வர்ணஜாலம்

நடிகர்கள்: ஸ்ரீகாந்த், சதா, நாசர், கருணாஸ், குட்டி ராதிகா
இசை: வித்யாசாகர்
இயக்கம்: நகுலன் பொன்னுசாமி

படத்தில் யார் அதிக பட்சம் சொதப்பியிருப்பது என்று போட்டியே வைக்கலாம். முடிவு எட்டப்படுவது ரொம்பக் கடினம். அந்த அளவுக்கு அனைவரும் கன்னா பின்னா என்று சொதப்பித் தள்ளியிருக்கிறார்கள். கதையமைப்பில் இயக்குனர், இசையில் வித்யாசாகர், நடிப்பில் எல்லோரும். ஆங்! மறந்து விட்டேனே, காமெடியில் கருணாஸ்.

படம் முடிய இன்னும் 10 நிமிடங்கள் இருக்கும் போது தான் ஃப்ளாஷ்பேக் முடிகிறது. அதுவரை "என்ன கருமமடா நடக்கிறது" என்று முன் சீட்டில் முட்டிக் கொண்டிருக்க வேண்டியிருக்கிறது. முன்கதையை முதலிலேயே வைத்திருந்தால் இன்னும் கொஞ்சம் ரசிக்க முடிந்திருக்கும்.

ஸ்ரீகாந்தின் அக்கா மகளான சதா, மருத்துவக் கல்லூரி மாணவி. இருவரும் திருமணம் செய்து கொள்ளும் முடிவோடு பழகி வருகிறார்கள். ஒரு என்கௌண்ட்டரில் ரௌடிக்குப் பதில் சதா கொல்லப்பட்டு விடுகிறார். ரௌடியைத் தப்புவிக்க ஏற்கெனவே முயன்ற கமிஷனர் நாசர், இதைப் பயன்படுத்தி, சதாவுக்கும் ரௌடிக்கும் கள்ளத் தொடர்பு என்று ஒரு கதையைக் கட்டி தான் தப்பித்துக் கொள்கிறார். சதாவின் தாயும் தந்தையும் அவமானம் தாங்காமல் தற்கொலை செய்து கொள்கின்றனர். பாதிக்கப்பட்டவரான ஸ்ரீகாந்த், நாசரைப் பழி வாங்க அவர் ஓய்வு பெற்று குடும்பத்துடன் வசிக்கும் ஊட்டிக்கு வருகிறார். குடும்பத்துடன் பழகி, உறவாடிக் கெடுத்து, கடைசியில் நாசரையும் என்கௌண்ட்டரிலேயே சாகடிக்கிறார்.

நான் இப்போது சொல்லும்போது உங்களுக்கு எப்படிப் புரிகிறது? இதைச் செய்து தொலைக்காமல், எடுத்தவுடன் ஸ்ரீகாந்து ஊட்டிக்கு வருவதில் ஆரம்பித்து, அவர் திடீரென்று ஏன் சைக்கோ மாதிரி சிரிக்கிறார், ஏன் சோகப் பார்வையுடன் வானத்தைப் பார்த்து உட்கார்ந்திருக்கிறார், ஏன் தனக்குத் தானே காயங்கள் உண்டாக்கிக் கொள்கிறார் என்றெல்லாம் ஒரு மண்ணும் புரியாமல் கடைசி வரை மண்டை காய்ந்து போகச் செய்து விடுகிறார்கள்.

கதை கடுப்பேற்றினால், நடிப்பு கடுப்பேற்றினால், இடையிடையே வரும் காமெடி காட்சிகளை ரசித்து மனசைத் தேற்றிக் கொள்ளலாம். அப்படி இடையிடையே வரும் காமெடியும் கதையை விட, நடிப்பை விட அதிகமாய் கடுப்பேற்றினால் எங்கே போய் முட்டிக்கிறது? அப்படித்தான் கருணாஸ் சொதப்பலின் உச்ச கட்டத்தை அடைந்து விட்டார். கொஞ்ச நாள் அவர் எதுவும் நடிக்காமல் இருந்தால் அவருக்கும் நல்லது, ரசிகர்களுக்கும் நல்லது. தமிழ் சினிமாவிற்கும் நல்லது.

படத்தைக் கொஞ்சமாவது கைதூக்கி விடக் கூடிய வித்யாசாகர் அம்போவென்று கை விட்டு விட்டு எங்கேயோ காணாமல் போய் விடுகிறார். வெகு வெகு சாதாரணமான பிண்ணனி இசை.

இதற்கு மேல் விமர்சனம் எழுதும் பொருட்டு இத்தகைய படத்தினைப் பற்றி நினைத்துப் பார்த்துக் கொண்டிருக்க எனக்குக் கஷ்டமாக இருக்கிறது. மன்னித்துக் கொள்ளுங்கள், இத்தோடு முடித்துக் கொள்வோமே.. ப்ளீஸ்! உங்களை கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன்!!

"எங்களை விட மட்டமான படம் எடுக்க எவனடா உண்டு?" என்று ஆஞ்சனேயா படம் எடுத்தவர்கள் மார்தட்டிக் கொண்டிருக்கும் வேளையில், "அஞ்சேல்!! இதோ நாங்கள் இருக்கிறோம்!!" என்று அபயம் கொடுத்திருக்கிறார்கள் வர்ணஜாலம் குழுவினர்.

சபாஷ்! சரியான போட்டி!!
Old Commenting System: |

Very Old Commenting System:

எங்கள் அண்ணா

நடிகர்கள்: விஜய்காந்த், பிரபுதேவா, வடிவேலு, பாண்டியராஜன், நமிதா, சொர்ணமால்யா, இந்திரஜா, லால்
இசை: தேவா
இயக்கம்: சித்திக்

மலையாளத்திலிருந்து தமிழுக்கு வந்திருக்கும் படம். ஆனால், அங்கிருந்த இயல்பான சுவை இல்லாமல்.!நகைச்சுவை என்று கருதி வைத்திருக்கும் சில காட்சிகள் ரொம்பக் கண்றாவியாய் இருக்கின்றன.. சீரியஸ் என்று கருதி வைத்திருக்கும் சில காட்சிகள் நகைச்சுவையில் பட்டையைக் கிளப்புகின்றன.. அப்படியரு ஏடாகூடமான மிக்ஸ் தான் படம்.

விஜய்காந்தின் flashback-உடன் படம் துவங்குகிறது.. நீண்ட நேரம் வருவதால் பொறுமையை ரொம்பவே சோதிக்கிறது.. அவர் ஏன் திருமணம் என்ற பேச்சையே விரும்பாமல், பெண்களைக் கண்டால் காத தூரம் ஓடும் கேரக்டராய் இருக்கிறார் என்பதனை நிறுவுவதற்கான flashback. அதைத் தவிர வேறு எதை எதையோ சொல்லி டார்ச்சர் ஏற்படுத்துகிறது.. வரிசையாய் யாராவது இறந்து கொண்டே இருக்கிறார்கள்.. ஒவ்வொருவர் இறக்கும் போதும் ஒரு அதிர்ச்சியான உண்மையை சொல்லிவிட்டு இறக்கிறார்கள். ஞாபகம் வைத்துக் கொள்வதற்குள் மண்டை காய்ந்து போகிறது.

விஜய்காந்தின் தந்தைக்கு இரண்டு மனைவியர். இரண்டாவது மனைவி பற்றி ஒரு சிலருக்கு அரசல் புரசலாய்த் தான் தெரியும். முதல் மனைவியின் மகன் (விஜய்காந்த்) காதலித்த பெண்ணை நிச்சயம் செய்யப் போகும் போது, அந்தப் பெண்ணை மணக்க ஆசை கொண்ட அவளது மாமன் மகன், இரண்டாம் மனைவி பற்றிய பேச்சை எடுத்து அந்த இரண்டாம் மனைவியையும் அழைத்து வந்து விடுகிறான். இரண்டாவது மனைவியோ, கணவரின் மானம் போகாமல் இருக்க, அவர் தன் கணவர் இல்லை என்று சொல்லி விடுகிறாள். இரண்டாவது மனைவியின் மகன், இதனால் அதிர்ச்சி+கோபம் அடைந்து ஊரை விட்டே ஓடிப் போகிறான்.

அந்த மாமன் மகன், இதற்கிடையில் அந்தப் பெண்ணின் அப்பாவைக் கொலை செய்து விட்டு, பழியை விஜய்காந்த் அப்பா மீது போடுகிறான். விஜய்காந்தும் அதை நம்பி விட, அந்தப் பெண் வாழ்வில் முன்னேற கடன் பெற ஜாமீன் கையெழுத்துப் போட, சொத்தெல்லாம் அபகரிக்கப் படுகிறது. தன் தந்தை தவறு செய்யவில்லை என்று அவர் உணரும் போது, அந்தப் பெண் நம்புவதில்லை.. காதல் உடைந்து போகிறது.. அவள் தன் மாமன் மகனையே மணந்து கொள்கிறாள். இடையில் தந்தையின் இரண்டாவது மனைவியும் இறந்து விடுகிறாள். அவருக்கு ஒரு மகளும் உண்டு. மகன் ஓடிப் போக முதல் மனைவி குடும்பமே காரணம் என்று அவருக்கு கோபம் இருப்பதால் அதைச் சொல்லியே மகளை வளர்க்கிறாள்.. இதனால், விஜய்காந்த், அநாதையாகி விடும் தன் தங்கை சொர்ணமால்யாவை, தான் இன்னாரென்று வெளிப்படுத்திக் கொள்ளாமலேயே படிக்க வைத்து வளர்க்கிறார்.

விஜய்காந்தின் மாமா மகனான பிரபுதேவா ஒரு ஜொள்ளு பார்ட்டி. அவரைத் திருத்த விஜய்காந்துடன் தங்க வைக்கிறார்கள். பக்கத்து வீட்டு ஹாஸ்டலில் இருக்கும் சொர்ணமால்யாவை டாவடிக்கிறார். முதலில் விலகிப் போகும் சொர்ணாவும் பிறகு ஏற்றுக் கொள்கிறார்.

இதற்கிடையில் சம்பந்தமில்லாமல் நமிதா ஒரு கேரக்டராக உள்ளே நுழைகிறார். ஒரு சந்தர்ப்பத்தில், விஜய்காந்தை காதலிக்க வைக்கிறேன் என்று சபதம் போட்டு அதற்காக சில பல வேலைகள் செய்கிறார். 'என்னடா இது புதுக் குழப்பம்' என்று நாம் யோசிக்கும் போதே, அவர், விஜய்காந்த் காதலித்த பழைய பெண்ணின் தங்கை என்று தெரிய வருகிறது.

சொர்ணமால்யாவுக்கு, விஜய்காந்த் தான் அண்ணன் என்றும் தெரிய வருகிறது. பழைய கோபங்களை மறந்து அன்புக்கு ஏங்கும் தங்கையாக அவர் உருக, அண்ணன் பாசம் பொழிய எல்லாம் நன்மையாகப் போகும் வேளையில், ஊரை விட்டு ஓடிப் போன பழைய அண்ணன் திரும்பி வருகிறார். விஜய்காந்தின் பழைய காதலியுடன் கூட்டணி அமைத்துக் கொண்டு அவர் விஜய்காந்துக்கு எதிராக சில வில்லத்தனங்கள் செய்கிறார். தங்கையைப் பிரிக்கிறார். வேறு இடத்தில் திருமணம் செய்ய முயற்சிகள் நடக்கிறது. (பழைய காதலியின் தம்பியுடன்..)

கடைசியில் பழைய காதலி, அவளது கணவர் ஆகியோரின் கெட்ட எண்ணம் புரிந்து கொண்டு, அண்ணன், விஜய்காந்தை, "நீ தான் எங்க ரெண்டு பெருக்குமே அண்ணன்" என்று ஜோக்கடிப்பதுடன் படத்தை ஒருவழியாக முடித்துத் தொலைக்கிறார்கள்.

விஜய்காந்தின் உதவியாளர் வடிவேலுவுடன் பிரபுதேவா மற்றும் பாண்டியராஜன் அடிக்கும் காமெடி கூத்துக்கள் ஓரளவு ரசிக்க வைக்கின்றன. காதல் காட்சிகள், செண்டிமெண்ட் காட்சிகள் எதிலுமே ரொம்பவும் சுவாரஸ்யம் இல்லை. விஜய்காந்துக்காக மலயாள ஒரிஜினலில் இல்லாத சில சண்டைக் காட்சிகள் வைத்திருக்கிறார்கள். வலிந்து திணிக்கப்பட்டது நன்றாகத் தெரிவதால் ரசிக்க முடியவில்லை.

இசையில் பெரிதாய் ஏதும் இல்லை. தேவா ரொம்ப உழைக்கவில்லை போலும். "முதன்முதலாக ஜன்னல் ஓரத்தில்" பாடலுக்கு மட்டும் பாஸ்மார்க் போடலாம் என்று நினைத்தேன். ஆனால், "யமுனை ற்றிலே ஈரக் காற்றிலே" பாடலை ரொம்ப ஞாபகப் படுத்துவதால், அதுவும் கட்.

மலையாள ஒரிஜினலையும் பார்த்தவன் என்ற அளவில், அது தந்த நிறைவை பல இடங்களில் தொலைத்து விட்டுப் பரிதாபமாய் நிற்கிறார் எங்கள் அண்ணா. காமெடி, கொஞ்சமாய் காப்பாற்றிக் கரையேற்றி விடுகிறது.

வேறு வேலை எதுவும் இல்லாமல் வெட்டியாய் உட்கார்ந்திருக்கும் போது மட்டுமே பார்க்க வேண்டிய படம்.
Old Commenting System: |

Very Old Commenting System: