பொன்னியின் செல்வன்

நடிகர்கள்: ரவி கிருஷ்ணா, கோபிகா, ரேவதி, பிரகாஷ்ராஜ்
இசை: வித்யாசாகர்
இயக்கம்: ராதாபாரதி

திரைப்படத்திலே ஒரு காட்சியைப் பார்க்கும் போது, 'உணர்ச்சிப்பூர்வமான காட்சி' என்று பாராட்டுவதற்கும், 'நெஞ்சை நக்கிட்டான்பா' என்று நக்கலாகச் சொல்வதற்கும் ஒரு சிறிய மயிரிழை அளவு வித்தியாசம் மட்டுமே. இப்படி இருக்கையில் திரைப்படத்தின் பிற்பாதி முழுவதுமே நெஞ்சை நக்கும் தன்மையதாய் இருப்பது பொன்னியின் செல்வன் படத்தின் பெருங்குறையாக எனக்குப் படுகிறது. இயக்குனரின் intention-ல் எந்தத் தவறும் இல்லை. output தான் சொதப்புகிறது.

ரவிகிருஷ்ணாவுக்கு தெய்வமகன் சிவாஜி ரேஞ்சுக்கு ஒரு கேரக்டர். சிறு வயதில் நடக்கும் விபத்தினால் இடது கன்னம் முழுவது அகோரமாக இருக்கும் ஒரு பையன். அதனால் அக்கம்பக்கத்துச் சிறுவர்களின் கேலிப் பேச்சுக்கு ஆளாகிறார். பக்கத்து விட்டுப் பெண் தன் மகளுக்கு சோறூட்டும் போது கூட, 'ஒழுங்கா சாப்பிடாட்டி வேணு கிட்ட பிடிச்சுக் கொடுத்துடுவேன்' என்று சொல்லும் அளவுக்கு இருக்கிறது அவரது பரிதாபம். ஆனாலும் பார்க்கும் நமக்கு அவர் மேல் கொஞ்சம் கூடப் பரிதாபம் வராத அளவுக்கு ஆள் கொழுக் மொழுக் என்று
அம்சமாகத் தான் இருக்கிறார். நம் கண்ணில் தான் கோளாறா என்று தெரியவில்லை. அல்லது திருமண வயதில் எனக்கு யாரைப் பார்த்தாலும் அழகாகத் தெரிகிறதோ என்னமோ :-))

இருந்தாலும் ரவிகிருஷ்ணா ஒரு தங்கமான பையன். தன்னைச் சுற்றியிருக்கும் அனைவருக்கும் நன்மைகளைச் செய்து கொண்டு தன் பாட்டுக்கு இருக்கிறார். ப்ளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டால் அழகாகி விடமுடியும் என்று யாரோ சொல்லக் கேட்டு அதிலே முழுமையாக மூழ்கிப் போகிறார். தன் இயல்பான சுபாவம் மாறிப் போய் ஆப்பரேஷனுக்குப் பணம் சேர்க்கும் ஆர்வத்தில் எல்லோரிடமும் எரிச்சல் காட்டுகிறார். அக்காவைக் கட்டிக் கொடுத்த வீட்டில் நடைபெறும் விசேஷத்துக்கு அன்பளிப்பு செய்ய வேண்டிய நியாயமான செலவுகளுக்குக் கூட எரிந்து விழுகிறார். பிஸ்ஸா டெலிவரி வேலை செய்யும் இடத்தில் சந்தித்து ஆசை கொள்ளும் அழகான பெண்ணொருத்தியால் கிடைக்கும் அவமானம் அவரை மேலும் மேலும் அந்தப் பாதையில் வெறி கொண்டவராய் விரட்டுகிறது. இறுதியில் தன் தாயையே தன் பொறுமையிழந்த நிலைக்குப் பலி கொடுத்து அக அழகின் உயர்வைப் புரிந்து கொள்கிறார்.

ஓரளவு நல்ல கதையமைப்பும் கதை மாந்தர்களின் சிறப்பான நடிப்பும் வெளிப்பட்டும் கூட திரைப்படம் என் மனதைக் கவராததற்கு முக்கிய காரணம், படம் முழுக்க நாமும் ரவிகிருஷ்ணா போலவே முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு உட்கார வேண்டியிருக்கிறது. முதல் படமான 'அழகிய தீயே'வில் இதே போன்ற கனமான கதையை என்ன அழகாய் நகைச்சுவை பொங்க அளித்திருந்தார் ராதாபாரதி? அந்த எதிர்பார்ப்போடு போய் அமர்ந்த என் பொறுமையை ரொம்பவே சோதித்தது இந்தப் படம். வசந்த மாளிகையில் சிவாஜி சொன்னது போல் படத்தைப் பார்க்க
உட்கார்ந்தவர்களுக்கு 'ஆயிரம் இருந்தும் அழகுகள் இருந்தும் no peace of mind!!'

ரவி கிருஷ்ணாவின் நடிப்பு பரவாயில்லை ரகம். தன்னைக் கேலி செய்பவர்கள் மீது பாய்ந்து குதறும் காட்சியில் தத்ரூபமாகச் செய்திருக்கிறார். மனிதருக்கு சுட்டுப் போட்டாலும் காதல் முக பாவம் வர மறுக்கிறது.

ரேவதி அருமையாகச் செய்திருக்கிறார். படத்திலேயே சீனியர் நடிகை அவர் தான் என்பதால் எல்லோரையும் அநாயாசமாகத் தூக்கி சாப்பிடுகிறார். பாவம், விழலுக்கு இறைத்த நீர்.

கோபிகா பக்கத்து வீட்டுப் பெண் மாதிரி இருக்கிறார். படத்திலும் நாயகனுக்குப் பக்கத்து விட்டுப் பெண் தான். பொருத்தமான கேரக்டர். நல்ல வாயாடியாக இருந்தாலும் பாந்தமாக இருக்கிறது.

பிரகாஷ்ராஜ் ஒரு தத்துவ ஞானி போல் அறிமுகமாகிறார். ஆனாலும் கடைசி வரை நம் நெஞ்சில் நிற்பது மாதிரி அவருக்கு எந்த ஒரு காட்சியும் இல்லாமல் போவது ஏமாற்றத்தை அளிக்கிறது. கொடுத்த அளவில் நிறைவாகச் செய்திருக்கிறார்.

வலிந்து திணித்த சண்டைக் காட்சியும், சிவப்பு விளக்குப் பகுதி ஆடல்-பாடலும் எரிச்சலைக் கிளப்புகின்றன. தமிழ் இயக்குனர்கள் என்றைக்குத் தான் இந்தக் கெட்ட பழக்கத்தை விடப் போகிறார்களோ தெரியவில்லை.

இயக்குனர் ராதாபாரதி, தமிழ் வலைப்பதிவராக இருக்க வாய்ப்புகள் அதிகம். முகமூடிகளின் (Face masks) மேல் அவருக்கு அப்படி ஒரு ஆசை. முகமூடிக்கு இந்தப் படத்தில் ஒரு முக்கிய பாத்திரம். முதல் படத்திலும் கூட சில பாடல் காட்சிகளில் இந்த முகமூடியும் வேடமும் இடம்பெறும்.

பாடல்களுக்கான இசையில் பெரிய பிரமாதமெல்லாம் எனக்குத் தெரியவில்லை. இறுதிக் காட்சிகளில் பின்னணி இசை அருமை.

சில இடங்களில் வசனம் படுத்தினாலும் (உதாரணம்: நாம காம்ப்ளக்ஸ்-ல குடியிருக்கலாம். நமக்குள்ள காம்ப்ளக்ஸ் குடியிருக்கக் கூடாது!!) மற்ற இடங்களில் ஓக்கே சொல்லலாம்.

தரமான படம் தான். என்ன, லிட்டர் லிட்டராகக் கண்ணீர் வருவதை மட்டும் கொஞ்சம் பொறுத்துக் கொள்ள வேண்டும்.
Old Commenting System: |

Very Old Commenting System: