"தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் பதவிக்கு இந்தப் படம் மூலம் அப்ளிகேஷன் போடுகிறேன்" என்று அஜீத் எதிர்பார்ப்பு ஏற்படுத்திய படம்.. போய்ப் பார்த்தால் மண்டை காய்ந்து போனது.. "தமிழ் சினிமாவின் சொதப்பல் ஸ்டார்" பதவிக்கு வேண்டுமானால் படம் கொஞ்சம் உதவ முடியும்.. படத்தில் வரைமுறையே இல்லாமல் இஷ்டத்துக்கு சொதப்பியிருக்கிறார்கள்.. தமிழ் சினிமாவின் இப்போதைய (எப்போதும்) சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நல்ல ரசிகன் என்ற முறையில் எனக்கு வயிறு எரிந்தது..
ஒரு சண்டை, ஒரு காதல் காட்சி, ஒரு பாட்டு, ஒரு செண்ட்டி.. மீண்டும் ஒரு சண்டை, ஒரு காதல் காட்சி, ஒரு பாட்டு, ஒரு செண்ட்டி.. மீண்டும் ஒரு சண்டை, ஒரு காதல் காட்சி, ஒரு பாட்டு, ஒரு செண்ட்டி.. மீண்டும்.. அய்யோடா சாமி..!!! தலைவலி..!!
போலீஸ் வேலைக்கு IPS எழுதி தேர்வாகிறார் அஜீத்.. அவர் பெயர் பரமகுரு.. கடைசி வரை ஆஞ்சனேயாவுக்கும் படத்துக்கும் என்ன சம்பந்தம் என்று விளக்கப்பட்ட மாதிரி தெரியவில்லை.. (கடைசிக் காட்சிகளில் மிகுந்த மனவேதனையுடன் நான் படம் பார்த்துக் கொண்டிருந்ததால் அப்போது விளக்கியிருந்தாலும் எனக்குத் தெரிந்திருக்காது.. மன்னித்துக் கொள்ளுங்கள்..)
வேலையில் சேரக் காத்திருக்கும் போது பல பேரோடு தகராறு செய்கிறார்.. (அநீதி கண்டு கொந்தளிக்கும் கேரக்டராம்..) அதனால் வேலைக்கே ஆபத்து வருகிறது.. அப்புறம் அஜீத் கோர்ட்டில் தானே வாதாடி, வில்லன்களின் சூழ்ச்சிகளை முறியடித்து எப்படி போலீஸ் வேலையில் சேர்கிறார் என்பது தான் கதை.. அதாவது, இடைவேளை வரைக்கும்.. அப்புறம் அவர் வேலையில் சேர்ந்த பிறகு புது வில்லன்கள் வருகிறார்கள்.. புதுக் குழப்பங்கள்.. புதுத் தலைவலிகள்..!!
படத்தில் நகைச்சுவை இல்லாத குறையை காதல் காட்சிகள் தீர்த்து வைக்கின்றன.. மீரா ஜாஸ்மினுக்கு ஏன் அஜீத் மேல் காதல் வருகிறது, எப்படிக் காதலிக்கிறார்கள், எங்கே சந்திக்கிறார்கள் என்பதெல்லாம் ஒரே மர்மமாய் இருக்கிறது.. ஆனால் ரெண்டு டூயட் மட்டும் கரெக்டாய் வந்து விடுகிறது..
ஒரு கல்லூரியைக் காட்டுகிறார்கள்.. திடீரென்று அஜீத் அந்தக் கல்லூரி மாணவர்களோடு ஒரு பாட்டுப் பாடி ஆடுகிறார்.. (போலீஸ் வேலையில் சேர்ந்த பிறகு..) எதற்கு வந்தார், எதற்கு ஆடுகிறார் என்பதெல்லாம் ஆண்டவனுக்காவது தெரியுமா என்று சந்தேகமே..
கல்லூரி கலாட்டாவின் சாட்சியாக இருக்கும் மாணவனின் தாயாக சீதா.. ஏதோ பரவாயில்லை என்று படத்தில் சொல்லக்கூடிய ஒரே விஷயம் அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் மட்டுமே.. (அதற்காகவெல்லாம் படத்தைப் பார்த்துத் தொலைக்காதீர்கள்.. தண்டம்..!!)
என்ன? இசையா..?? படத்தில் எதுவுமே சரியில்லை.. இசையை மட்டும் குறிப்பிட்டு எல்லாம் என்னால் திட்ட முடியாது.. எனக்கும் கொஞ்சம் மனிதாபிமானம் எல்லாம் உண்டு..
மொத்தத்தில், This film is a positive embarrassment. Not only to Ajith and Mahaaraajan, but also to every Tamil Movie viewer. Total Crap..!!
பிதாமகன் - ஒரு கவிதை.. ஆனால், கொஞ்சம் உறைய வைக்கும் கவிதை..
சித்தன், சக்தி, மஞ்சு, கோமதி என்று நான்கு மாறுபட்ட பாத்திரங்களைப் படைத்து அவர்களின் பயணத்தில் நம்மையும் கூட அழைத்துச் சென்று அவர்கள் சந்தோஷப்படும் போது நம்மை சிரிக்க வைத்து, அவர்கள் கஷ்டப்படும் போது நம்மை அழ வைத்து, இயக்குனர் பாலா நெஞ்சைத் தொடுகிறார்..
சக்தியாக சூர்யா.. ஆங்கிலத்தில் “Mind Blowing” என்று சொல்வார்கள்.. அப்படிப்பட்ட பாத்திரம், அப்படிப்பட்ட performance.. பக்கா •ப்ராடு சாமியாக அதிசயப் பொருட்களும், வாயுத்தொல்லைக்கு லேகியமும் கூவிக்கூவி விற்பதாகட்டும்.. ஜெயிலில், இன்னதென்று அறியாமல் தன்னைத் தொட்டவர்களையெல்லாம் வன்மத்தோடு அடிக்கக் கிளம்பும் விக்ரமை இழுத்துப் பிடித்து நிறுத்தி நிலத்தில் கட்டிப் புரண்டு, ஜெயிலர் வந்து கேட்கும் போது வளைந்து நெளிந்து, "ஒண்ணுமில்லை சார்.. சும்மா.. அவனுக்கு சண்டை போடுறது எப்படி-ன்னு கத்துக் கொடுத்துக்கிட்டு இருந்தேன்.." என்று சொல்வதாகட்டும்.. குடித்து விட்டு விக்ரமை அழவும் சிரிக்கவும் கேட்டு அழுவதாகட்டும்.. லைலாவிடம் ஏமாற்றிப் பறித்த வாட்ச்சை ஏலம் விட்டு, "இந்த அதிசயப் பொருளின் ஆரம்ப விலை பத்தே பத்து நயா பைசாக்கள்.." என்று லைலாவை வம்புக்கிழுப்பதாகட்டும்.. சந்திரபாபு, சிவாஜி மாதிரி நடித்தபடி பழைய பாடல்களுக்கு சிம்ரனோடு சேர்ந்து ஆட்டத்தில் பட்டையைக் கிளப்புவதாகட்டும்.. சூர்யா அமர்க்களம் பண்ணியிருக்கிறார்.. இந்த மனிதருக்குள் இவ்வளவு திறமையா என்று வியக்க வைக்கிறார்..
சித்தனாக விக்ரம்.. மயானத்திற்கு வரும் ஒவ்வொரு பிணத்தையும் எரிக்கும் போது அவர் பாடும் புதுப்புது சிறு பாடல்கள், மிக ஆழமான அர்த்தங்களைக் கொண்டதாக இருக்கின்றன.. அதனால், அவரது மன வளர்ச்சி குறித்த சந்தேகங்கள் ஏதும் இல்லை.. ஆனாலும் அவரது பாத்திரம் உருவாக்கப் பட்டிருக்கும் விதம் கொஞ்சம் தடுமாற்றமாகத் தான் இருக்கிறது.. பாத்திரப் புதுமைக்காக சில யதார்த்தங்கள் துறக்கப் பட்டிருப்பதாக உணர முடிகிறது.. ஒரு வேளை அவரை எடுத்து வளர்க்கும் வெட்டியானையும் இதே போன்று காட்டியிருந்தால், விக்ரமின் பாத்திரம் குறித்த பல கேள்விகளை இயக்குனர் தவிர்த்திருக்கலாம்..
ஆனால், பாத்திரம் எப்படியிருந்தாலும் அதிலே விக்ரம் பரிமளித்திருக்கும் விதம் அதி அற்புதம்.. அவ்வப்போது வானத்தை நோக்கிய மௌனப் பார்வைகள்.. பழுப்பேறிய தலை முடி, அழுக்கேறிய உடை, காவியேறிய பற்கள், யாராவது பேசினால் பதிலுக்கு ஒரு உறுமல், சண்டை போடும்போது மிருகத்திற்குரிய சிலிர்ப்பான வேகம் என்று பார்த்துப் பார்த்துப் பண்ணியிருக்கிறார்.. அருமையோ அருமை..
மூன்றாம் பிறை திரைப்படம் பற்றி ஒரு செய்தி உண்டு.. ஒவ்வொரு காட்சியிலும் sridevi மிக அருமையாக நடிக்கும்போது கமல் சொல்வாராம், "எனக்கு க்ளைமேக்ஸ் காட்சி இருக்கிறது.. அதில் காண்பிக்கிறேன் என் சரக்கை எல்லாம்.." என்று... அதே போலத் தான் இதிலும்.. கடைசி இருபது நிமிடங்களில் விக்ரம் எடுக்கும் விஸ்வரூபம் பிரமிக்க வைக்கிறது.. சூர்யாவின் எரியும் சடலத்தைப் பார்த்துக் கொண்டு, அவர் பாடல் பாடியபடி வாழ்க்கையில் முதன்முறையாக அழுகின்ற காட்சியில் உலகத் தரமான நடிப்போடு உருக வைக்கிறார்.. Hats off..!!
பாலிடெக்னிக் படிக்கும் பெண் மஞ்சுவாக லைலா.. முதல் முறை சூர்யாவிடம் பணம் பொருள் எல்லாம் இழந்து மண்ணில் புரண்டு அழுவதில் ஆரம்பித்து தொடர்ந்து சூர்யாவைப் பிடித்துக் கொடுக்க முயற்சி எடுத்து ஒரு கட்டத்தில் அவரது குறும்பான கண்ணியத்தில் மனசைப் பறிகொடுத்து கடைசியில் சூர்யாவின் முடிவைக் கண்டு பேசக் கூட முடியாமல் அதிர்ந்து போய் நிற்கிற காட்சி வரையில் லைலாவின் நடிப்பில் பல பரிணாமங்கள்.. வெல்டன்..
கஞ்சாப் பொட்டலம் விற்கும் கோமதியாக சங்கீதா.. நிறைவான நடிப்பு..
கஞ்சாத் தோட்ட முதலாளியாக மகாதேவன்.. கொடுக்கப்பட்ட வில்லன் பாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்.. இன்னும் கொஞ்சம் மெருகேற்றியிருக்கலாம்.. புதுமுகம் என்பதால் பாராட்டுக்கள்..
சூர்யா-விக்ரம் இடையிலான நட்பு உருவாகும் விதம் அழுத்தமாகவே சொல்லப்பட்டிருக்கிறது.. சூர்யா குடித்து விட்டு வீட்டிற்குள் புரளும் போது சங்கீதா செல்லமாய் அடிக்க வர, விக்ரம் கோபத்தோடு அவரைத் தள்ளி விட்டு, தானே சூர்யாவுக்கு உணவூட்டும் காட்சி அபாரம்..
விக்ரமின் உணர்வுகள் கொஞ்சம் கொஞ்சமாய் அவரது இறுகிப் போன மனக்கதவைத் திறந்து வெளிப்படும் காட்சிகள் பிரமாதம்..
இசைஞானியின் இசையில் ஆரவாரமான புயற்காற்றும் உண்டு.. இதமான தென்றலும் உண்டு.. இசையை விட ஆழமாக அர்த்தங்களை வெளிப்படுத்தும் நிசப்தமும் உண்டு.. எல்லாம் சரியான இடங்களில்..!!
சிம்ரனின் நடனக் காட்சி ஒரு அநாவசியத் திணிப்பு என்று பெரும்பாலானோர் கூறியுள்ளனர்.. எனக்கென்னவோ அப்படித் தோன்றவில்லை.. நடனத்துக்கு முந்தின காட்சியில் கிராமத்தார் அவரைச் சுற்றி நின்று பேசும் காட்சியில் வசனங்கள் பளிச்.. உதாரணம்.. "ஆத்தா..!! நீ மட்டும் ஒரு ஆட்டம் போட்டுட்டுப் போ.. அடுத்த தேர்தல்ல உன்னை மந்திரி ஆக்கிக் காட்டறோமா இல்லையா பாரு.."
படத்தில் ஒளிப்பதிவு குறிப்பிடத்தகுந்த ஒன்று.. குறிப்பாக பாடல் காட்சிகளில் காமிரா விளையாடுகிறது.. "இளங்காத்து வீசுது.." பாடல் ஒரு ஆறு நிமிட பரவச அனுபவம்..
கதையமைப்பிலும் பாத்திரப்படைப்பிலும் உள்ள சிறு குறைகளைத் தவிர்த்துப் பார்த்தால், இயக்குனர் பாலாவின் பிதாமகன், ஒரு காவியம்.. சந்தேகமேயில்லை..
(ஒரே ஒரு விஷயம்.. பாலாவின் மூன்று திரைப்படங்களிலும் நாயகன், மன அதிர்ச்சியால் பாதிக்கப் படுகிறான்.. அடுத்த படத்தில் வேறு ஏதேனும் களத்தினைத் தேர்ந்தெடுத்து அதில் தன் திறமையைக் காட்ட வேண்டும்.. அவரால் முடியும் என்ற நம்பிக்கையை பிதாமகன் அளித்திருக்கிறது..!!)