மதுர

நடிகர்கள்: விஜய், ரக்்ஷிதா, சோனியா அகர்வால், பசுபதி, வடிவேலு, சீதா
இசை: வித்யாசாகர்
இயக்கம்: மாதேஷ்

விஜய் மூன்றெழுத்து, அவர் நடித்த கில்லி மூன்றெழுத்து, அது பெற்ற வெற்றி மூன்றெழுத்து, அதைத் தொடர்ந்து அவர் நடித்த மதுர மூன்றெழுத்து, அதன் இயக்குனர் மாதேஷ் மூன்றெழுத்து, இரண்டு பேரும் சேர்ந்து படத்தில் நமக்குக் கொடுத்திருக்கும் ஆப்பு மூன்றெழுத்து.

தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஏற்கெனவே வெளியாகிவிட்ட சில படங்களிலிருந்து நல்ல காட்சிகளை எடுத்துக் கொண்டு அதையெல்லாம் கோர்த்து ஒரு திரைக்கதை அமைத்து விட்டு, பிறகு அதையெல்லாம் மோசமாகப் படமாக்கியிருக்கும் கண்றாவிக்குப் பெயர் தான் மதுர என்னும் காவியம்.

முதல் காட்சியில் பசுபதி, இறந்து போனதாகக் கருதப்படும் விஜய்க்கு திவசம் செய்வது போல் காட்சி வரும்போதே அவர் வேறு எங்கோ உயிருடன் இருக்கிறார் என்பதை சிறு குழந்தை கூட கண்டுபிடித்து விடும். வடிவேலு சொன்னது மாதிரி 'சின்னப் புள்ளைத் தனமா இல்ல இருக்கு..!!'

பாட்ஷாவில் வரும் ரஜினி போல் குடும்பத்தின் பொறுப்பான இளைஞனாக விஜய் மார்க்கெட்டில் காய்கறி வியாபாரம் செய்து கொண்டு இருப்பது போல் சில ஆரம்பக் காட்சிகள். அடிக்கடி நெகட்டிவ் ஃபிலிமில் பழைய சம்பவங்கள் வந்து போகின்றன. காமெடி என்னெவென்றால், முந்தின காட்சியில் தான் கோவிலில் "சாமி, வீட்டில உள்ள தங்கைகளின் வாழ்வு சரியாக அமைகின்ற வரை எனக்குக் கோபமே வரக் கூடாது' என்று வணங்கி விட்டு அடுத்த காட்சியில் கந்து வட்டிக்காரர்களை அடித்து நொறுக்கி துவம்சம் செய்கிறார். நடுவில் அவரை கையைப் பின்னால் கட்டிவிட்டு வட்டிப் பணம் தராத குற்றத்துக்காக அடிக்கிறார்கள், அதைப் பொறுமையாக ஏற்றுக் கொள்கிறார். இதன் மூலக் காட்சி பாட்ஷா என்று என் நண்பன் சொன்னான், நான் 'The Passion of the Christ' என்று சொன்னேன், எங்களால் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை.

இதற்கிடையில் மார்க்கெட்டைப் பற்றி ஆராய்ச்சி செய்ய கல்லூரி மாணவியாக ஒரு ஹேண்டிகாம் சகிதம் வருகிறார் ரக்ஷிதா. என்ன ஆராய்ச்சியோ? காரணமே இல்லாமல் அவர் விஜய் மீது காதல் வசப் படுகிறார். பலமான தெலுங்குப் பட வாசம். இடையில் அண்ணாமலை படம் போல் ரக்ஷிதாவின் பாத்ரூமிற்குள் புகுந்து விடுகிறார் விஜய், நல்லவேளை 'கடவுளே கடவுளே' என்று சொல்லவில்லை, அந்த மட்டும் தப்பித்தோம். தம்பிக்கு எந்த ஊரு, முத்து படங்களைப் போல் பாம்பை வைத்துக் கொண்டு அதைப் பார்த்துப் பயப்படும் ஒரு காமெடிக் காட்சியும் உண்டு.

தங்கையைத் காதலிப்பதாகக் கூறி ஏமாற்றி விடும் கம்ப்யூட்டர் செண்டர் ஓனரிடம் பொறுமையாகப் பேசும் விஜய், அவன் அதிகமாக அவதூறு செய்யும் போது, எழுந்து நின்று, 'என் பேரு மதுர, எனக்கு இன்னொரு பேரும் இருக்கு' என்று சொல்வாரென்று நான் ரொம்பவும் எதிர்பார்த்தேன். நல்லவேளையாக அப்படி இல்லாமல் கொஞ்சம் டயலாக் பேசிவிட்டு அடித்து நொறுக்கி விட்டுப் புறப்படுகிறார். அவரைக் கைது செய்ய வரும் போலீஸ் அதிகாரி, அவருக்கு ஒரு ராயல் சல்யூட் அடித்து விட்டு, 'மன்னிச்சுக்கோங்க, நீங்கன்னு தெரியாது' என்று சொல்லிவிட்டுப் போய் விடுகிறார்.

அப்போது நடக்கும் சண்டையில் சில பழைய செய்தித் தாள்கள் வீடெங்கும் பறக்கின்றன. அதைப் பார்த்து கோபம் கொள்ளும் சீதா விஜய்யை சுட்டு விடுகிறார். இந்த திடுக்கிடும் திருப்பத்தின் போது இடைவேளை போட்டு விடுகிறார்கள்.

பிறகு வடிவேலு சீதாவிடம் விஜய்யின் ஃப்ளாஷ்பேக்கை சொல்ல முற்படும் போது தான் அவர் அந்த வீட்டுப் பையன் இல்லை என்று தெரிய வருகிறது. அவர் மதுரவேல் ஐ.ஏ.எஸ், மதுரை மாவட்ட கலெக்டர். அவரது உதவியாளர் சோனியா அகர்வால், சீதாவின் மகள். எத்தனையோ படங்களில் அரசு அதிகாரியாக வரும் விஜயகாந்த், நீளமான கோட்டு அணிந்து கொண்டு, தப்பு செய்யும் தப்பான ஆசாமிகளின் கோடவுன்களுக்குச் சென்று ஆதாரத்துடன் குற்றங்களைக் கண்டுபிடித்து, பக்கம் பக்கமாக வசனம் பேசி செய்தியாளர்களிடம் பேட்டி அளிப்பாரே, அதை இந்தப் படத்தில் விஜய் செய்கிறார், அதுவும் அதே மாதிரி நீளமான கோட் அணிந்து கொண்டு. பார்வையாளர்களுக்கு மண்டை காய்ந்து போகிறது.

இதனால் கோபமுறும் பசுபதி அண்ட் கோ, அரசியல் பலத்தைப் பிரயோகிக்க் முயற்சிக்கிறது. ஆனாலும், விஜய் வளைந்து கொடுப்பதில்லை. 'ஒரே ஒரு ஆதாரம் கிடைச்சாப் போதும், அவனை உள்ளே தள்ளிடலாம்' என்று அடிக்கடி சொல்கிறார். அவர் மீது ஒருதலையாகக் காதல் கொண்டு ஒரு கனவுப் பாட்டு முடித்த திருப்தியில் இருக்கும் சோனியா அகர்வால், பசுபதியின் வீட்டிற்குச் சென்று சில ஆதாரங்களை விஜய்க்கு ஃபேக்ஸ் செய்கிறார். ஆனால், பாவம் வில்லன் கும்பலிடம் சிக்கிக் கொள்கிறார். அவரைக் காப்பாற்ற விஜய் வரும்போது நடக்கும் சண்டையில் தவறுதலாக கத்தி வீச்சுப் பட்டு உயிர்த்தியாகம் செய்கிறார். அந்தக் கொலைப்பழியும் விஜய் மேல் விழுகிறது. அவர் தலைமறைவாகி, தன்னால் இறந்த சோனியாவின் குடும்பத்துகு உதவி செய்ய அவர்களைத் தேடி வருகிறார். தனது மகள் இறந்த வி்ஷயத்தில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவன், அதே முகத்தோடு, அதே பெயரோடு வந்து நிற்கும் போது கூட அவனை இன்னாரென்று அடையாளம் கண்டுகொள்ளத் தெரியாத அப்பாவி அம்மா சீதாவும் அவரைத் தங்களோடு தங்க அனுமதிக்கிறார்.

விஜய் தன் மீது உள்ள கொலைப்பழியைத் துடைத்தெறிந்து, மீண்டும் கலக்டர் பதவியேற்று பசுபதியை அழிப்பது தான் மிச்சக் கதை. அதை வெள்ளித் திரையில் அல்ல, வி.சி.டி. திரையில் கூடக் காணத் தேவையில்லை.

இசை படு சுமார். மச்சான் பேரு மதுர பாடல் மட்டும் ரசிகர்களின் ஆரவாரத்தோடு கழிவதால் ஏதோ ரசிக்க முடிகிறது. இரண்டு கதாநாயகிகளும் ஒரு வேலையும் இல்லாமல் வந்து போகிறார்கள். வடிவேலு காமெடி என்ற பெயரில் கொஞ்ச நேரம் நம் பொறுமையைச் சோதிக்கிறார்.

படு ரசனைக் குறைவான காட்சிகளை அமைத்து இயக்குனர் மாதேஷும் தன் திறமையின்மையை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறார். இவர் ஷங்கரிடம் அஸிஸ்டெண்டாக இருந்ததற்கு அடையாளமாக ஒரு பாடல் காட்சியில் புடலங்காய் ஒன்று பாம்பு போல் நெளிந்து ஆடுகிறது கிராஃபிக்ஸ் உபயத்தில். வேறு எந்த அடையாளமும் தெரியவில்லை, அவர் ஷங்கரிடன் தொழில் பயின்றார் என்பதற்கு.

ரஜினி ரசிகர்கள், விஜயகாந்த ரசிகர்கள், விக்ரம் ரசிகர்கள் என்று இவர்களெல்லாம் தங்கள் அபிமான நடிகர்களின் காட்சிகளை நினைவுபடுத்தி ரசிக்கும் வகையில் படம் இருக்கிறதே தவிர விஜய் ரசிகர்களுக்கு படத்தின் என்ன இருக்கிறது என்று தெரியவில்லை. ஆனால் ஒன்று, படம் பார்க்கும் அஜீத் ரசிகர்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாடலாம். அந்த அளவுக்கு அதலபாதாளத்தில் இருக்கிறது படம்.

படத்தின் வியாபாரம் முடிந்ததும் இயக்குநர்+தயாரிப்பாளர் மாதேஷ், விஜய்க்கு எக்ஸ்ட்ரா 50 லகரம் கொடுத்ததாக ஒரு பேச்சு அடிபடுகிறது. இவ்வளவு கேவலமாகப் படம் எடுத்ததற்கு நஷ்ட ஈடாக இருக்கக்கூடும்.

ஒரு வரியில் படத்தைப் பற்றிச் சொல்ல வேண்டுமென்றால், 'மதுர' படத்தோடு ஒப்பிட்டால் 'சுள்ளான்' படம் ஒரு அமர காவியம்.
Old Commenting System: |

Very Old Commenting System:

சுள்ளான்

(இந்தப் பட விமர்சனத்துக்கு நிறைய இடம் வீணாக்க எனக்குப் பிடிக்கவில்லை என்பதால் ஒரு சுருக்கமான விமர்சனம்..)

கதை - ஓவர் பில்டப்

கதாநாயகன் (தனுஷ்) - ஓவர் குதித்தல், ஓவர் மிரட்டல்

கதாநாயகி (சிந்து தொலானி) - ஓவர் தாராளம், ஓவர் 'நடிப்பு என்ன விலை?'

வில்லன் (பசுபதி) - ஓவர் சவுண்டு, ஓவர் ஆக்்ஷன்

இசை (வித்யாசாகர்) - ஓவர் சத்தம்

இயக்கம் (ரமணா) - ஓவர் கான்ஃபிடன்ஸ்

படம் பார்த்த நான் - ஓவர் டார்ச்சர்
Old Commenting System: |

Very Old Commenting System: