சிவகாசி

நடிகர்கள்: விஜய், அஸின், பிரகாஷ்ராஜ், கீதா
இசை: ஸ்ரீகாந்த் தேவா
இயக்கம்: பேரரசு

மாஸ் ஹீரோ என்ற ராஜபாட்டையில் விஜய் விறுவிறுப்பாக முன்னேறிக் கொண்டிருக்கும் பயணத்தில் இன்னுமொரு முக்கிய மசாலா கொத்து பரோட்டா மைல்கல் தான் சிவகாசி.

ரசிகர்கள், தாய்க்குலங்கள் ஆகிய இரு பெரும் டார்கெட் ஆடியன்ஸைக் குறி வைத்திருக்கிறார்கள். முதல் பாதி ரசிகர்களுக்கு. சிவகாசிப் பட்டாசு வெடி வெடி என்று அதிரடியாய் வெடிக்கிறது. இரண்டாம் பாதி தாய்க்குலங்களுக்கு. உருக்கோ உருக்கு என்று சென்டிமென்ட்டில் உருக்கித் தள்ளுகிறார்கள். இரண்டையும் நகைச்சுவை கலந்து பறிமாறியிருப்பதே பார்வையாளர்களுக்கு ஓரளவு நிம்மதியைத் தருகிறது.

தி.நகர் ரங்கனாதன் தெருவில் வெல்டிங் ஷாப் வைத்திருக்கும் 'அநாதை' சிவகாசி. (அந்தத் தெருவில் வெல்டிங் ஷாப்புக்கு என்ன அவசியம் என்று புரியவில்லை. கஸ்டமர்கள் வருவதற்கும் போவதற்கும் ரொம்பச் சிரமமாயிருக்குமே..!!) ஆதிகேசவன் ஸ்டைலில் மார்பில் தங்க நகைகள் புரள வலம் வரும் பல்லாக்கு பாண்டி என்ற ரவுடியை அடக்கும் விதமாக சண்டையில் பொறி கிளப்பி அறிமுகமாகிறார் விஜய். கடையின் ஷட்டரை வெல்டிங் செய்து உடைத்து அவர் வெளியே வரும் முதல் காட்சியிலேயே ரசிகர்களுக்கு அல்வா சாப்பிட்ட திருப்தி. அட்டகாசம்.

பணக்காரப் பெண் அஸினுக்கும் அவருக்கும் சில உரசல்கள், சில சவால்கள். அந்த சில காட்சிகள் முடிந்து பார்த்தால் இருவருக்கும் லவ்ஸ். நடுவில் 'பொண்ணுன்னா இப்படித்தான் இருக்கணும்' போன்ற கொள்கை விளக்க வசனங்கள், 'ஆயிரம் இருந்தாலும் அவன் ஆம்பளை, போலீஸா இருந்தாலும் நீங்க பொம்பளை, அவனை நீங்க அடிச்சிருக்கக் கூடாது' போன்ற கேனத்தனமான பெண்ணிய எதிர்ப்பு வசனங்கள். அதையெல்லாம் தாண்டி இடைவேளைக்கு வந்து சேரும் போது தெரிகிறது, விஜய் ஒரு அநாதை அல்ல என்ற திடுக்கிடும் திருப்பம்.

சின்ன வயதில் அண்ணன் செய்த தவறுக்கு பழி ஏற்று வீட்டை விட்டு துரத்தப்பட்டவர் விஜய். அப்பா, அம்மா, தங்கை ஆகியோரின் நினைவுகளை மறக்க அவர் அணிந்த வேடம் 'அநாதை'. குடும்பத்தோடு வந்து பெண் கேட்டால் மட்டுமே திருமணத்திற்கு சம்மதிப்பேன் என்று அஸின் சொல்லிவிட இழந்த குடும்பத்தை மீட்க சொந்த ஊரான நாட்டரசன் கோட்டைக்குப் புறப்படுகிறார் விஜய். அங்கே தானய்யா சென்டிமென்ட்டும், நகைச்சுவையும் வந்து சேர்ந்து கொள்கிறது. விறுவிறுப்பாக பட்டையைக் கிளப்பி க்ளைமாக்ஸ் வரை அலுக்காமல் கொண்டு போய் முடிக்கிறார் பேரரசு.

சவாலான கேரக்டர், கஷ்டமான காட்சிகள் இப்படியெல்லாம் தன்னைத் தானே வருத்திக் கொள்ளாமல், தனக்கென ஒரு எளிமையான பாதையை வகுத்துக் கொண்டுள்ளார் விஜய். அதை மிகவும் திருப்திகரமாகச் செய்து முடிக்கும் சூரத்தனம் அவருக்கு அளவில்லாமல் இருக்கிறது. காமெடி, நடனம், சண்டைகள், சென்ட்டிமென்ட், காதல் என்று சகலத்திலும் புகுந்து புறப்படுகிறார். தமிழ் முரசு மாதிரி நச்சென்று செய்து முடிக்கிறார். எததனை நாளுக்கு இப்படியே ஓட்ட முடியும் என்ற கேள்வியை மறந்து விட்டுப் பார்த்தால் அவருடைய பங்களிப்பு மிகப் பிரமாதம்.

அஸினுக்கு ஒரு வழக்கமான கதாநாயகி வேலை. அளவோடு செய்திருக்கிறார்.

கிராமத்து அண்ணனாக, கேப்மாறித் தனங்களின் ஒட்டுமொத்த குத்தகைதாரராக வரும் பிரகாஷ்ராஜ், ஊரில் எம்.எல்.ஏ.வாக இருக்கிறார். தாயையும் தங்கையையும் கவனிக்காமல் அட்டூழியம் பண்ணிக் கொன்டிருக்கிறார். நகைச்சுவை கலந்த வில்லத்தனத்தை அம்சமாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

அம்மாவையும் தங்கையையும் பழைய நிலைமைக்குக் கொண்டு வந்த பிறகே தான் யார் என்ற உண்மையைச் சொல்லப் போவதாக விஜய் முதலிலேயே தேவையில்லாமல் முடிவு செய்து விடுவதால் சில சுவாரஸ்யமான நிகழ்வுகள்.

குறிப்பாக பிரகாஷ்ராஜின் எடுபிடிகளாக வருகின்ற இரண்டு பேர் காமெடியில் பின்னிப் பெடலெடுக்கிறார்கள். விஜய் ஒரு கடிதத்தை வைத்து பேரம் பேசும் போது, "ஒண்ணு", "ரெண்டு", "நாலு" என்று பேசிக் கொன்டிருக்கும் போது எடுபிடி உள்ளே நுழைந்து, "அண்ணே, என்ன இது சில்லறைத்தனமா? பத்துன்னு ரவுண்டாப் பேசி முடிங்க" என்று சொல்வதும், பிரகாஷ்ராஜ் அவரிடம், "சரி, பத்து கொண்டு வா" என்று அவரை அனுப்பி விட்டு, "ஆனாலும் இந்தக் கடுதாசிக்கு பத்தாயிரம் ரொம்ப அதிகம்" என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவர் ஒரு பெட்டியுடன் வருவதும், "எதுக்கு பெட்டி?" என்று விசாரிக்க, "பெறவு? பத்து லட்சத்தைப் பெட்டியில போட்டுத் தானே கொண்டு வர முடியும்" என்று சொல்வதும், "பத்து லட்சமா? நான் பத்தாயிரம் தானேடா சொன்னேன்" என்று அவர் மிரட்சி கொள்வதும், எடுபிடி அதற்குப் பதிலாக, "அந்த எழவைப் பத்தாயிரம்னு சொல்லித் தொலைக்க வேண்டியது தானே? ஒண்ணு ரென்டு மூணுன்னு ஒண்ணாங்கிளாஸ் மாதிரிச் சொல்லிக்கிட்டிருந்தா எனக்கு என்ன வெளங்கும்?" என்று பட்டாசு கொளுத்திப் போடுவதும் மிக சுவையான நகைச்சுவை. தியேட்டர் அதிர்கிறது.

ஸ்ரீகாந்த் தேவா, தனது பிண்ணனி இசை மூலம் சண்டைக் காட்சிகளுக்கு நெருப்பு மூட்டியிருக்கிறார். அஸினிடம் தனக்கு ஏற்பட்டிருக்கும் காதலைப் பற்றிச் சொல்லும் போது விஜய், "இது உங்க காதல், எங்க காதல் இல்லை, ங்கொக்காமக்கா காதல்" என்று சொல்வார். அதைப் போல் பாடல்களில் ஸ்ரீகாந்த் தேவா போட்டிருக்கும் குத்து, "உங்க குத்து, எங்க குத்து இல்லை, ங்கொக்காமக்கா குத்து." அப்படி ஒரு கும்மாங்குத்து போட்டு குமுறியிருக்கிறார். "தீபாவளி தீபாவளி" பாட்டில் அலுமினிய டம்ளர் முதற்கொண்டு டிரம்ஸ் வரை சகலத்தையும் போட்டு அடி பின்னியெடுத்திருக்கிறார். "வாடா வாடா", "கோடம்பாக்கம்" ஆகிய பாடல்களும் கேட்பவர்களை முறுக்கேற வைக்கும் வண்ணம் இருக்கின்றன.

அம்மா மீதான அன்பும், தங்கை மீதான பாசமும் வெளிப்படுத்தும் காட்சிகளில் விஜய் பொருத்தமான முக பாவங்களோடு சிறப்பாக செய்திருக்கிறார். தங்கையின் மகளாக ஒரு சிறுமி மனதைக் கவர்கிறாள்.

இயக்குனர்களில் இரண்டு வகை உண்டு. ரசிகர்களுக்கு நம்பிக்கை ஊட்டுகிற இயக்குனர்கள் ஒரு வகை. மாஸ் ஹீரோ என்ற ஆளுமைக்கு ஆசைப்படும் நாயகர்களுக்கு நம்பிக்கை ஊட்டுகிற இயக்குனர்கள் இன்னொரு வக. இயக்குனர் பேரரசு, தெளிவான இரண்டாம் வகைக்காரர். கே.எஸ்.ரவிக்குமாரின் சென்டிமென்ட் மசாலா பிராண்டை கையகப்படுத்திக் கொண்டு கொஞ்சம் நகைச்சுவையைத் தூக்கலாகத் தூவிவிருந்து படைப்பதில் அவர் சமர்த்தர்.

அஜீத் ரசிகர்கள், நம்பிக்கையோடு 'திருப்பதி' திரைக் காவியத்தை எதிர்பார்க்கலாம்.

22 Comments:

Blogger Narain said...

அட்டகாசம் போங்க. பின்னிட்டிங்க. அப்படியே உங்க ஊரு தியேட்டர்ல Legend of Zorro போட்டா பார்த்துருங்க. அது 100 சிவகாசி, எம்.ஜி.ஆர் படம். வாத்தியார் படம் சூப்பருங்கண்ணா.

11:28 PM  
Blogger இளவஞ்சி said...

உங்க விமரிசனமே 1000வால வெடிச்சாப்புல இருக்குங்க! :)

2:52 AM  
Blogger மீனாக்ஸ் | Meenaks said...

கருத்து தெரிவித்த உங்களுக்கு நன்றி.

நாராயண், என் ஊர் தியேட்டரில் Legend of Zorro படம், மின்னல் வீரன் என்ற பெயரில் தமிழில் ஓடுகிறது. பெங்களூருக்குப் போய் ஆங்கிலத்திலே அந்தப் படத்தைப் பார்க்கலாம் என்றிருக்கிரேன்.

6:48 AM  
Anonymous Vijay Fan said...

ஆக மொத்தம் எங்கள் தலைவர் விஜய்க்கு இது இன்னுமொரு வெற்றிப் படம். அப்படித்தானே?

11:41 PM  
Anonymous Anonymous said...

திருத்தம்: பெண்ணிய எதிர்ப்பு அல்ல, பெண் எதிர்ப்பு.

12:42 AM  
Anonymous theevu said...

//பெங்களூருக்குப் போய் ஆங்கிலத்திலே அந்தப் படத்தைப் பார்க்கலாம் என்றிருக்கிரேன்//

:)

12:46 AM  
Blogger மோகன்தாஸ் said...

அண்ணே படம் பார்த்து தலைவலி வந்ததுதான் மிச்சம். நான்கு மணிநேரமும் 150 ரூபாய் பணமும் செலவழித்து தலைவலியை வாங்கிவந்தேன். 30 மார்க் கூட கொடுக்க மாட்டேன் இந்தப்படத்துக்கு.

11:05 PM  
Blogger ravi srinivas said...

Legend of Zorro
i have seen the one in which anthony hopkins plays the role of zoro.it will remind you MGR films
of 50s and 60s.who knows they may import it into kollywood with vikram or surya playing two roles.

12:15 AM  
Anonymous சு. க்ருபா ஷங்கர் said...

விமர்சனம் நல்லா இருக்கு, போர் அடிக்காம interestinஆ இருந்துது. ஆனா விமர்சனம் நல்லாருக்குன்னு சிவகாசி எல்லாம் பார்க்க மாட்டேன். அது வந்து... ம்ம்ம்! இலக்கியம் வேறு, வாழ்க்கை வேறு. ;-)

எம்.குமரன் சன் ஆஃப் மகாலக்ஷ்மி பார்த்து ஸ்ரீகாந்த் தேவா மேல ரொம்ப நம்பிக்கை வெச்சு இருந்தேன் - குறிப்பா 'நீயே நீயே' பாட்டு. இந்தப்படத்துப் பாட்ட எல்லாம் கேட்டதும் பழைய மாதிரியே 'டபுள்ஸ்'ஆ போய்ட்டதை நெனச்சு, வேதனைப்படறேன், வெட்கப்படறேன், விசனப்படறேன். :-((

6:16 AM  
Blogger G.Ragavan said...

படம் பாத்தேன். பாத்துக்கிட்டே இருந்தேன். அப்புறம் முடியாம பாதியிலேயே எந்திரிச்சி வந்துட்டேன். இதுதான் உண்மை. விஜய், நீங்க மாறலைன்னா...மக்கள் ஒங்கள மாத்தீருவாங்க.

10:55 PM  
Blogger மீனாக்ஸ் | Meenaks said...

அன்புள்ள ராகவன்,

இரண்டாம் பாதியில் வெகுஜன ரசனைக்குரிய அம்சங்கள் நிறைய இருந்தன. முழு படத்தையும் பார்த்திருக்கலாம்.

விஜய் மாற மாட்டார் என்று உறுதியாகக் கூறலாம். சிவகாசியை விட மிகச் சுமாராக இருந்த திருப்பாச்சி படமே மிகப்பெரும் வெற்றியைப் பெற்ற போது விஜய் எதற்கு மாற வேண்டும்? விஜயின் நடிப்புத் திறமைக்கு இவ்வாறான வெகு ஜன திரைப்படங்களே ஏற்றது. சூர்யா அல்லது விக்ரம் போன்றவர்களே மாறுபட்ட திரைப்படங்களில் நடித்துப் பெயர் பெற வல்லவர்கள்.

1:41 AM  
Blogger ஆள்தோட்டபூபதி said...

summa summa thaaliya arukkaradhum, sound vittu vasanam pesuradhum, naan ambilai naan ambilai nu sollikaradhum ennaikku marudho annaikki dhan tamizh cinema urupadum....

2:04 AM  
Blogger Dharumi said...

"Vijay Fan said...
ஆக மொத்தம் எங்கள் தலைவர் விஜய்க்கு இது இன்னுமொரு வெற்றிப் படம். அப்படித்தானே?//-

- நிஜமாவே விஜய்க்கு விசிறியா?? நம்ப முடியவில்லை ..இல்லை..இல்லை..

காலம்'டா சாமி!!!!

2:37 AM  
Blogger :: The Protector :: said...

Meena,

Nice review... gotta feel viewing movie... so no to theater.. i saw the clipings of the commedy you mentioned... that's really nice....

9:57 PM  
Blogger மீனாக்ஸ் | Meenaks said...

Dear Vishnu,

Thanks. But I am not meena. I am meenaks, a male. :-)

10:02 PM  
Blogger G.Ragavan said...

// இரண்டாம் பாதியில் வெகுஜன ரசனைக்குரிய அம்சங்கள் நிறைய இருந்தன. முழு படத்தையும் பார்த்திருக்கலாம். //

மீனாக்ஸ், உண்மையச் சொன்னா....நான் எந்திரிச்சி ஓடி வந்ததே இரண்டாம் கட்டத்துலதான். கொஞ்சம் கொஞ்சமா போய்க்கொண்டிருந்த பொறுமை.....ஒரு கட்டத்தில் மொத்தமாப் போச்சு. நான் வெளிய வந்தப்போதான் நயன்தாரா பாட்டு வந்துச்சு.

ஆனா நீங்க சொல்ற மாதிரி, இது பி,சீ செண்டர்களில் நல்லா ஓடினாலும் ஓடும். அப்படி ஓடும் பொழுது விஜய் மாற வேண்டிய அவசியமில்லைங்குறதும் உண்மைதான்.

10:41 PM  
Blogger எம்.கே.குமார் said...

விமர்சனம் சரவெடியா இருந்தது. வாழ்த்துகள்.

விஜய் மாறுவாரா? இந்த குத்துக்கே படம் இப்படி ஓடும்போது எதுக்குய்யா மூஞ்சி மாத்தி மொகரய மாத்தி நடிக்கணும்?

ஆயிரம் "பிடிக்கலை-குத்தாட்டம்-கமெர்சியலைஸ்டுன்னு" விமர்சனம் வந்தாலும் விஜய் போற ரூட்டு கரெக்டு.

இன்னும் பதினைஞ்சி வருஷம் கழிச்சி, அவரு எந்தக்கட்சிக்கு ஓட்டு போடச்சொல்லுவாருன்னு நாமெல்லாம் டிவியப்பாத்துக்குட்டு உக்காராம இருந்தாச்சரி.

எம்.கே.

1:09 AM  
Blogger அன்பு said...

அன்பு மீனாக்ஸ்,

இந்தப்படத்துக்கு ஏன் இவ்ளோ மெனுக்கட்டு விமர்சனம் எழுதுனீங்கன்னே தெர்ல!?

ஒரே பேரிரைச்சலாய் இருந்தது. தீபாவளி... பாடலுக்கு ஆடிட்டு எங்கேயோ ஓடப்போற மாதிரி ஒரு உணர்வு...
அதுதான் படமெங்கும்!

இன்னும் பதினைஞ்சி வருஷம் கழிச்சி, அவரு எந்தக்கட்சிக்கு ஓட்டு போடச்சொல்லுவாருன்னு நாமெல்லாம் டிவியப்பாத்துக்குட்டு உக்காராம இருந்தாச்சரி.

குமார்,
முழிச்சுக்கோங்க... இந்தவார ஏதோ ஒரு இதழின் அட்டையில் - "விஜய் அரசியலுக்கு வருகிறார்... அவருடைய தந்தை பெண்கள் அணி அமைக்க ஏற்பாடு..." என்பதுபோன்ற ஒரு செய்தி நேற்று பார்த்தேன்!

2:02 AM  
Blogger மீனாக்ஸ் | Meenaks said...

அன்பு,

தீபாவளிக்கு வெளியான சிவகாசி, மஜா ஆகிய இரண்டு படங்களையும் பார்த்தேன். இரண்டில், நான் என்ன விதமான எதிர்பார்ப்புகளுடன் உள்ளே சென்றேனோ, அவற்றை சிவகாசி நிறைவேற்றியிருந்தது. எனவே அதற்கு என் விமர்சனத்தை எழுதினேன். தரமான படங்களுக்கு மட்டுமே விமர்சனம் எழுதுவது என்று எனக்கு எந்தக் கொள்கையும் கிடையாது. அப்படியெல்லாம் கிறுக்குத் தனமாக முயன்றால் மூன்று மாதங்களுக்கு மேல் புதுப்பிக்கப்படாத வலைப்பதிவாக இந்த வலைப்பதிவு தமிழ்மணத்திலிருந்து நீக்கப்பட்டு விடும். :-))

அப்புறம் நீங்கள் குறிப்பிட்ட செய்தி, போன வார நக்கீரன் இதழில் இடம்பெற்றிருந்தது. நானும் படித்தேன். ஆனால் எந்த அளவுக்கு உண்மையாய் இருக்கும் என்று என்னால் முடிவு செய்ய இயலவில்லை.

3:25 AM  
Anonymous Anonymous said...

தூக்கம் வராமல் அவதிப்படுபவர்களுக்கு இப்படம் ஒரு நல்ல மருந்து...

6:50 AM  
Blogger தேவ் | Dev said...

இன்னும் பதினைஞ்சி வருஷம் கழிச்சி, அவரு எந்தக்கட்சிக்கு ஓட்டு போடச்சொல்லுவாருன்னு நாமெல்லாம் டிவியப்பாத்துக்குட்டு உக்காராம இருந்தாச்சரி.

Mmm Films are just for entertainment.

nnengalae ethi vidunga eri ninna piragu mookai seenthunga..
tamizhan pozhaippu nalla pozhiappu.

Btw Its a great review by the author I am gonna book mark this site

- Dev
http://mindcrushes.blogspot.com/

4:02 AM  
Blogger மீனாக்ஸ் | Meenaks said...

Thanks DJ.

7:55 PM  

Post a Comment

<< Home

Old Commenting System: |

Very Old Commenting System: