகர் சிம்பு.

தன்னை ரஜினியாக பாவித்துக் கொண்டும் சித்தரித்துக் கொண்டும் சிம்பு சுய விளம்பரம் செய்து கொள்ளும் காட்சிகளுக்கு நடுவே கதை என்ற ஒன்று கொஞ்சம் இருக்கிறது. அது அவ்வப்போது மட்டுமே எட்டிப் பார்க்கிறது. அறிமுகப் பாடல் காட்சியில் சிம்புவின் முகம், ரஜினியின் முகமாக மார்ஃபிங்கில் மாறுவதெல்லாம் ரொம்பவே blatant-ஆன சித்தரிப்பு. இன்னொரு காட்சியில் வீட்டுக்குள் நுழையும் முன் "சிவாஜி - The Boss" என்று தன்னைத் தானே கூறிக் கொண்டு நுழைகிறார். எங்கள் கல்லூரிக் காலத்தில் நாங்கள் இதைத் தான் NTPK என்று வர்ணிப்போம். (NTPK - நெனப்பு தான் பொழப்பக் கெடுத்துச்சாம்.)

பார்த்ததும் உச்சி முதல் பாதம் வரை ஜிவ்வென்று ஃபீலிங் வரவைக்கும் பெண்ணை மட்டுமே தான் காதலிக்கப் போவதாக சிம்புவுக்கு ஒரு நம்பிக்கை. (இதையும் கூட ஒரு வகையான NTPK என்று சொல்லலாம்.) அப்படி ஒரு பெண்ணாக சிம்புவுக்கு கோவிலில் தரிசனம் தருகிறார் நயன்தாரா. இம்சை அரசன் புலிகேசி பாணியில் க கா க போ ஆகிவிடுகிறது. (கண்டதும் காதலில் கவுந்துவிடுகிறார் போங்கள்.) பிறகு தான் தெரிய வருகிறது நயன் தாரா சிம்புவை விட வயதில் மூத்தவர் என்று. அதற்கெல்லாம் அஞ்சாமல் காதலில் வெற்றியடைய முழுமூச்சாய்க் களமிறங்குகிறார் சிம்பு. நயன் தாராவிடம் பல் நீண்டிருக்கும் பல்லனாக நடித்து அவர் நெஞ்சைக் கவர்கிறார். (ஆனால் அப்படி நடித்தது தனது தூய்மையான காதலைப் பறைசாற்றத் தான் என்று சிம்பு கூறும் போது புல்லரிக்கிறது. காணாமல் போயிருக்கும் லாஜிக் வந்து கொஞ்ச நேரம் சொறிந்து விட்டுப் போகிறது.)

இதற்குள் வயது வித்தியாசம் பற்றி நயன்தாராவுக்குத் தெரிய வர திருமணத்துக்கு மறுத்து விடுகிறார். இதனிடையில் சிம்புவைக் குறிவைத்து சில சதி வேலைகள் நடைபெறுகின்றன. இதனால் குழம்பிப் போகும் சிம்பு, திடீரென்று தனது பள்ளியின் பக்கமாக நடந்து போகிறார். அங்கே அவரது பள்ளிப் பருவத்து ஃப்ளாஷ்பேக். பள்ளிகளுக்கிடையேயான கலைப் போட்டியில் ரீமாவும் சிம்புவும் சந்திக்கிறார்கள். (ரீமாவைப் பள்ளி மாணவியாகக் கற்பனை செய்த சிம்புவின் மன தைரியத்தை வியக்காமல் இருக்க முடியவில்லை.) மோதல் = காதல். கொஞ்சம் லேட்டாகத் தான் சிம்புவுக்கும் புரிகிறது, ரீமா ஒரு psychotic obsessive lover என்று. தெளிவடைந்து சீமாவின் காதலை உதறித் தள்ளுகிறார்.

சதிவேலைகளுக்கு ரீமாவே காரணம் என்று தெரியவருகிறது. திடீரென்று நயன் தாரா சிம்புவின் தூய்மையான காதலை ஏற்றுக் கொண்டு திருமணத்திற்கு சம்மதிக்கிறார். ரீமா, சிம்புவின் தோழியான சந்தியாவைக் கடத்துகிறார். சிம்பு ரீமாவை நம்பவைத்து ஏமாற்றி சந்தியாவைக் காப்பாற்றுகிறார். சந்தியா மொட்டை மாடியிலிருந்து தள்ளி விடப்படுகிறார். இருந்தாலும் உயிர் பிழைக்கிறார். ரீமா சென் மன நல விடுதியில் சேர்க்கப்படுகிறார். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு தெளிவாகிவிட்டதான சான்றிதழுடன் வெளியேறுகிறார். ஆனால் இன்னும் திருந்தவில்லை என்று உணர்த்துகிறார். அங்கே தான் சிம்பு போடுகிறார் To Be Continued. இப்படி லாஜிக் எங்கேயோ கண்காணாத இடத்திற்கு எஸ்கேப் ஆகி விடுவதால் கதை தன்னைத் தானே இஷ்டம் போல் எழுதிக் கொள்கிறது. கவுண்டமணி பாணியில் அடங்கொக்கமக்கா என்று தான் சொல்லத் தோன்றுகிறது.

சிம்பு இயக்கத்தில் தான் சொதப்பி விட்டார் என்றால் நடிப்பிலும் அப்படியே. மன்மதன் திரைப்படத்தில் அங்கங்கே சில காட்சிகளில் வெளிப்படுத்தியிருந்த அபாரமான நடிப்புத் திறமை மிஸ்ஸிங். ஏனோ தானோவென்ற நடிப்பு.

நாயகியர் மூவரில் ரீமா சென் மட்டுமே நடிக்க முயற்சித்திருக்கிறார். அவருக்கு மட்டுமே அதற்கான scope உண்டு என்பது உண்மையே. நயன் தாரா பாடல் காட்சிகளுக்காக இருக்கிறார். சந்தியா இருக்கிறாரா என்பதே சந்தேகமாக இருக்குமளவுக்கு மட்டுமே இருக்கிறார். முழுக்க முழுக்க ஆண்களே இல்லாமல் ஒரு பெண்ணும் இருக்கும் gang என்றால் அந்த gang-க்கு ஒரு நம்பகத் தன்மை வருமல்லவா, அதற்காக மட்டுமே சந்தியா.

படத்தில் நான் ரசித்தது பள்ளிக் காலத்து ஃப்ளாஷ்பேக் மட்டுமே. குறிப்பாக கலை விழாப் போட்டிகள் குறித்த காட்சிகள் மிக நம்பகத் தன்மையோடு வந்திருக்கின்றன. அத்தகைய போட்டியும் பொறாமையும் சண்டையும் மிக இயல்பானவை. என்னுடைய பதினோராம் மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு நாட்களில் சென்னையில் பல பள்ளிகளின் போட்டிகளில் நான் சந்தித்த அனுபவங்களை நினைவு கூறச் செய்தது இந்தத் திரைப்படம். குறிப்பாக ஆங்கில பேச்சுப் போட்டிகளுக்கு அடிக்கடி வந்து எப்போதும் முதல் பரிசை வென்று இம்சை கொடுத்த ஜூலியட் என்ற பெண்ணை இப்போதும் எனக்கு நினைவிருக்கிறது. இத்தகைய போட்டிகளில் இன்னொரு வாடிக்கையான SBOA மாணவனுடன் பின்னாளில் அவளுக்கு பிக்-அப் ஆகி விட்டதாக எங்களுக்கு வந்த செய்தி அந்தக் காலத்தில் எங்கள் வட்டத்தில் பெரிய celebrity gossip.

படத்தில் ஒட்டுமொத்தமாகப் பட்டையைக் கிளப்புவது யுவன் ஷங்கர் ராஜா தான். 'லூசுப் பெண்ணே லூசுப் பெண்ணே' என்று மெலடியாகவும் 'யம்மாடி, ஆத்தாடி' என்று கும்மாங்குத்திலும் போட்டுத் தாக்குகிறார். பாடல் காட்சிகள் மிக நன்றாகப் படமாக்கப்பட்டிருக்கின்றன. இயக்குனர் சிம்பு பாடல் காட்சிகளுக்கு பயன்படுத்தியிருக்கும் canvas-ன் பிரம்மாண்டம் ஆச்சர்யப்படுத்துகிறது. இன்னொரு வகையில் சொல்லப்போனால் தந்தை டி.ஆரின் பிரம்மாண்டத்தையே அதன் லூசுத்தனங்களைக் குறைத்து சிறப்பாக செய்தது போல் இருக்கிறது. பாடல் காட்சிகளை எடிட் செய்திருக்கும் விதமும் அருமை. Very Good.

சந்தானம் மற்றும் அவரது தந்தையாக நடித்திருக்கும் எஸ்.வி.சேகர் ஆகியோரின் காமெடி பரவாயில்லை ரகம். மன்மதன் அளவுக்கு சந்தானம் எடுபடாதது எனக்கு ஏமாற்றமே.

படத்தின் முடிவில் 'To Be Continued' என்பதெல்லாம் பெரிய தலையான சூப்பர் ஸ்டாரே பாபாவில் முயற்சி செய்து சொதப்பிய விவகாரம். லிட்டிலுக்கும் அதே கதி தான். எல்லாம் ஓவர் NTPK, வேறென்ன சொல்ல?

சிம்பு என்ற திறமைசாலிக்கு ஒரு விண்ணப்பம்: நெனப்பக் கொறைச்சுட்டு பொழப்ப கவனிங்க, நல்லா வருவீங்க. Better Luck Next Time.

பின் குறிப்பு: மன்னன் திரைப்படத்தில் தலைவரும் கவுண்டமணியும் கூட்டத்தில் அடித்துப் பிடித்து டிக்கெட் வாங்குவது போல், தேனி வசந்த் திரையரங்கில் கூட்டத்தில் போராடி டிக்கெட் வாங்கி, சீட்டுகள் இல்லாத காரணத்தால் சுமார் பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு தரை டிக்கெட்டாக இந்தத் திரைப்படத்தைக் கண்டு களித்தேன் என்பதை மகிழ்ச்சியுடன்/ வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். (புதுமையான அனுபவமென்று நினைப்பவர்களுக்கு மகிழ்ச்சியுடன், இந்தப் படத்தைப் போய் இப்படியா என்று கேட்பவர்களுக்கு வருத்தத்துடன்.)

10 Comments:

Blogger வானம்பாடி said...

ஹா ஹா ஹா.. சுவையான விமர்சனம். :)

12:48 am  
Anonymous Anonymous said...

nice review.. before that i was in thought of watching vallavan... rombba thanx thalaiva..


regards
kalpanasruthi

2:03 am  
Blogger Boston Bala said...

வழக்கம் போல்... நல்ல விமர்சனம்.

வரலாறு எப்படி இருக்கிறது?
ஈ எப்போது பார்க்க போகிறீர்கள்?

10:50 am  
Blogger மீனாக்ஸ் | Meenaks said...

நன்றி பாலா, வரலாறு இன்னும் பார்க்கவில்லை. இந்த வார இறுதிக்குள் பார்க்க எண்ணம்.

9:42 pm  
Blogger மீனாக்ஸ் | Meenaks said...

// Ukathi said...
அப்படியே தர்மபுரிக்கும் விமர்சனம் எழுதினால் தமிழ்மக்கள் மிகுந்த பயனை அடைவர் ;)//

உகாதி,

தர்மபுரி திரைப்படத்தைப் பார்ப்பதாக உத்தேசம் இல்லை. கேப்டன் மட்டும் என்றாலாவது நகைச்சுவைக்காகப் போய் பார்த்து ரசிக்கலாம். இயக்குனர் பேரரசுவோடு கூட்டணி என்பதால் ரொம்பவே பயமாய் இருக்கிறது. திருப்பதி படம் பார்த்து ஏற்பட்ட பயம் இன்னும் தெளியவில்லை.

12:41 am  
Blogger SathyaPriyan said...

நல்ல விமர்சனம். ஆனால் ஒன்றை விட்டு விட்டீர்கள். அது தனுஷிற்கு எதிராக சிம்பு சொல்லும் வசனங்கள்.

1. ஏய்! நீ அம்பானி பொண்ண கல்யானம் பன்னிக்கிட்டு பணக்காரன் ஆகனும்னு ஆசைப்படறே; ஆனால் நான் அம்பானியாகவே ஆகனும்னு ஆசைப்படறேன்

2. ஏய்! நீ என் காதல தூக்கி போட்டதால நான் கோர்ட்டுக்கோ இல்ல போலீஸ் ஸ்டேஷனுக்கோ போய் எங்கள சேத்து வைங்கன்னு கெஞ்ச மாட்டேன். நான் சிங்கம். (தனுஷின் தேவதையை கண்டேன் படத்தின் கதை)

இதெல்லாம் பார்க்கும் போது, கவுண்டர் ஜெயராமிடம் பெரிய இடத்து மாப்பிள்ளை படத்தில் கூறுவது தான் நியாபகம் வருகிறது.

கவுண்டரால் பணியில் சேர்க்கப்பட்ட ஜெயராம் கவுண்டரிடம் காலையில் பாயா, குருமா, சிக்கன், காபி, குளிக்க வெந்நீர் அனைத்தையும் தயாரித்து வைத்துக் கொண்ட பிறகு தன்னை எழுப்ப சொல்லுவார். அதற்கு கவுண்டர்,

"நீ Driver Driver Driver" என்று கூறுவார் (Driver தொழில் செய்வது கேவலம் என்ற அர்த்தத்தில் அல்ல. அவரால் வேலையில் சேர்க்கப்பட்டு அவரையே வேலை வாங்கும் கொழுப்பிற்காக அவ்வாறு நக்கலாக கூறுவார்). அதே தான் எனக்கும் இப்படம் பார்த்த உடன் சொல்ல தோன்றியது.

"நீ சிம்பு சிம்பு சிம்பு"

10:54 am  
Blogger மீனாக்ஸ் | Meenaks said...

//SathyaPriyan said...
நல்ல விமர்சனம். ஆனால் ஒன்றை விட்டு விட்டீர்கள். அது தனுஷிற்கு எதிராக சிம்பு சொல்லும் வசனங்கள்.//

சத்யப்ரியன், நீங்கள் சொல்வது உண்மை தான். ஆனால் இந்த மாதிரி வெற்று அலம்பல்களுக்கு வீண் விளம்பரம் தேடித் தர வேண்டாம் என்று தான் நான் அதைக் குறிப்பிடவில்லை.

8:54 pm  
Anonymous Anonymous said...

did you see E????
..Aadhi

3:11 pm  
Blogger மீனாக்ஸ் | Meenaks said...

Hi Aadhi, I have not seen the film "E". I don't think I will be watching it.

5:55 am  
Anonymous Anonymous said...

அடடா உங்க விமர்சனம் படிச்சுட்டு படம் பார்க்கலாம் இருந்தேன்.Thats alright.Busy??
..aadhi

8:22 am  

Post a Comment

<< Home

Old Commenting System: |

Very Old Commenting System: