சூப்பர் ஸ்டாருக்கு திரைக்கதை எழுதி இயக்கிய அனுபவம்

IIM Bangalore-ல் சூப்பர் ஸ்டாரின் பிறந்த நாளைக் கொண்டாடியதைப் பற்றிய இந்தப் பதிவைப் பார்த்ததும் எனக்குள் மலரும் நினைவுகள். 2001-2003க்கு இடைப்பட்ட காலத்தில் அங்கே படித்த போது நாங்கள் செய்ததெல்லாம் நினைவுக்கு வந்தது. நாங்கள் சூப்பர் ஸ்டாரின் பிறந்த நாளைக் கொண்டாடவில்லையென்றாலும், பொங்கல் திருநாளைக் கொண்டாடும் போது நிகழ்ச்சியின் மையப் புள்ளி சூப்பர் ஸ்டார் தான். சாம்பார் மாஃபியா எனப்படும் எங்களுக்கு இரண்டு விஷயங்கள் உயிர். ஒன்று சாம்பார், இன்னொன்று சூப்பர் ஸ்டார்.

முதலாம் ஆண்டில் பொங்கல் நிகழ்ச்சியைக் கொண்டாட முடிவு செய்த போது ஸ்கிட் போடுவது என்று முடிவு செய்தோம். சூப்பர் ஸ்டார் IIM Bangalore-க்குப் படிக்க வந்தால் என்னென்ன நடக்கும் என்பது கதை. ஒவ்வொன்றாக காட்சிகள் உருவாக ஆரம்பித்தன. ஒவ்வொரு ஸீனுக்கும் ஒரு பஞ்ச் டயலாக். முதலில் சூப்பர் ஸ்டார் Common Admissions Test எழுதி முடித்து விட்டு Group Discussion-க்கு வருவார். அங்கே கய்யா முய்யா என்று எல்லோரும் கூச்சல் போட்டுக் கொண்டிருக்க, தலைவர் எழுந்து நின்று, "அதிகமா கோபப்பட்ட ஆம்பளையும், அதிகமா சவுண்டு விட்ட பொம்பளையும் உருப்பட்டதா சரித்திரம் கிடையாது" என்று தத்துவம் சொல்கிறார். அதிலே மிரண்டு போகும் ஆசிரியர்கள் அவரை நேர்முகத் தேர்வுக்கு அழைத்துச் செல்கிறார்கள். (இன்னொரு காமெடி என்னவென்றால், மொத்தக் கதையும் ஆங்கிலத்தில் நடக்கும். பஞ்ச் டயலாக் மட்டும் தமிழில் சொல்லி ஆங்கிலத்தில் மொழி மாற்றம் செய்தோம். மேலே சொன்னதன் மொழி மாற்றம் - The man who increases his anger and woman who increases her voice, are never able to increase their status in life..!!).

நேர்முகத் தேர்வு ஒரு கண்ணாடி அறைக்குள் நடைபெறுகிறது. என்ன பேசுகிறார்கள் என்று யாருக்கும் கேட்காது. ஆனால் தலைவர் பேசப் பேச, ப்ரொஃபஸர்கள் ஒவ்வொருத்தராக வியப்போடு எழுந்து நிற்கிறார்கள். இறுதியாக தலைவர் வெளியே வந்ததும், சுற்றியுள்ள அனைவரும், "என்ன கேட்டாங்க? நீங்க என்ன சொன்னீங்க?" என்று கேட்க, தலைவர், "உண்மைய சொன்னேன்..!! (I told them the truth)" என்று மந்தகாசச் சிரிப்பு சிரித்து விட்டுப் போகிறார். தலைவர் முதல் நாள் கல்லூரிக்குள் நுழையும் போது, தமிழ் மாணவர்கள் எல்லோரும் பூசணிக்காயில் ஆரத்தி எடுத்து, மாலை போட்டு வரவேற்கிறார்கள். தலைவர் ஒரு சிகரெட்டை ஸ்டைலாகப் போட்டு வாயில் பிடித்து, பிறகு அதை எடுத்து விட்டு, "No Smoking in public places" என்று சொல்லி நெஞ்சைத் தொடுகிறார். (அப்போது கர்நாடகா அரசு அத்தகைய தடை உத்தரவைப் பிறப்பித்திருந்தது.)

Summer Internship-க்கு அமெரிக்காவின் CIA நிறுவனம் தலைவரைக் கூட்டிப் போகிறது. ஒஸாமா பின்லாடனைப் பிடிக்க வேண்டிய வேலைக்காக.! தலைவரும் ஆஃப்கானிஸ்தான் கிளம்பிப் போகிறார். ஒஸாமா பின்லாடன், அண்ணாமலை வில்லன் போல "I am a bad man" என்று அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பவன். இரண்டு உயரமான மாணவர்கள் அருகருகே நிற்க அவன் ஒரு பேப்பர் ராக்கெட் விட்டு அவர்களைக் கீழே சாய்த்துத் தள்ளுவது போல் சிம்பாலிக்காக 9/11-ஐயும் காட்டினோம்.

இங்கே கமல் ரசிகர்கள் ஓரிருவரின் ஆசையைப் பூர்த்தி செய்யும் பொருட்டு பின் லாடனைச் சந்திக்கும் சூப்பர் ஸ்டார், "நீ நல்லவனா கெட்டவனா?" என்று கேட்டு அவனை ஒரே செண்ட்டியாக்கி அந்தக் களேபரத்தில் அமுக்கிப் பிடிப்பது போல் காட்சியமைப்பு.

கல்லூரியின் மாணவர் சங்கத் தேர்தல் நடக்கிறது. தலைவரைப் போட்டியிடுமாறு நாங்கள் எல்லோரும் வற்புறுத்த அவர் மறுத்து, "பணம், பதவி, பொண்ணு - இதையெல்லாம் நாம தேடிப் போகக் கூடாது, அது நம்மளைத் தேடி வரணும்." என்று அரசியல் மெஸ்ஸேஜ் கூட இருந்தது.

கடைசியில் படிப்பு முடித்து விட்டு, மீண்டும் கலைச் சேவை புரிய தமிழ்த் திரைப்படத் துறைக்கே மீண்டும் செல்கிறார். வடக்கத்திய மாணவர்களிடம் இந்நிகழ்ச்சிக்கு செம வரவேற்பு. அன்றைக்கு இசை நிகழ்ச்சியும் வைத்திருந்தோம். நான் இரண்டு தலைவர் பாடல்களைப் பாடினேன். ('ஆசை நூறு வகை' - நானும் பள்ளிப் பருவத்திலிருந்து மேடையில் பாடிக் கொண்டிருக்கிறேன், நான் மேடையில் பாடி இதுவரை மிகுந்த வரவேற்பைப் பெற்ற பாடல் இதுவே ஆகும், அப்புறம் 'காட்டுக் குயிலு மனசுக்குள்ளே'). நிகழ்ச்சி முடிந்து சிற்றுண்டி அருந்திய பிறகு இரவு 'பாட்ஷா' திரைப்படம் டிவி அறையில் காட்டப்பட்டது. இப்படியாக அன்றைய தினம் மிக திருப்திகரமாக இருந்தது.

முதல் ஆண்டு அமர்க்களப் படுத்தி விட்டதால், இரண்டாம் ஆண்டு பொங்கல் பண்டிகை நிகழ்ச்சிக்கு கல்லூரி மாணவர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு நிலவியது. இந்த முறையும் சூப்பர் ஸ்டார் தான் என்று முடிவாகி விட்டது. ஆனால் அவர் ஏற்கெனவே போன வருடம் படித்து முடித்து விட்டதால் அந்தக் கதை ஒத்து வராது. அப்போது நாங்கள் (இரண்டாம் வருட மாணவர்கள்) ப்ளேஸ்மெண்ட்டுக்காகக் காத்திருந்த நேரம். எல்லோரும் மெக்கின்ஸி (McKinsey), பிஸிஜி (BCG - Boston Consulting Group) என்று தூக்கத்தில் கூட முனகிக் கொண்டு திரிந்த காலம். தலைவர் படிப்பு முடித்து, சினிமாவும் பிடிக்காமல், இமயமலையும் போரடித்து பாபா கன்ஸல்டிங் க்ரூப் (BCG - Baba Consulting Group) என்ற பெயரில் ஒரு நிறுவனம் ஆரம்பித்து அதில் பணியாற்ற மாணவர்களைத் தேர்ந்தெடுக்க வருவது போல் கதையை அமைத்தோம். மீண்டும் கல்லூரியில் நடப்பதையும் தலைவர் படங்களையும் இணைத்து சில காட்சிகளை அமைத்தோம். அதுவும் மிக உற்சாகமாக வரவேற்கப் பட்டது.

எதிர்காலத்தில் சினிமாவுக்கு திரைக்கதை, வசனம் எழுத வேண்டுமென்று எனக்கு ஒரு பேராசை உண்டு. நான் எழுத வரும்போது தலைவர் நடித்துக் கொண்டிருப்பாரோ என்னமோ, அவருக்கு எழுத முடியுமோ என்னமோ. கல்லூரியில் அவர் தோன்றுவது போல் திரைக்கதை எழுதி அதை இயக்கி, தலைவருக்கு டப்பிங் குரலும் கொடுத்த திருப்தி இருக்கிறதே, அது மிக இனிமையான அனுபவம். இங்கே நான் விவரித்திருப்பதை விட பல நூறு மடங்கு திருப்தியளித்த அனுபவம்.

9 Comments:

Blogger rajkumar said...

Excellent. I enjoyed it.

Anbudan

Rajkumar

10:57 pm  
Blogger ilavanji said...

கலக்கல் மீனாக்ஸ் :)

11:31 pm  
Blogger Jayaprakash Sampath said...

KALAKKAL...

12:14 am  
Blogger Raja said...

பட்டைய கிளப்பிட்டீங்க

4:01 am  
Blogger Gnaniyar @ நிலவு நண்பன் said...

நன்றாக ரசித்தேன்..கலக்கிப்பட்டீங்க

7:31 am  
Blogger Unknown said...

Style is the man... Meenax this was a nice read.. thoroughly enjoyed it...

10:41 pm  
Blogger மீனாக்ஸ் | Meenaks said...

அனைவரின் பாராட்டுக்கும் நன்றி. இதில் நிறைய க்ரெடிட் சென்றடைய வேண்டியது தலைவரைப் போல் நடித்த இருவருக்கும் தான். குறிப்பாக முதல் வருடம், சிகரெட்டைத் தூக்கிப் போட்டு உதட்டில் பொருத்த அந்த மாணவன் எடுத்துக் கொண்ட பயிற்சி ரொம்ப அதிகம். சளைக்காமல் செய்தான்.

5:04 am  
Blogger நந்தன் | Nandhan said...

கலக்கல் மீனாக்ஸ். கிட்டதட்ட ஒரு ரஜினி படம் பார்த்த உணர்வு. :) C&H கிடச்சுதா?

3:09 pm  
Blogger நாமக்கல் சிபி said...

Good Work. I enjoyes the script very muck. Keep trying in this way also. Who knows, u may become a popular Director.

(I will take the lyrics part)

3:57 pm  

Post a Comment

<< Home

Old Commenting System: |

Very Old Commenting System: