திருப்பதி

(ந/க)டிப்பு: அஜித், சதா, ரியாஸ் கான், பிரமிட் நடராஜன்
இ(சை/ரைச்சல்): பரத்வாஜ்
(mis)Direction: பேரரசு

ஏ.வி.எம். நிறுவனத்தின் அறுபதாவது வைர விழா ஆண்டு என்று திரைப்படத் துவக்கத்தில் ஒரு குறிப்பு இடம்பெறுகிறது. அறுபது ஆண்டுகள் ஆகியும் அவர்கள் தமிழ் சினிமா ரசனையைப் புரிந்து வைத்திருப்பது இந்த லட்சணத்தில் தானா என்று திரைப்படம் பார்க்கும் நமக்கு அதிர்ச்சியாய் இருக்கிறது. இத்தகைய மசாலா காவியங்கள் படைப்பதில் ஏ.வி.எம். நிறுவனத்திற்கு நீண்ட நாள் பழக்கம் உண்டு என்றாலும் இந்தப் படத்தில் அவர்கள் பல ஆழங்களைத் தொட்டிருப்பதைக் காண முடிகிறது.

மந்திரி மகனான ரியாஸ் கான், லைட்டிங் அன்ட் சவுண்ட் சிஸ்டம் அமைத்துத் தரும் அஜித்தின் நண்பர். ஒரு கட்டத்தில் ரியாஸ் கானின் அம்மாவுக்கு முதல் கணவன் மூலம் பிறந்த டாக்டர் அண்ணன், அஜித் தங்கையின் பிரசவத்தின் போது பணம் பறிப்பதற்காக அறுவைச் சிகிச்சை நடத்த வேண்டுமென்று காலம் தாழ்த்தி அவரது மரணத்துக்குக் காரணமாகிறார். இதைத் தட்டிக் கேட்கும் அஜித்தை ரியாஸ் கான், 'நீ என் நண்பன் இல்லை, வெறூம் அடியாள் தான்' என்று சொல்லி விரட்டி விடுகிறார். டாக்டரைப் பழி வாங்குதல், ரியாஸ் கானைத் திருத்துதல், நாடெங்கும் மருத்துவமனைகளில் பிரசவத்திற்கு இலவசம் என்னும் சட்டம் கொண்டு வருதல் ஆகியவற்றை சொல்வது மீதித் திரைக்கதை. ஒரு வழியாக திரையில் படம் முடியும் போது தியேட்டருக்குள் நமக்கு 'அறுவை' சிகிச்சை முடிகிறது.

அண்ணாமலை பாணியில் நண்பர்களுக்கிடையேயான மோதல் என்ற கதைக் கருவை, சரியாக establish செய்யாமல் சொதப்புவது பெரிய தலைவலியாக இருக்கிறது. 'என் நண்பன், என் நண்பன்' என்று அஜித் தான் வாய் கிழிய சொல்கிறாரே தவிர ரியாஸ் கான் தரப்பிலிருந்து ஒரு அசைவும் காணோம். இதனாலேயே அஜித், தன் நட்பு கொச்சைப்படுத்தப்பட்டதாக கண் சிவப்பதெல்லாம் நமக்கு எரிச்சலை மட்டுமே தருகிறது.

அஜித் மிக சீக்கிரம் கொஞ்சம் புஷ்டியாவது அவருக்கும் நல்லது, பார்வையாளர்களுக்கும் நல்லது. எலும்புக் கூடுக்கு மேக்கப் மட்டும் போட்டு அழைத்து வரப்பட்டது போல் ஊட்டமில்லாமல் இருக்கிறார். ஸ்டைல் என்ற பெயரில் சட்டை காலரில் loops வைத்துக் கொண்டு அதில் ஒரு பெல்ட்டைச் சுற்றிக் கொண்டு திரிவதையெல்லாம் என்ன சொல்வதென்றே தெரியவில்லை. பஞ்ச் டயலாக் வேறு பொறுமையை சோதிக்கிறது. 'இந்த திருப்பதி இறங்கிப் போறவன் இல்லை, ஏறிப் போறவன்' என்று அவர் சொல்லும் போதெல்லாம், 'இறங்கியோ, ஏறியோ, எப்படியாவது சிக்கீரம் போய்த் தொலையுங்கடா' என்று கடுப்பு தான் மிஞ்சுகிறது. நடிப்பும் சரியில்லை, நடனமும் சரியில்லை, சண்டைக் காட்சிகளும் சொல்லிக் கொள்ளும்படி இல்லை, மொத்தமாக அஜித் என்ன தைரியத்தில் இந்த மாதிரி படத்தில் நடித்தார் என்று சுத்தமாகப் புரியவில்லை.

சதா - ஹூம், அவரைச் சொல்லி என்ன பிரயோசனம். இயக்குனர் செய்யச் சொன்னதை செய்திருக்கிறார். அது சொதப்புவதன் முழுப் பொறுப்பும் இயக்குனரைத் தான் சாரும். அவரை மன்னித்து விடலாம்.

ரியாஸ் கான் இனிவரும் படங்களில் சட்டையைக் கழற்றாமல் அடி வாங்கினால் உசிதமாக இருக்கும். சட்டையைக் கழற்றி திமிறும் தசைகளை முறுக்கோடு காட்டை விட்டு நோஞ்சான் அஜித்திடம் அடி வாங்குவதைப் பார்க்கையில் பரிதாபத்தோடு எரிச்சலும் சேர்ந்தே வருகிறது.

பரத்வாஜின் இசையில் சர்வம் குத்துப் பாடல் மயம். எந்தப் பாடலையும் எந்தப் படமாக்கலோடும் எளிதாகப் பொருத்திக் கொள்ளலாம். ஆனால் கேட்கவும் பார்க்கவும் தான் சகிக்கவில்லை. படமாக்கலிலும் எந்த விதப் புதுமையும் இல்லை. அனைத்துப் பாடல்களிலும் அஜித்தும் சதாவும் ஃபேஷன் ஷோ போல விதவிதமான டிசைன்களில் வந்து போகிறார்களே தவிர 'இதனால் சொல்ல் வரப்படுவது யாதென்று' விளங்கவில்லை. பொதுவாக இப்படிப்பட்ட தொம்மையான படங்களில் வசனக் காட்சிகளுக்கிடையே பாடல்கள் சற்றே ஆறுதலை அளிக்கும். அதற்குக் கூட நமக்குக் கொடுப்பினை இல்லை. கொடுமை கொடுமை என்று கோயிலுக்குப் போனால் அங்கே ஆயிரம் கொடுமைகள் நம் காதுக்குள் 'ஆ' என்று அலறியும், 'ஊ' என்று ஊளையிட்டும் நம் தாலியை அறுக்கின்றன.

Which finally brings us to மிஸ்டர் பேரரசு. நெளிய வைப்பது மாதிரியான காட்சிகளும் வசனங்களும் உச்சகட்ட எரிச்சலைத் தருகின்றன. குறிப்பாக அஜித் - சதா இடையே காதலென்னும் மலர் பூத்துக் குலுங்குவதெல்லாமே விரசமென்னும் சாக்கடைக்குள் தான். இடையிடையே அவரது டிரேட்மார்க் பெண்ணடிமைத் தனமான வசனங்கள். முந்தைய படமான சிவகாசியிலும் இந்தக் கொடுமை தான் என்றாலும், அதில் இரண்டாம் பாதியில் 'இழந்த சொந்தங்களை மீட்டெடுக்கப் போராடும் சகோதரன்' என்ற கதைக் கருவை முடிந்த அளவுக்கு உற்சாகமாகக் கொண்டு சென்றிருப்பார். அந்த நம்பிக்கையில் திரையரங்கம் சென்ற எனக்கு வைக்கப்பட்டது சரியான ஆப்பு.

அவரது லூசுத்தனமான திரைக்கதை, கேணத்தனமான காட்சியமைப்பு, வெளெக்கெண்ணெய்த் தனமான வசனங்களை கூடக் கொஞ்சம் போராடினால் பொறுத்துக் கொள்ளலாம். ஆனால் பாட்ஷா பாணியில் அவரே ஒரு ஆட்டோ டிரைவராக வருவதும், ஒரு சில சண்டைக் காட்சிகளில் ஈடுபடுவதும்.. அய்யா.. சாமி.. டூ மச் இல்லை, மில்லியன், பில்லியன் மச்.

மொத்தத்தில் திருப்பதி, திருப்தியே தராத தெருப்புழுதி.
Old Commenting System: |

Very Old Commenting System: