பட்டியல்

நடிகர்கள்: ஆர்யா, பரத், பத்மப்ரியா, பூஜா, கொச்சின் ஹனீஃபா
இசை: யுவன் ஷங்கர் ராஜா
இயக்கம்: விஷ்ணுவர்தன்

இந்த சீஸனின் இன்னொரு gangster திரைப்படம். சிட்டி ஆஃப் காட் (City of God) படத்தைத் தழுவி வரிசையாக தமிழில் பல படங்கள் வந்து கொண்டிருப்பதாகப் பேச்சு இருக்கிறது. இதுவும் அதில் ஒன்றாக இருக்கக் கூடும். ஒரு வகையில் புதுப்பேட்டைக்கு "fore-runner" என்று சொல்லலாம்.

சமூகத்தின் பெரிய திமிங்கிலங்களுக்கு அவ்வப்போது தேவைப்படும் சில்லறை வெட்டு, குத்து விவகாரங்களுக்கான புரோக்கர் ஹனீஃபா. அவரது வேலைகளை முடித்துத் தரும் சிறிய மீன்கள் ஆர்யாவும் பரத்தும். அவர்களது வாழ்க்கை, அதன் நிறையாத வெறுமையோடு கனமாகச் சொல்லப்பட்டிருக்கிறது இந்தப் படத்தில்.

நாயகர்கள் இருவரில் பரத்துக்கு சற்றே அதிக வாய்ப்பு எனலாம். அவர் வாய் பேச இயலாதவராகவும் காது கேளாதவராகவும் இருப்பதால் அது சாத்தியமாகிறது. அந்தக் குறைபாடுகளின் நுட்பமான வெளிப்பாடுகளை அருமையாகத் தனது நடிப்பில் வெளிக்காட்டி ஸ்கோர் செய்கிறார் பரத். குறிப்பாக நெஞ்சுக்குள் காதல் பூக்கும் தருணங்களில் மிக அழகான, யதார்த்தமான் நடிப்பு.

ஆர்யா படம் முழுக்கத் தாடியோடு திரியும் அழுக்கர். எப்போதும் கையில் ஒரு குவார்ட்டர் பாட்டிலோடு வலம் வருகிறார். சிறுவயதில் தன்னைப் போலவே அநாதையாகத் திரியும் பரத்தை தன்னோடு சேர்த்துக் கொண்டு வளர்க்கிறார். 'இந்தக் காதல் எல்லாம் நமக்கு சரிவராது' என்று பரத்திடம் பொங்கிப் பொருமும் காட்சியிலும், பிறகு தனக்கே பத்மப்ரியாவோடு ஒரு 'இது'வாகிவிட்ட பிறகு 'மனசே என்னவோ போல இருக்குடா' என்று கட்சிமாறும் காட்சியிலும் சிறப்பாகச் செய்திருக்கிறார். தற்போதைய இளம் கதாநாயகர்களில் ஆர்யா நிறையவே நம்பிக்கை தருகிறார்.

நாயகிகளில் பூஜா பாந்தமான கேரக்டர் என்றால் பத்மப்ரியா மிகப் பெரிய வாயாடி. பூஜாவுக்கு அதிகமாய் வேலையில்லை. மெடிக்கல் ஸ்டோரில் விற்பனைப் பெண்ணாக இருப்பவரிடம் பரத்துக்கு காதல் வருவதைப் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் பூஜாவுக்கு பரத் மீது ஏன் காதல் வருகிறது என்பது சரியாக சொல்லப்படாததால் கொஞ்சம் நெருடலாகவே இருக்கிறது. இதனாலேயே பரத்தின் பிண்ணனி அறிந்து அவர் விலகிப் போகும் போது அதில் நமக்கு எந்த ஒட்டுதலும் இல்லை.

பத்மப்ரியா, 'தவமாய் தவமிருந்து' படத்தில் கிடைத்த குடும்பப் பாங்கான இமேஜை வேண்டுமென்றே தவிர்க்க முனைந்திருக்கிறாரோ என்று சந்தேகப்படும் அளவுக்கு இருக்கிறது அவரது நடை, உடை, பாவனைகள். கடைசியில் வரும் குத்துப் பாட்டுக்கு அவர் போடும் கெட்ட ஆட்டம் அந்த சந்தேகத்தைப் போக்கி உண்மையை தெளிவாக்குகிறது. ஆனாலும் ரொம்ப ரசிக்கும்படியாக யதார்த்தமான நடிப்பு வருகிறது இவருக்கு. தக்க வைத்துக் கொண்டால் இன்னும் சிறக்கலாம்.

சின்னச் சின்ன விஷயங்களில் இயக்குனர் கலக்கியிருக்கிறார். குறிப்பாக அதுவரை அரிவாள், கத்தி மூலம் விஷயங்களை 'முடித்து'ப் பழக்கப்பட்டவர்களுக்கு ஹனீஃபா துப்பாக்கியை அறிமுகப்படுத்துகிறார். துப்பாக்கி சுடும் காட்சிகள் கொண்ட தமிழ், ஆங்கிலத் திரைப்படங்களைப் பார்த்து பரத்தும் ஆர்யாவும் துப்பாக்கி சுடுவதில் தேர்ந்தவர்களாகும் 'துப்பாகி சுடுதல் for dummies' காட்சிகள் அருமையாக இருக்கின்றன. கதைச் சித்திரத்தில் பாத்திரப்படைப்புகளும் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளன. பரத், பூஜா, ஆர்யா, பத்மப்ரியா ஆகிய நால்வரும் ஒரு உணவு விடுதியில் அமர்ந்திருக்க, வெயிட்டர் ஆர்யாவிடம் என்ன வேண்டுமென்று கேட்க, 'எனக்கு ஒரு நைன்ட்டி கட்டிங்' என்கிறார் அவர். வெயிட்டரோ 'அதெல்லாம் இங்க செர்வ் பண்ண மாட்டோம்' என்று கெத்தாக சொல்ல, பாக்கெட்டிலிருந்து ஒரு பாட்டிலை எடுத்து ஓப்பன் செய்து கொண்டே, 'உன்னை எவன்டா கேட்டான் வெண்ணை? அவங்களுக்கு என்ன வேண்டும் கேளு' என்று கலாய்ப்பது சுவை.

யுவன் ஷங்கர் ராஜாவின் பாடல்களின் தரம் 'பரவாயில்லை' முதல் 'நன்று' வரை விரிகின்றன. இளையராஜா பாடியிருக்கும் ஒரு பாடல், காட்சிக்கு நல்ல அழுத்தத்தைத் தந்தது. பாடல் காட்சிகள் படமாக்கப்பட்ட விதங்கள அனைத்தும் கவர்வதாகவே இருந்தன. பின்னணி இசையில் பெரிதாக எதுவும் என்னைக் கவரவில்லை.

Gangster படங்களுக்கேயுரிய யதார்த்தமான 'முடிவு'. அதிலும் பெரிய மனிதர்களும் அடியாள்களும் மாறிக் கொண்டேயிருக்க, இடையில் ரத்தம் குடித்து வாழும் நரியான புரோக்கர் மட்டும் அதே வேலையை அடுத்த அடியாள் மூலம் தொடர்வதாக முடித்திருக்கும் கடைசிக் காட்சி ரொம்பவே நச்.

கடைசி 30 நிமிடங்கள் கொஞ்சம் எரிச்சலைத் தரும் முடிவின்மைகளைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால் ரசிக்கும்படியான ஒரு திரைப்படமே.
Old Commenting System: |

Very Old Commenting System: