திருப்பதி

(ந/க)டிப்பு: அஜித், சதா, ரியாஸ் கான், பிரமிட் நடராஜன்
இ(சை/ரைச்சல்): பரத்வாஜ்
(mis)Direction: பேரரசு

ஏ.வி.எம். நிறுவனத்தின் அறுபதாவது வைர விழா ஆண்டு என்று திரைப்படத் துவக்கத்தில் ஒரு குறிப்பு இடம்பெறுகிறது. அறுபது ஆண்டுகள் ஆகியும் அவர்கள் தமிழ் சினிமா ரசனையைப் புரிந்து வைத்திருப்பது இந்த லட்சணத்தில் தானா என்று திரைப்படம் பார்க்கும் நமக்கு அதிர்ச்சியாய் இருக்கிறது. இத்தகைய மசாலா காவியங்கள் படைப்பதில் ஏ.வி.எம். நிறுவனத்திற்கு நீண்ட நாள் பழக்கம் உண்டு என்றாலும் இந்தப் படத்தில் அவர்கள் பல ஆழங்களைத் தொட்டிருப்பதைக் காண முடிகிறது.

மந்திரி மகனான ரியாஸ் கான், லைட்டிங் அன்ட் சவுண்ட் சிஸ்டம் அமைத்துத் தரும் அஜித்தின் நண்பர். ஒரு கட்டத்தில் ரியாஸ் கானின் அம்மாவுக்கு முதல் கணவன் மூலம் பிறந்த டாக்டர் அண்ணன், அஜித் தங்கையின் பிரசவத்தின் போது பணம் பறிப்பதற்காக அறுவைச் சிகிச்சை நடத்த வேண்டுமென்று காலம் தாழ்த்தி அவரது மரணத்துக்குக் காரணமாகிறார். இதைத் தட்டிக் கேட்கும் அஜித்தை ரியாஸ் கான், 'நீ என் நண்பன் இல்லை, வெறூம் அடியாள் தான்' என்று சொல்லி விரட்டி விடுகிறார். டாக்டரைப் பழி வாங்குதல், ரியாஸ் கானைத் திருத்துதல், நாடெங்கும் மருத்துவமனைகளில் பிரசவத்திற்கு இலவசம் என்னும் சட்டம் கொண்டு வருதல் ஆகியவற்றை சொல்வது மீதித் திரைக்கதை. ஒரு வழியாக திரையில் படம் முடியும் போது தியேட்டருக்குள் நமக்கு 'அறுவை' சிகிச்சை முடிகிறது.

அண்ணாமலை பாணியில் நண்பர்களுக்கிடையேயான மோதல் என்ற கதைக் கருவை, சரியாக establish செய்யாமல் சொதப்புவது பெரிய தலைவலியாக இருக்கிறது. 'என் நண்பன், என் நண்பன்' என்று அஜித் தான் வாய் கிழிய சொல்கிறாரே தவிர ரியாஸ் கான் தரப்பிலிருந்து ஒரு அசைவும் காணோம். இதனாலேயே அஜித், தன் நட்பு கொச்சைப்படுத்தப்பட்டதாக கண் சிவப்பதெல்லாம் நமக்கு எரிச்சலை மட்டுமே தருகிறது.

அஜித் மிக சீக்கிரம் கொஞ்சம் புஷ்டியாவது அவருக்கும் நல்லது, பார்வையாளர்களுக்கும் நல்லது. எலும்புக் கூடுக்கு மேக்கப் மட்டும் போட்டு அழைத்து வரப்பட்டது போல் ஊட்டமில்லாமல் இருக்கிறார். ஸ்டைல் என்ற பெயரில் சட்டை காலரில் loops வைத்துக் கொண்டு அதில் ஒரு பெல்ட்டைச் சுற்றிக் கொண்டு திரிவதையெல்லாம் என்ன சொல்வதென்றே தெரியவில்லை. பஞ்ச் டயலாக் வேறு பொறுமையை சோதிக்கிறது. 'இந்த திருப்பதி இறங்கிப் போறவன் இல்லை, ஏறிப் போறவன்' என்று அவர் சொல்லும் போதெல்லாம், 'இறங்கியோ, ஏறியோ, எப்படியாவது சிக்கீரம் போய்த் தொலையுங்கடா' என்று கடுப்பு தான் மிஞ்சுகிறது. நடிப்பும் சரியில்லை, நடனமும் சரியில்லை, சண்டைக் காட்சிகளும் சொல்லிக் கொள்ளும்படி இல்லை, மொத்தமாக அஜித் என்ன தைரியத்தில் இந்த மாதிரி படத்தில் நடித்தார் என்று சுத்தமாகப் புரியவில்லை.

சதா - ஹூம், அவரைச் சொல்லி என்ன பிரயோசனம். இயக்குனர் செய்யச் சொன்னதை செய்திருக்கிறார். அது சொதப்புவதன் முழுப் பொறுப்பும் இயக்குனரைத் தான் சாரும். அவரை மன்னித்து விடலாம்.

ரியாஸ் கான் இனிவரும் படங்களில் சட்டையைக் கழற்றாமல் அடி வாங்கினால் உசிதமாக இருக்கும். சட்டையைக் கழற்றி திமிறும் தசைகளை முறுக்கோடு காட்டை விட்டு நோஞ்சான் அஜித்திடம் அடி வாங்குவதைப் பார்க்கையில் பரிதாபத்தோடு எரிச்சலும் சேர்ந்தே வருகிறது.

பரத்வாஜின் இசையில் சர்வம் குத்துப் பாடல் மயம். எந்தப் பாடலையும் எந்தப் படமாக்கலோடும் எளிதாகப் பொருத்திக் கொள்ளலாம். ஆனால் கேட்கவும் பார்க்கவும் தான் சகிக்கவில்லை. படமாக்கலிலும் எந்த விதப் புதுமையும் இல்லை. அனைத்துப் பாடல்களிலும் அஜித்தும் சதாவும் ஃபேஷன் ஷோ போல விதவிதமான டிசைன்களில் வந்து போகிறார்களே தவிர 'இதனால் சொல்ல் வரப்படுவது யாதென்று' விளங்கவில்லை. பொதுவாக இப்படிப்பட்ட தொம்மையான படங்களில் வசனக் காட்சிகளுக்கிடையே பாடல்கள் சற்றே ஆறுதலை அளிக்கும். அதற்குக் கூட நமக்குக் கொடுப்பினை இல்லை. கொடுமை கொடுமை என்று கோயிலுக்குப் போனால் அங்கே ஆயிரம் கொடுமைகள் நம் காதுக்குள் 'ஆ' என்று அலறியும், 'ஊ' என்று ஊளையிட்டும் நம் தாலியை அறுக்கின்றன.

Which finally brings us to மிஸ்டர் பேரரசு. நெளிய வைப்பது மாதிரியான காட்சிகளும் வசனங்களும் உச்சகட்ட எரிச்சலைத் தருகின்றன. குறிப்பாக அஜித் - சதா இடையே காதலென்னும் மலர் பூத்துக் குலுங்குவதெல்லாமே விரசமென்னும் சாக்கடைக்குள் தான். இடையிடையே அவரது டிரேட்மார்க் பெண்ணடிமைத் தனமான வசனங்கள். முந்தைய படமான சிவகாசியிலும் இந்தக் கொடுமை தான் என்றாலும், அதில் இரண்டாம் பாதியில் 'இழந்த சொந்தங்களை மீட்டெடுக்கப் போராடும் சகோதரன்' என்ற கதைக் கருவை முடிந்த அளவுக்கு உற்சாகமாகக் கொண்டு சென்றிருப்பார். அந்த நம்பிக்கையில் திரையரங்கம் சென்ற எனக்கு வைக்கப்பட்டது சரியான ஆப்பு.

அவரது லூசுத்தனமான திரைக்கதை, கேணத்தனமான காட்சியமைப்பு, வெளெக்கெண்ணெய்த் தனமான வசனங்களை கூடக் கொஞ்சம் போராடினால் பொறுத்துக் கொள்ளலாம். ஆனால் பாட்ஷா பாணியில் அவரே ஒரு ஆட்டோ டிரைவராக வருவதும், ஒரு சில சண்டைக் காட்சிகளில் ஈடுபடுவதும்.. அய்யா.. சாமி.. டூ மச் இல்லை, மில்லியன், பில்லியன் மச்.

மொத்தத்தில் திருப்பதி, திருப்தியே தராத தெருப்புழுதி.

16 Comments:

Blogger Boston Bala said...

எச்சரிக்கைக்கு நன்றி. மீனாக்ஸை விமர்சனம் கொடுக்கவைத்து, சிரிக்கவிட்ட எங்களுக்காகவாவது இது போன்ற தமிழ்ப்பட தரிசனங்கள் தொடரட்டும்.

10:08 pm  
Blogger Selvakumar said...

// எலும்புக் கூடுக்கு மேக்கப் மட்டும் போட்டு அழைத்து வரப்பட்டது போல் ஊட்டமில்லாமல் //

இது ஒரு மசாலா படம் என்பதை மறுப்பதற்கில்லை.

ஆனால் ஏன் அஜீத்தை நோஞ்சான், எலும்புக்கூடு வசைபாடுகிறீர்கள் என்பது மட்டும் புரியவில்லை.

பேரரசுவின் மற்ற படங்களை ஒட (ஒட்டி) வைத்திருக்கிறார்கள் மக்கள். இதே மக்கள் தான் அன்பேசிவம் என்னும் ஒரு அற்புதத்தை புழுதியில் தள்ளி இருக்கிறார்கள்.

அஜீத்தைப் பொறுத்தவரை மசாலா படங்கள் அளிப்பதற்கு தனித்திறமை வேண்டும் என்று கூறியவர்களிம் வாயை அடைக்கவேண்டும்.

இது போன்ற படங்களில் நடிப்பது எளிது,

ஆனால், முகவரி போன்ற படங்களில் நடிப்பதுதான் மற்றவர்களுக்குக் கடினம் என்பதை உணர்த்தவும்,

பெரிய நிறுவனமான ஏவிஎம் உடன் படம் செய்யும் வாய்ப்பைப் பயன்படுத்தவேண்டிய கட்டாயம் இருப்பதையும் உணர்த்தவுமே,

இப்படத்தில் உணர்த்தவே இதில் நடித்துள்ளார்.

இதன் மூலம் பேரரசு படத்தில் நடிப்பதற்கு எந்த நடிப்பு திறமையும் தேவையிலை என்பதையே எடுத்து காட்டி உள்ளார்.

படத்தை விமர்சியுங்கள். ஒரு தனி மனிதனின் உடல் கட்டையும், மற்றவற்றையும் இழிவாக பேசாதீர்கள்.

அனைத்து சினிமா தளங்களுமே, இப்படத்தில் அஜீத் மிகவும் கச்சிதமாக உடலை வைத்துள்ளார் என்றே எழுதி உள்ளனர்.

படத்தை மட்டும் விமர்சியுங்கள்.

11:19 pm  
Anonymous Anonymous said...

Seeing such films before marriage is injurious to mental health :)

11:25 pm  
Blogger ilavanji said...

மீனாக்ஸ்,

எனக்கென்னவோ இந்த படம் அண்ணாத்தே அஜீத்தை கவுக்கறதுக்கு விஜய்யும் பேரரசும் சேர்ந்து செஞ்ச கூட்டுசதின்னு படுது!!

காலர்ல லூப் போட்டு பெல்ட் போட்ட படம் குமுதத்துல வந்தது! அந்த சைசுக்கு ஜிம்மி கழுத்துபட்டிதான் கிடைக்கும்!

இது ஒன்னே போதும் இது ஒரு பயங்கர சதின்னு நிரூபிக்க!!!

11:32 pm  
Blogger ilavanji said...

சொல்ல மறந்தது...

விமர்சனம் சும்மா ஜிவுஜிவு இருக்கு! வெய்யக் காலத்துல இந்த மாதிரி படத்துக்கெல்லாம் போய் வீணா டென்சன் ஆகாதீக! ஒடம்பைப் பார்த்துக்கங்க மாப்ளை! :)

11:36 pm  
Blogger மீனாக்ஸ் | Meenaks said...

//terror said...
ஆனால் ஏன் அஜீத்தை நோஞ்சான், எலும்புக்கூடு வசைபாடுகிறீர்கள் என்பது மட்டும் புரியவில்லை.//

Dear terror,

அஜித்தை வசை பாடியதாக தாங்கள் கருதினால் மன்னிக்கவும். அந்த நோக்கத்தில் நான் எழுதவில்லை. வாலி போன்ற திரைப்படங்களில் மிக அழகாக இருந்த நடிகர் இவ்வளவு உடல் மெலிந்து இப்படி காணப்படுகிறாரே என்ற கவலையில் எழுதப்பட்டது அந்த வரி.

மற்றபடி உங்கள் பின்னூட்டத்தில் என்ன சொல்ல வருகிறீர்கள் என்பது எனக்குப் புரியவில்லை. பேரரசுவின் மற்ற படங்களையும் நான் பார்த்திருக்கிறேன். சிவகாசி படத்தை ஓரளவு பாராட்டி விமர்சனமும் எழுதியுள்ளேன். இந்தப் படம் அதலபாதாள ரேஞ்சுக்கு இருப்பதாக எனது கருத்து. முதல் பாதியின் காட்சியமைப்புகளில் ஏ.வி.எம். சரவணனும் அஜித்தும் தலையிட்டு முடிந்த அளவு விரசத்தைக் குறைத்திருக்கலாம், ஆனால் செய்யவில்லை என்பது எனது மறைமுகமான குற்றச்சாட்டு.

11:54 pm  
Blogger மீனாக்ஸ் | Meenaks said...

//இளவஞ்சி said...
எனக்கென்னவோ இந்த படம் அண்ணாத்தே அஜீத்தை கவுக்கறதுக்கு விஜய்யும் பேரரசும் சேர்ந்து செஞ்ச கூட்டுசதின்னு படுது!!//

இளவஞ்சி, உங்கள் கணிப்பில் ஓரளவு உண்மை இருக்கக் கூடும்.

11:56 pm  
Anonymous Anonymous said...

மீனாக்ஸ்,

வெறுப்பை சிறக்க சொன்ன நல்ல விமர்சனம்.

இதே போன்றதொரு வெறுமையும், பொறுமையே கொள்ளா முடியாத அளவுக்கு வெறுப்பும் பெருமளவில் எனக்குள்ளும் இருந்தது தியேட்டர் விட்டு வெளியே வந்தபோது. நீங்கள் குறிப்பிட்டிருந்த அதே சிவகாசி second half எதிர்பார்ப்புடன்தான் நானும் படம் பார்க்க சென்றேன். மிஞ்சியது ஏமாற்றமே.திரையிட்ட முதல் நாள் எந்த படத்துக்கும் செல்வதில்லை என்ற முடிவு மட்டும் எடுத்திருக்கிறேன் இப்போதைக்கு.

உங்களின் முந்தைய பதிவுகளும் மிக அருமை.

advance திருமண வாழ்த்துக்களுடன்

சிவா
dubai

12:54 am  
Anonymous Anonymous said...

பொதுவாக எல்லா வலை தளங்களும் இத்திரைப்படத்தை "பாசிடிவாக" விமர்சிப்பதை பார்த்துவிட்டு - இங்கு வந்தால் ஒரே "நெகடிவ்" சமாச்சாரமாக இருக்கிறது.

எது எப்படியோ எந்தத் திரைப்படமாக இருந்தாலும் பாராட்டிச் சொல்ல ஏதாவது ஒன்றிருக்கும். ஆனால் உங்கள் விமர்சனத்தில் அப்படி எதுவும் தெரியவில்லை. படம் பார்க்க போகும்போதே ஒரு திட்டத்தோடு போயிருப்பது போன்ற உணர்வையே உங்கள் விமர்சனம் ஏற்படுத்துகிறது.

ஒரேயடியாக போட்துதாக்குவது நல்ல விமர்சகருக்கு அழகல்ல. நான் இந்தத் திரைப்படத்தை இன்னும் பார்க்கவில்லை - பார்க்கும் ஆர்வமும் அவ்வளவாக இருக்கவில்லை. ஆனால்.... உங்கள் ஒரேயடியான 'போட்டுத் தாக்கு' பாணி விமர்சனம் இந்தத் திரைப்படத்தை பார்க்க தூண்டியிருக்கிறது. நாளை "அட்வான்ஸ் புக்கிங்" செய்து படததை பார்க்கவிருக்கிறோம். அதற்க்காக உங்களுக்கு நன்றி.

கடைசியாக ஒன்று - அஜீத்தின் தோற்றத்தை விமர்சித்திருக்கும் விதமும் ஒரு நல்ல விமர்சகருக்கான அடையாளமாகத் தெரியவில்லை.

12:58 am  
Blogger மீனாக்ஸ் | Meenaks said...

//ரோஷன் said...
எது எப்படியோ எந்தத் திரைப்படமாக இருந்தாலும் பாராட்டிச் சொல்ல ஏதாவது ஒன்றிருக்கும். ஆனால் உங்கள் விமர்சனத்தில் அப்படி எதுவும் தெரியவில்லை.//

அப்படி எதுவும் பாராட்டிச் சொல்லுமளவுக்கு இந்தத் திரைப்படத்தில் எனக்குக் காணக் கிடைக்கவில்லை. பிரசவம் அனைத்து மருத்துவமனிகளிலும் இலவசமாக்கப்பட வேண்டும் என்ற அருமையான கருத்தைக் கூட சொதப்பியிருக்கிறார்கள் என்பது எனது கருத்து.

//படம் பார்க்க போகும்போதே ஒரு திட்டத்தோடு போயிருப்பது போன்ற உணர்வையே உங்கள் விமர்சனம் ஏற்படுத்துகிறது.ஒரேயடியாக போட்துதாக்குவது நல்ல விமர்சகருக்கு அழகல்ல.//

முன் கூட்டிய திட்டமிடல்களுடன் போட்டுத் தாக்குவது எதுவும் கிடையாது. மற்றபடி நான் அஜித்தின் உடல்வாகை விமர்சித்தது, அவரைப் பார்க்கையில் பரிதாபமாக **எனக்கு** தோன்றுகிற ஒரே காரணத்தால் தான் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

1:13 am  
Blogger பிச்சைப்பாத்திரம் said...

தமிழ்ச்சினிமா எண்பதுகளில் மகேந்திரன், பாலுமகேந்திரா, பாலச்சந்தர், பாரதிராஜா, ருத்ரையா என்கிற இயக்குநர்களின் படைப்புகளில் பொற்காலத்தில் இருந்த போது, "சகலகலா வல்லவன்" போன்ற வணிக வெடிகுண்டுகளை ஏவி.எம். வீசிய புழுதிப்படலத்திலிருந்து தமிழ் சினிமா இன்னும் மீளவில்லை. இதற்காக அவர்களை குறைசொல்லி புண்ணியமில்லை. நம் ரசனைதான் மாற வேண்டும். பாருங்களேன்... கலீல் ஜீப்ரான் எல்லாம் படிக்கிறீர்கள். நீங்களும் இந்த மாதிரி குப்பைகளை முதல் ஷோவில் பார்த்து விட்டு திட்டி விமர்சனம் எழுதுகிறீர்கள்... தேவையா இது? பேரரசு போன்றவர்களின் வணிகப்படங்கள் எப்படியிருக்கும் என்று யூகிக்க முடியாதா என்ன?

///'இறங்கியோ, ஏறியோ, எப்படியாவது சிக்கீரம் போய்த் தொலையுங்கடா' என்று கடுப்பு தான் மிஞ்சுகிறது///

:-)

2:16 am  
Blogger மீனாக்ஸ் | Meenaks said...

//சுரேஷ் கண்ணன் said...
இதற்காக அவர்களை குறைசொல்லி புண்ணியமில்லை. நம் ரசனைதான் மாற வேண்டும். பாருங்களேன்... கலீல் ஜீப்ரான் எல்லாம் படிக்கிறீர்கள். நீங்களும் இந்த மாதிரி குப்பைகளை முதல் ஷோவில் பார்த்து விட்டு திட்டி விமர்சனம் எழுதுகிறீர்கள்... தேவையா இது? பேரரசு போன்றவர்களின் வணிகப்படங்கள் எப்படியிருக்கும் என்று யூகிக்க முடியாதா என்ன? பேரரசு போன்றவர்களின் வணிகப்படங்கள் எப்படியிருக்கும் என்று யூகிக்க முடியாதா என்ன? //

சுரேஷ் கண்ணன், உங்களைப் போல நான் வணிகப் படங்களை ஓரேயடியாக ஒதுக்குபவன் அல்லன். இந்த வலைப்பதிவிலேயே பல வணிக ரீதியான திரைப்படங்கள் என்னுடைய பாராட்டுகளைப் பெற்றிருக்கின்றன. கலீல் கிப்ரானேயானாலும் எந்நேரமும் அவரது கவிதைகளையே படித்துக் கொண்டிருந்தாலும் மண்டை காய்ந்து விடும் என்பது எனது கருத்து. அவ்வப்போது அத்தகைய பேரின்பத்திலிருந்து விடுபட்டு சில சிற்றின்பங்களை அடைய வணிகத் திரைப்படங்களை ஆர்வமாகப் பார்ப்பவன் நான். பேரரசுவின் முந்தைய படத்திற்கான விமர்சனம் இதே வலைப்பதிவில் இடம்பெற்றிருக்கிறது. நான் என்ன விதமான எதிர்பார்ப்புகளோடு திரையரங்கம் சென்றேனோ அதைப் பெருமளவு பூர்த்தி செய்து எனக்கு திருப்தி அளித்தது அந்தப் படம். அதற்கு எதிராக எனது எதிர்பார்ப்புகளை முற்றிலுமாக ஏமாற்றியது இந்தத் திரைப்படம். அது தான் எனது 'திட்டு'களுக்கு முக்கிய காரணம். குறிப்பாக நாலாந்தரமான காட்சிகள் அதிக அளவில் அமைந்திருந்தது பெரிய ஏமாற்றமே. இத்தகைய காட்சிகள் இல்லாமல் விறுவிறுப்பான வணிக ரீதியான திரைப்படமாகவே இருந்திருந்தாலும் எனக்கு இந்தப் படம் திருப்தி அளித்திருக்கும்.

3:47 am  
Anonymous Anonymous said...

Perarasu's next film is with Kamal.

5:44 am  
Blogger Selvakumar said...

// எனது 'திட்டு'களுக்கு முக்கிய காரணம். குறிப்பாக நாலாந்தரமான காட்சிகள் அதிக அளவில் அமைந்திருந்தது //

நான் பார்த்தவரை சந்திரமுகியில் இடம் பெற்ற, incest விரச காமெடியைவிட இது ஒன்றும் மோசமில்லை என்றே சொல்லவேண்டும்.

"செம பவருப்பா" etc இது போன்ற வசனங்களும் தான்.

சிவகாசி போன்ற பேரரசு குப்பைகளையும் நன்றாகவுள்ளது என்று விமர்சித்துள்ளீர்கள்.

முதலிலேயே, அதை நான் படித்திருக்க வேண்டும்.

3:08 am  
Blogger மீனாக்ஸ் | Meenaks said...

Terror,

It may be so. When it comes to the movies of Rajinikanth, Surya and Jothika, I don't claim to be the most objective critic, because I am a huge fan of the three actors. Even then, my record shows that I have expressed my displeasure about the vulgar comedy in Chandramukhi (a Rajinikanth movie) and condemned the crass and vulgar dialogues of Aaru (a Surya movie). In fact my review of Aaru is too strong in condemning the movie. It is among the very few movies in which I have not found even a single aspect to appreciate, similar to Thiruppathi.

However for others' films I try to be as objective as possible. I have nothing more to add on this. I have made my views on Sivakasi and Thirupathi very clear through my reviews. Somehow I felt very offended by this movie for the use of a very basic physical phenomenon of a girl in a very indecent way. I hope you understand what I mean. That may have contributed to my dislike of the movie as a whole.

6:57 am  
Blogger மீனாக்ஸ் | Meenaks said...

//terror said...
சிவகாசி போன்ற பேரரசு குப்பைகளையும் நன்றாகவுள்ளது என்று விமர்சித்துள்ளீர்கள்.//

கல்லூரியில் படிக்கும் போது, 'making art out of waste' என்று ஒரு போட்டி நடைபெறும். அதில் நானும் கலந்து கொண்டுள்ளேன். அதைப் போலவே சிவகாசி திரைப்படத்தில், குப்பையிலும் பாராட்டத்தக்க அம்சங்கள் எனக்குத் தென்பட்டதால் பாராட்டினேன். திருப்பதி திரைப்படம், வெறும் குப்பையாக மட்டுமே இருந்ததாக எனக்குத் தோன்றியதால் அதனைத் திட்டினேன்.

7:04 am  

Post a Comment

<< Home

Old Commenting System: |

Very Old Commenting System: