வர்ணஜாலம்

நடிகர்கள்: ஸ்ரீகாந்த், சதா, நாசர், கருணாஸ், குட்டி ராதிகா
இசை: வித்யாசாகர்
இயக்கம்: நகுலன் பொன்னுசாமி

படத்தில் யார் அதிக பட்சம் சொதப்பியிருப்பது என்று போட்டியே வைக்கலாம். முடிவு எட்டப்படுவது ரொம்பக் கடினம். அந்த அளவுக்கு அனைவரும் கன்னா பின்னா என்று சொதப்பித் தள்ளியிருக்கிறார்கள். கதையமைப்பில் இயக்குனர், இசையில் வித்யாசாகர், நடிப்பில் எல்லோரும். ஆங்! மறந்து விட்டேனே, காமெடியில் கருணாஸ்.

படம் முடிய இன்னும் 10 நிமிடங்கள் இருக்கும் போது தான் ஃப்ளாஷ்பேக் முடிகிறது. அதுவரை "என்ன கருமமடா நடக்கிறது" என்று முன் சீட்டில் முட்டிக் கொண்டிருக்க வேண்டியிருக்கிறது. முன்கதையை முதலிலேயே வைத்திருந்தால் இன்னும் கொஞ்சம் ரசிக்க முடிந்திருக்கும்.

ஸ்ரீகாந்தின் அக்கா மகளான சதா, மருத்துவக் கல்லூரி மாணவி. இருவரும் திருமணம் செய்து கொள்ளும் முடிவோடு பழகி வருகிறார்கள். ஒரு என்கௌண்ட்டரில் ரௌடிக்குப் பதில் சதா கொல்லப்பட்டு விடுகிறார். ரௌடியைத் தப்புவிக்க ஏற்கெனவே முயன்ற கமிஷனர் நாசர், இதைப் பயன்படுத்தி, சதாவுக்கும் ரௌடிக்கும் கள்ளத் தொடர்பு என்று ஒரு கதையைக் கட்டி தான் தப்பித்துக் கொள்கிறார். சதாவின் தாயும் தந்தையும் அவமானம் தாங்காமல் தற்கொலை செய்து கொள்கின்றனர். பாதிக்கப்பட்டவரான ஸ்ரீகாந்த், நாசரைப் பழி வாங்க அவர் ஓய்வு பெற்று குடும்பத்துடன் வசிக்கும் ஊட்டிக்கு வருகிறார். குடும்பத்துடன் பழகி, உறவாடிக் கெடுத்து, கடைசியில் நாசரையும் என்கௌண்ட்டரிலேயே சாகடிக்கிறார்.

நான் இப்போது சொல்லும்போது உங்களுக்கு எப்படிப் புரிகிறது? இதைச் செய்து தொலைக்காமல், எடுத்தவுடன் ஸ்ரீகாந்து ஊட்டிக்கு வருவதில் ஆரம்பித்து, அவர் திடீரென்று ஏன் சைக்கோ மாதிரி சிரிக்கிறார், ஏன் சோகப் பார்வையுடன் வானத்தைப் பார்த்து உட்கார்ந்திருக்கிறார், ஏன் தனக்குத் தானே காயங்கள் உண்டாக்கிக் கொள்கிறார் என்றெல்லாம் ஒரு மண்ணும் புரியாமல் கடைசி வரை மண்டை காய்ந்து போகச் செய்து விடுகிறார்கள்.

கதை கடுப்பேற்றினால், நடிப்பு கடுப்பேற்றினால், இடையிடையே வரும் காமெடி காட்சிகளை ரசித்து மனசைத் தேற்றிக் கொள்ளலாம். அப்படி இடையிடையே வரும் காமெடியும் கதையை விட, நடிப்பை விட அதிகமாய் கடுப்பேற்றினால் எங்கே போய் முட்டிக்கிறது? அப்படித்தான் கருணாஸ் சொதப்பலின் உச்ச கட்டத்தை அடைந்து விட்டார். கொஞ்ச நாள் அவர் எதுவும் நடிக்காமல் இருந்தால் அவருக்கும் நல்லது, ரசிகர்களுக்கும் நல்லது. தமிழ் சினிமாவிற்கும் நல்லது.

படத்தைக் கொஞ்சமாவது கைதூக்கி விடக் கூடிய வித்யாசாகர் அம்போவென்று கை விட்டு விட்டு எங்கேயோ காணாமல் போய் விடுகிறார். வெகு வெகு சாதாரணமான பிண்ணனி இசை.

இதற்கு மேல் விமர்சனம் எழுதும் பொருட்டு இத்தகைய படத்தினைப் பற்றி நினைத்துப் பார்த்துக் கொண்டிருக்க எனக்குக் கஷ்டமாக இருக்கிறது. மன்னித்துக் கொள்ளுங்கள், இத்தோடு முடித்துக் கொள்வோமே.. ப்ளீஸ்! உங்களை கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன்!!

"எங்களை விட மட்டமான படம் எடுக்க எவனடா உண்டு?" என்று ஆஞ்சனேயா படம் எடுத்தவர்கள் மார்தட்டிக் கொண்டிருக்கும் வேளையில், "அஞ்சேல்!! இதோ நாங்கள் இருக்கிறோம்!!" என்று அபயம் கொடுத்திருக்கிறார்கள் வர்ணஜாலம் குழுவினர்.

சபாஷ்! சரியான போட்டி!!

0 Comments:

Post a Comment

<< Home

Old Commenting System: |

Very Old Commenting System: