ஆதி

முன்னுரை:

கடந்த சனிக்கிழமை மதுரையில் இருந்தேன். 'தமிழ்' திரையரங்கில் ஆதி திரைப்படம் பார்க்கலாம் என்று முடிவு செய்து வாசல் வரை போய் விட்டேன். வாசலில் ரசிகக் கண்மணிகள் படத்தை வரவேற்று ஒட்டியிருந்த போஸ்டர் ஒன்று கண்ணில் பட்டுத் தொலைத்தது. இம்மாதிரி ரசிகர்களை ஆங்கிலத்தில் "enthu cutlet" என்று சொல்வதுண்டு. அந்த போஸ்டரில் இடம் பெற்றிருந்த வாசகங்களில் குறிப்பிடத்தக்க சில, பின்வருமாறு:

"எமனையும் வெல்வோம் - பரம
சிவனையும் வெல்வோம்."

"லேலக்கு லேலக்கு லேலா!
இது லேட்டஸ்ட் தத்துவம் தோழா!!
அரிசி அரைத்தால் மாவு,
ஆதி அடித்தால் சாவு..!!"

"அழகுன்னா ரதி,
பாட்டுன்னா சுதி,
பத்திரிக்கைன்னா சேதி,
விஜய்ன்னா ஆதி - இவன்
ரஜினியில் பாதி..!!"

குறிப்பாக கடைசி வரியைப் படித்ததும் எனக்குக் கடுப்பாகி விட்டது. தலைவர் பாபாவில் சொதப்பிய காலகட்டத்தில் இவனுங்க "சூப்பர் ஸ்டார் நாற்காலி எனக்கு வேண்டும்!", "நான் தான் அடுத்த சூப்பர் ஸ்டார்" என்றெல்லாம் கண்ணு மண்ணு தெரியாமல் மிதப்பிலே துள்ளிக் கொண்டிருந்ததைக் கூட ஓரளவு ஒப்புக் கொள்ளலாம். ஆனால் அவர் சந்திரமுகி என்று ஒரு ட்ரிபிள் செஞ்சுரி அடித்து இவர்கள் கற்பனைக்கு ஒரு மெகா ஆப்பு வைத்து விட்டு, இப்போது சிவாஜி என்று ஷங்கர்-ஏ.வி.எம்.மோடு கூட்டணி சேர்ந்து கலக்கத் துவங்கியிருக்கும் வேளையில் எதுக்கு இந்த வெட்டி அலம்பல் என்று செம கடுப்பு. அதனால் படத்தைப் பார்க்காமல் திரும்பி விட்டேன்.

மறுநாள் சென்னை திரும்பிய பிறகு ஒரே யோசனையாக இருந்தது. 'முன் வைத்த காலை பின் வைப்பதா மறத் தமிழனின் வீரம்?' என்று உள் மனது கேட்டுக் கொண்டே இருந்தது. சரி, படத்தைப் பார்த்துத் தொலைப்போம் என்று முடிவு செய்து துணிந்து திரையரங்கினுள் சென்று விட்டேன்.

பொருளுரை:

நடிகர்கள்: விஜய், த்ரிஷா, விவேக், பிரகாஷ்ராஜ், நாசர்
இசை: வித்யாசாகர்
இயக்கம்: ரமணா

அந்தன் ஒக்கடே என்ற தெலுங்கு படத்தின் ரீமேக் ஆதி. ஆந்திராக்காரர்களை நாம் சும்மா 'மழைப் பாட்டில் மஞ்சள் உடையில் கதாநாயகியை ஆட விடுபவர்கள்' என்று சொல்லிக் கொண்டிருக்கிறோம். ஆனால் அவர்களிடம் சரக்கு இல்லாமல் இல்லை. ஆக்ஷன் படத்திற்கு ஏற்ற விறுவிறுப்பான திரைக்கதை அமைப்பதில் அவர்கள் அசகாய் சூரர்களாய் இருக்கிறார்கள். அந்த வகையில் கதையும் திரைக்கதையும் நல்ல பொழுதுபோக்கு திரைப்படத்துக்கு ஏற்ற வகையில் இருக்கின்றன. ஆனால் நமக்கு எரிச்சல் எப்போது வருகிறதென்றால், அதை சரியாக எடுக்காமல் சொதப்பித் தொலைக்கும் போது தான்.

விஜய் படம் எனும்போது சில எதிர்பார்ப்புகள் உள்ளன. விஜய்யைப் பொருத்த வரையில் நான் ஒரு நியூட்ரல் பார்வையாளனே. எனக்கே கூட விஜய் அறிமுகம் ஆகும் போது ஏதேனும் பாடலுக்கு ந்ன்றாக நடனம் ஆடியபடி வந்தால் மிகப் பிடிக்கும். அதிலும் இயக்குனர் ரமணா, தன் திருமலை படத்தில் 'தாம்தக்க தீம்தக்க' என்ற பாடல் மூலம் விஜய்யின் நடனத் திறனை முழுமையாக வெளிக் கொணர்ந்தவர்களில் ஒருவர். அவரது இந்தப் படத்தில் அறிமுகப் பாடலில் விஜய் ஏனோ தானோவென்று மழையில் நனைந்து கொன்டு ஆடுவதைப் பார்க்கையில் கலவரமாயிருக்கிறது. விஜய்யின் நடனத் திறமையை படத்தில் எந்தப் பாட்டிலுமே பயன்படுத்திக் கொள்ளவில்லை. த்ரிஷாவுடனான டூயட்களிலும் கூட நடன அமைப்பு சொதப்புகிறது. 'அப்படி போடு' ஆடிய ஜோடியா இது? 'கட்டு கட்டு கீரைக்கட்டு' ஆடிய கால்களா இவை? வெகு ஏமாற்றம்.

சரி, நடனம் தான் அப்படி என்றால் நகைச்சுவையும் வேஸ்ட். விவேக் முதல் பாதியில் சில காட்சிகள் வருகிறார். யூனிவர்சிட்டி படத்தில் செய்த ஆல்தொட்ட பூபதி என்ற கல்லூரி தாதா பிட்டை இங்கே புல்லட் என்ற பெயரில் மறுபடி ஓட்டுகிறார். "ஷூ தான் ரீபோக்கு. அதைப் போட்டிருக்கிற ஆள் பொறம்போக்கு" என்று அவர் சொல்லும் பஞ்ச் டயலாக் நன்றாகத் தான் இருக்கிறது என்றாலும், அலுப்பையே ஏற்படுத்துகிறது. மணிவண்ணன் போன்றோர் வரும் காட்சிகளும் மோசமாக இருக்கின்றன. விஜய் கூட ஓரளவு ரசிக்கும்படி நகைச்சுவை செய்யக் கூடியவர் தான். அதையும் பயன்படுத்திக் கொள்ளவில்லை.

ஏதோ வில்லன்களுடன் சவால் விட்டு ஜெயிக்கும் காட்சிகளில் மட்டும் விஜய் பிரமாதப் படுத்துகிறார். இருந்தாலும், சொடக்குப் போட்டு சவால் விடுவது, எதிரியின் வீட்டுக்கே போய் சண்டையில் ஈடுபடுவது ஆகியவை பழகிப் போய்விட்டன. வேறு ஏதாவது வித்தியாசமாக செய்ய முயன்றால் நன்றாக இருக்கும். நடுநடுவே வில்லனே விஜய்யை சிலாகித்துப் பேசுவது போன்று வலிந்து திணிக்கப்பட்ட வசனங்கள் மேலும் எரிச்சல் ஏற்படுத்துகின்றன.

'த்ரிஷாவுக்கு வழக்கமான வந்து போகும் பாத்திரம் அல்ல, அருமையான ரோல்' என்று பேட்டிகளில் படித்து எதிர்பார்ப்போடு போனேன். அது என்னமோ அருமையான ரோல் தான். ஆனால் சட்டியில் இல்லாமல் அகப்பையில் வருவது எங்ஙனம்? த்ரிஷா பேசாமல் வழக்கமான வந்து போகும் பாத்திரங்களையே ஏற்கலாம்.

விஜய்யும் த்ரிஷாவும் தங்கள் பழைய வீட்டில் நின்று குழந்தைப் பருவத்தைக் கற்பனை செய்து பார்க்கும் ஐந்து நிமிட காட்சியில் பிண்ணனி இசையில் வித்யாசாகர் கலக்கியிருக்கிறார். வெல்டன். ஆனால் பாடல்களில் வழக்கமான உற்சாகம் இல்லை.

பிரகாஷ்ராஜ், லிவிங்ஸ்டன், விஜயகுமார் போன்றோர் ஃப்ளாஷ்பேக்கில் வருகின்றன. அவர்களின் பங்களிப்பு குறித்து கூறும் அளவுக்கு அதில் நீளமும் இல்லை, ஆழமும் இல்லை.

பிரதான வில்லன் ஆர்.டி.எக்ஸ். செய்யும் முகபாவனைகளும் நடிப்பும் நன்றாகவே இருக்கிறது.

முடிவுரை:

மொத்தத்தில் எனக்கு இந்தப் படம் திரைக்கதை தவிர மற்ற எந்த அம்சத்திலும் திருப்தி அளிக்கவில்லை. மதுரையில் பின் வைத்த காலை சென்னையிலும் அப்படியே விட்டிருக்கலாம். மாறாக முன் வைத்து வம்பை விலை கொடுத்து வாங்கி விட்டேன்.
Old Commenting System: |

Very Old Commenting System:

சரவணா

நடிகர்கள்: சிம்பு, ஜோதிகா, பிரகாஷ்ராஜ், நாகேஷ், விவேக்
இசை: ஸ்ரீகாந்த் தேவா
இயக்கம்: கே.எஸ்.ரவிகுமார்

வழக்கமான கே.எஸ்.ரவிகுமாரின் MTR மசாலா பிராண்ட் திரைப்படம். தமிழகத்தில் இன்னமும் சமூகத்தில் நிலவிக் கொண்டிருக்கும் அரிவாள் வெட்டு குத்து, ஜாதி வெறி கலாசாரம் பற்றிய ஒரு திரைப்படம். கூடவே தன்னைத் தானே மன்மத --- என்று நினைத்துக் கொள்ளும் சிம்புவும் இணைந்திருப்பதால் படம் எந்த மாதிரி இருக்கும் என்று நீங்களே ஊகித்துக் கொள்ளலாம்.

சிம்புவும் அவரது நண்பரும் பெங்களூரில் படித்துக் கொண்டிருக்கிறார்கள். நண்பனின் தங்கை ஜோதிகா. அவர் லண்டனில் படித்துக் கொண்டிருப்பவர். அவரை வீடியோவில் பார்த்துக் காதல் வசப்பட்டு விடுகிறார் சிம்பு. படிப்பு முடித்து சிம்பு சென்னைக்குத் திரும்பும் போது கலங்கிய விழிகளுடனான ஜோதிகாவோடு வந்து இறங்கி வீட்டிலிருப்பவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறார். அவர்களின் பின்கதை என்ன, இருவரும் காதலிக்கிறார்களா, இணைகிறார்களா, இன்ன பிற கேள்விகளுக்கு விடை அளிப்பது திரைப்படம்.

திரைக்கதை ஓரளவு போரடிக்காமல் நகர்கிறது என்பதோடு அந்தப் பேச்சை விட்டு இடலாம்.

சிம்புவின் அறிமுகம் வழக்கம் போல தனுஷுக்கு சில செய்திகளைத் தெரிவிப்பதோடு ஆரம்பமாகிறது. என்றைக்கு நிறுத்தித் தொலைக்கப் போறாங்களோ? சிம்புவின் மேல் ஒரு தலையாகக் காதல் கொள்ளும் மாமா பெண், ஒரு கனவுப் பாடலுக்கு பயன்பட்டிருக்கிறார். மற்றபடி சிம்பு நடிப்பு, காமெடி, சண்டைக் காட்சி எல்லாவற்றிலும் வஞ்சனை இல்லாமல் சூப்பர் ஸ்டாரைக் காப்பியடித்திருக்கிறார். வேகமான வசன உச்சரிப்பு, ஸ்டைல், என்று எல்லாமே. வயிறு எரிந்தது எனக்கு. ஆனாலும், நண்பனின் தங்கையைக் கவரும் விதமாக சிம்பு செய்யும் சில சேஷ்டைகள் ரசிக்கும்படியாகவே இருக்கிறது. நடனத்தில் வழக்கம் போல் பின்னியெடுத்திருக்கிறார். அதற்காகப் பாராட்டலாம்.

அழகான ஜோதிகா. வழக்கம் போல. ஆனால் மன்மதன் படத்தை விட தற்போது சற்றே வெயிட் போட்டிருப்பதால், மன்மதன் அளவுக்கு சிம்புவுக்குப் பொருத்தமான ஜோடி என்று சொல்ல முடியாது. (கல்யாண சேதி முடிவு செய்து விட்ட பூரிப்போ?) லண்டனிலிருந்து ஊர் திரும்பும் ஜோதிகாவுக்கு அவரது அண்ணி ஆரத்தி எடுக்கும் போது 'நாய் கண்ணு, நரி கண்ணு, பேய் கண்ணு, பூதம் கண்ணு' என்று ஒவ்வொன்றாகச் சொல்ல, அதற்கு ஏற்றாற்போல் ஜோதிகா தன் முழியை மாற்றி மாற்றி வித்தை காட்டுவது அருமை.

படத்தின் மிகப் பெரிய ஆறுதல், ஜோதிகாவின் அண்ணனாக வரும் பிரகாஷ்ராஜ். குணசித்திர வேடத்தில் பட்டையைக் கிளப்பியிருக்கிறார். ஊர்த் திருவிழாவின் போது சிம்புவுக்கு வாழ்த்து சொல்லிவிட்டு தன் தம்பியின் தோள் தட்டிச் செல்லும் ஒரு காட்சியில் என்னமாய் முகபாவங்கள் காட்டுகிறார். அவருக்கு ஒரு சல்யூட். அவரும் அவரது மனைவியும் BITS பிலானியில் படிக்கும் போது காதலித்துத் திருமணம் செய்து கொண்டதாகச் சொல்லும் போது தியேட்டரில் பலத்த சிரிப்பலைகள். அந்தக் கலப்புத் திருமணத்தால் ஜாதிக் கலவரங்கள் நடந்து, இரு ஊர்கள் விரோதித்துக் கொள்வதே படத்தின் மையக் கரு என்பதால் பொறுத்துக் கொள்ளலாம்.

திரைக்கதை அமைக்கும் போது பார்வையாளர்களுக்கு அரிவாள் கலாசாரத்தின் தீவிரத்தை உணர்த்தும் படியான காட்சிகளுக்கு ரொம்ப மண்டையைப் பிய்த்து யோசித்திருக்கிறார்கள் என்று புரிகிறது. அந்த ஊரின் கோவிலில் கடவுளுக்கு நேர்த்திக்கடனாக அரிவாளைத் தான் செலுத்துகிறார்கள். கோவில் மண்டபங்கள் முழுக்க அரிவாள்களாகக் குவித்து ஆயுதக் கிடங்கு மாதிரி இருக்கிறது. 'என்னடா நடக்குது இங்கே?' என்று தீவிர அதிர்ச்சிக்குள்ளாக்கும் காட்சிகள் இவை.

ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் பாடல்களும் பிண்ணனி இசையும் வெகு சுமார். கடைசியாக வரும் 'என்னை மட்டும் வேணாம் சொல்லாதே' பாடல் இன்னொரு மன்மதன் - என் ஆசை மைதிலியே. சிம்புவும் ஜோவும் கலந்து கட்டி ஆட்டத்தில் ஜாலம் செய்கிறார்கள். வெரிகுட்.

சிம்புவின் தாத்தாவாக நாகேஷ் செய்யும் கூத்துகள் கொஞ்ச நேரம் சிரிக்க வைக்கின்றன. விவேக் சுத்தம். மூன்று காட்சிகளில் தலையை மட்டும் காட்டிவிட்டு எஸ்கேப் ஆகி விடுகிறார்.

மொத்தத்தில் ஒரு சுமாரான, வழக்கமான, பொழுதைப் போக்கும் படம்.
Old Commenting System: |

Very Old Commenting System: