Munich

நடிகர்கள்: Eric Bana, Geoffrey Rush, Ayelet Zurer
திரைக்கதை, வசனம்: Tony Kushner and Eric Roth
இயக்கம்: Steven Spielberg

இந்த மாதிரி படங்களெல்லாம் தமிழில் வராதா என்று ஏங்க வைப்பதே அண்ணன் ஸ்பீலுக்கு அண்மைக்காலத்தில் பொழைப்பாப் போச்சு. அந்த வரிசையில் வந்திருக்கும் இன்னொரு படம் தான் Munich.

முனிக் ஒலிம்பிக் விளையாட்டுகளில் பங்குபெற வந்திருக்கும் இஸ்ரேலிய விளையாட்டு வீரர்களை பாலஸ்தீன விடுதலை இயக்கத்தினர் கடத்திச் சென்று விமான நிலையத்தில் சுட்டுக் கொல்லும் நிகழ்வில் படம் துவங்குகிறது. பழிக்குப் பழி வாங்க இஸ்ரேல் பெண் பிரதமர் உளவு நிறுவனமான Mossad-க்கு உத்தரவிடுகிறார். முனிக் பயங்கரத்துக்குக் காரணமான பாலஸ்தீனியர்களை ஒவ்வொருவராக தேடிப் பிடித்து அழிக்கும் பணிக்கு ஒரு சிறப்புக் குழு தேர்ந்தெடுக்கப்படுகிறது. அதன் தலைவராக நியமிக்கப் படுகிறார் இளம் ஏஜெண்ட் Eric Bana. அவரது மனைவி, பிரசவத்திற்குக் காத்திருக்கும் தருணத்தில் நாட்டுக்காக அவரைப் பிரிந்து செல்கிறார் Bana. கொஞ்சமும் விறுவிறுப்புக் குறையாமல், அரபு-பாலஸ்தீன-இஸ்ரேலிய சித்தாந்த மாறுபாடுகளை சார்பு காட்டாமல் விவாதித்துக் கொண்டே ராக்கெட் வேகத்தில் சீறிப் பாய்ந்து பயணிக்கிறது படம்.

ஒவ்வொரு ஆளாகத் தேடிக் கண்டுபிடித்து, திட்டமிட்டு assassinate செய்யும் காட்சிகளின் தொழில்நுட்ப நேர்த்தியும், பிரம்மாண்டமும், பிண்ணனி உழைப்பும் பிரமிக்க வைக்கின்றன. ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு விதமான வெடிகுண்டு தயார் செய்து, ஐவர் குழுவானது மூன்றாகப் பிரிந்து, ஒருவர் கவனித்து சமிக்ஞை தர, இன்னொருவர் வெடிகுண்டை இயக்க, கடைசியாய் ஒருவர் குற்றச் சம்பவ இடத்திலிருந்து தங்களை incriminate செய்யக் கூடிய தடயங்களை அழித்து வர என்று பட்டையைக் கிளப்புகிறார்கள். கடைசி நிமிட மாறுதல்கள், திடீர்த் திருப்பங்கள் என்று இயல்பான திகிலூட்டும் காட்சிகள் படத்துக்கு வேகம் கூட்டுகின்றன. Frederick Forsyth நாவல்களில் எப்போதும் உலகின் மிகச் சிற்ந்த உளவு நிறுவனமாக Mossad குறிப்பிடப்பட்டிருக்கும். அதை நிரூபிப்பது போல் அவர்களின் திட்டமிடுதலும் நிறைவேற்றுதலும் இருநதன.

புகைப்படத்தை மட்டும் வைத்து ஆள் யார், எங்கே இருப்பார், என்ன பழக்க வழக்கம் என்று அறிந்து சொல்லும் நபரும் அவரது பின்னணியும் ஒரு சுவாரஸ்யமான கிளைக்கதை. ஒரு கட்டத்தில் Eric Banaவிடம் வந்து அவரது புகைப்படங்களைக் காட்டி, யாரோ கொலை செய்யும் நோக்கத்துடன் அவரைப் பற்றி விசாரிப்பதை குறிப்பால் உணர்த்தி பயங்கரத்தின் பின்னணியை உணர வைக்கும் காட்சி மிக நேர்த்தியானது.

ஐரோப்பாவில் மட்டுமே தங்கள் "வேட்டையாடு விளையாடு" வேலையை வைத்துக் கொள்ள வேண்டுமென்று அறிவுறுத்தப்பட்டிருந்தாலும், முக்கிய எதிராளியைப் பற்றிய தகவல் கிடைத்ததும், அவரைக் கொல்ல லெபனானுக்குத் தாங்களே செல்வதாக சண்டையிட்டு மேலதிகாரியை சம்மதிக்க வைக்கும் காட்சி, ஒரு கட்டத்தில் கொலையில் இவர்களுக்கு ஒரு வெறித்தனமான கிறக்கம் ஏற்பட்டு விடுவதை எடுத்துணர்த்துகிறது. சிறப்ப்க் குழுவைச் சேர்ந்த ஐந்து பேரும் சுற்றி அமர்ந்து சாப்பிடும் போதே ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வது, சின்னச் சின்ன சண்டைகளைப் போட்டுக் கொண்டே காரியங்களை முடிப்பது, என கதாபாத்திர வளர்ச்சியும் முன்நகர்தலும் மிக இயல்பாக அமைகின்றன.

Assassinகளுக்கேயுரிய சலனமற்ற பார்வைகளும், ஸ்டைல் மிகுந்த நடவடிக்கைகளுடனும் மிக அருமையாக தன்னை வெளிப்படுத்தியிருக்கிறார் Eric Bana. "Troy" படத்திலேயே மூத்த இளவரசனாக வந்து ஹெர்குலிஸால் கொல்லப்படும் பாத்திரமாக மிளிர்ந்திருப்பார். அதை இந்தப் படத்திலும் தொடர்கிறார். தன் குழந்தையின் முதல் பேச்சைத் தொலைபேசி மூலம் கேட்டு உணர்ச்சி வசப்பட்டு அழுவது மிக நெகிழ்வைத் தரும் காட்சி.

ஹாலந்து நாட்டை சேர்ந்த கொலையாளிப் பெண்ணின் நடிப்பும், flirting பார்வைகளும் அட்டகாசம். அநியாயமாய்ச் செத்துப் போவதும் பரிதாபம்.

இறுதியில், கண்ணுக்குக் கண் எடுத்துக் கொண்டிருந்தால் உலகம் முழுவதும் குருடர்களே நிரம்பியிருப்பார்கள் என்ற தத்துவம் புரிந்து, இவற்றிலிருந்து விலகியிருக்க Eric Bana முடிவு செய்வதும், அந்த முடிவின் அழுத்தம் அவரைப் பின் தொடர்வதும் ரசமான கட்டங்கள். குழந்தையைத் தூக்கிக் கொண்டு நடைப்பயிற்சிக்கு வந்தவர், தங்களைக் கொல்ல யாரேனும் காரில் காத்திருக்கிறார்களோ என்று பதறித் தவிப்பது திகில் நேரம்.

இயல்பான நகைச்சுவை மிளிரும் வசனங்கள், பிரச்சாரத் தொனி இல்லாத திரைக்கதை, அட்டகாசமான நடிப்பு, எல்லாவற்றையும் ஒருங்கிணைத்த ஸ்பீல் அண்ணாத்தேவின் இயக்கம் என்று வெகுவாக என்னைக் கவர்ந்தது திரைப்படம். அவசியம் பார்க்கலாம்.

4 Comments:

Blogger பூனைக்குட்டி said...

அவ்வளவு வேகமான படமாகத்தெரியவில்லை மீனாக்ஸ். என்னைப் பொறுத்தவரை கொஞ்சம் மெதுவாக செல்லும் படம் தான். ஒருவேளை படத்தின் மொத்த நேரம் அதிகமிருந்தது காரணமாக இருக்கலாம்.

நல்ல விமர்சனம்.

4:43 am  
Blogger மீனாக்ஸ் | Meenaks said...

நன்றி மோகன் தாஸ்.

முனிக் கொலைச் சம்பவத்தை ஒரேயடியாகக் காண்பிக்காமல் வெட்டி வெட்டி அங்கங்கே காண்பித்த editing உத்தியும், சின்னச் சின்னத் திருப்பங்கள் நிறைந்திருந்த திரைக்கதையும், படத்தை சற்று பரபரப்பாகவே கொண்டு சென்றதாக என்னைக் கருத வைத்தது.

5:27 am  
Anonymous Anonymous said...

WHAT DO YOU THINK ABOUT
"DAVINCE CORD"

7:18 am  
Blogger மீனாக்ஸ் | Meenaks said...

Dear Anonymous, I guess you are referring to The Da Vinci Code. As it has not yet released in Chennai, I am unable to comment. I will surely see it though.

2:50 am  

Post a Comment

<< Home

Old Commenting System: |

Very Old Commenting System: