சந்திரமுகி

பகுதி - 1: சந்திரமுகிக்கு முன்

காலையில் எழுந்ததுமே டிக்கெட்டுக்கு சொல்லி வைத்திருந்த நண்பருக்கு ஃபோன் அடித்து விட்டேன்.

"தலைவா, தாவரக்கரெ லக்ஷ்மி தியேட்டரில காலைல ஒன்பது மணி ஷோவுக்கு டிக்கெட் இருக்கு வர்றீங்களா?" என்றார்.

"வராம?"

அவசரமாய்க் குளித்து முடித்துக் கிளம்பிய போது, இன்னும் தூங்கிக் கொண்டிருந்த அறை நண்பன், தூக்கக் கலக்கத்தில், "எங்க மச்சான் கோயிலுக்கா?" என்றான். அவனுக்குத் தமிழ்ப் புத்தாண்டு ஞாபகம்.

நான் திரும்பிப் பார்த்துச் சிரித்து, "ஆமா!" என்றேன்.

சூப்பர் ஸ்டார் படம் ரிலீஸாகும் தியேட்டர் நமக்கெல்லாம் கோயில் இல்லாமல் வேற என்ன?

-o0o-

நண்பரைச் சந்தித்து டிக்கெட்டைப் பெற்றுக் கொண்டு, பக்கத்திலிருந்த மடிவாலா ஆஞ்சநேயருக்கு ஒரு கும்பிடைப் போட்டு விட்டு தியேட்டரை நோக்கி நடந்தோம். தியேட்டர் வாசலில் கூட்டம் மிரள வைத்தது. ரஜினியின் மாஜிக் இன்னும் மாறாமலிருப்பதைக் காட்டியது. திருச்சியிலிருந்து 'முரட்டு பக்தர்கள்' அனுப்பியிருந்த 120 அடி நீள போஸ்டர் ஒட்டப்பட்டு கண்ணைப் பறித்துக் கொண்டிருந்தது. மற்ற பட போஸ்டர்களுக்கெல்லாம் வாய்ப்பே இல்லை.

சூப்பர் ஸ்டார் படத்துக்கெல்லாம் தியேட்டருக்குள் கேட் வழியாக நுழைந்தால் அவ்வளவு மரியாதையாக இருக்காது என்பதால் காம்பவுண்டு சுவர் ஏறிக் குதித்து வளாகத்தினுள் நுழைந்தோம். கையில் தடிகளுடன் சுற்றிக் கொண்டிருந்தது தியேட்டர் படை. அடி, கிடி வாங்காமல் தப்பித்து நுழைந்து க்யூவில் நின்று, ஒரு வழியாக தியேட்டருக்குள் நுழைந்தோம். அரங்கத்தின் நடுவில் ஒரு முழு வரிசையைப் பிடித்துக் கொண்டோம். படம் துவங்க இன்னும் அரை மணி நேரம் இருந்தது. அரங்கத்தினுள் ஒரே திருவிழா தோற்றம். அது சரி, திருவிழாவுகுத் திருவிழா வருவதா சூப்பர் ஸ்டார் படம்? சூப்பர் ஸ்டார் படம் எப்ப வருதோ அப்ப தான் திருவிழா.

திடீரென்று ஒருவர் கூவிக் கொண்டே ஓடி வந்தார்: "பொட்டி வந்திருச்சுப்பா!!" விஸில் தூள் பறந்தது. எல்லோரும் ஆப்பரேட்டர் ரூம் நோக்கி வழி மேல் விழி வைத்துக் காத்திருக்க, அவர் 'ராஜாதி ராஜ.. ராஜ கம்பீர..' ரேஞ்சுக்கு ஒரு என்ட்ரி கொடுத்தார். அவர் ரீலை எடுத்து மெஷினில் மாட்டி சுற்றத் தொடங்கியது தான் தாமதம், அடுத்த ரவுண்டு விஸில் பட்டையைக் கிளப்பியது.

சிவாஜி ப்ரொடக்ஷன்ஸ் பெயர் போட்டு முடித்ததும் விளக்குகளால் "SUPER STAR" என்று வருமே, அது ஆரம்பித்து அடுத்த விநாடி தியேட்டருக்குள் ஒரே ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம், கும்மாளம். அட, இதையெல்லாம் எழுதிப் புரியவைக்க முடியாதுங்க. இதெல்லாம் பார்த்து, சேர்ந்து உற்சாகப் பட வேண்டிய விஷயம்.

Image hosted by Photobucket.com


பகுதி - 2: சந்திரமுகி

நடிகர்கள்: ரஜினி, பிரபு, ஜோதிகா, நயன் தாரா, வடிவேலு, நாசர்
இசை: வித்யாசாகர்
இயக்கம்: பி.வாசு

ரஜினி என்ற திரை ஆளுமையின் பின்னால் இருக்கின்ற மாயாஜாலத்தைப் புரிந்து கொண்டு படம் எடுத்தால், எப்படிப்பட்ட கதையும் ரசிப்புக்குரியதாய் இருக்கும். அப்படி மூன்று படம் எடுத்திருக்கும் பி.வாசு, இந்தப் படத்தை சொதப்பியிருந்தால் மட்டுமே அது செய்தி. அப்படி எதுவும் தவறு நடக்கவில்லையென்பதால் சந்திரமுகி ரசிகர், பொதுஜனம் ஆகிய இரு தரப்பையும் திருப்திப் படுத்தும் வகையில் இருக்கிறது.

ஸைக்கலாஜிக்கல் த்ரில்லர் என்றெல்லாம் சொல்ல முடியாத எளிமையான கதையும் திரைக்கதையும் தான் சந்திரமுகியில். அந்த எளிமையே அதன் பலமாகவும் இருக்கிறது. ஓவராக குழப்பி மண்டை காய வைக்காமல் ஸ்ப்ளிட் பெர்ஸனாலிட்டி என்று உடனடியாக மெயின் ரூட்டைப் பிடித்து விடுகிறார்கள்.

எப்படியும் எல்லோரும் படத்தைப் பார்க்கப் போகிறீர்கள், நான் எதற்குக் கதை எல்லாம் சொல்லிக் கொண்டு? அதெல்லாம் இருக்கட்டும், மற்ற விஷயங்களைப் பார்ப்போம். ரஜினியின் படத்தில் பெரிதும் எதிர்பார்ப்புக்கு உள்ளாவது அறிமுகக் காட்சியும் அறிமுகப் பாடலும். அறிமுகக் காட்சி ஒரு சண்டையோடு துவங்குவதால் ரசிகர்களுக்கு நல்ல தீனி. ஆனால் தேவுடா பாட்டு எல்லோரையும் கவரும் விதத்தில் கும்மென்று இருக்கிறது. மெஜஸ்டிக் என்று சொல்லத்தக்க பின்னணி இசையுடன் மாட்டு வண்டியில் ஸ்டைலாகக் கால் மேல் கால் போட்டுப் படுத்தபடி ரஜினி நுழையும் போதே அரங்கம் பரபரப்பின் உச்சங்களைத் தொடுகிறது. எஸ்.பி.பி-க்கு சொல்லியா தர வேண்டும்? கலக்குகிறார் மனிதர். மொத்தத்தில் தேவுடா பாட்டு ரொம்ப நாளுக்குப் பிறகு ரசிகர்களுக்கு ஹார்லிக்ஸ், பூஸ்ட், விவா, மால்டோவா என்று சகல விதமான உற்சாக சத்துப் பொருட்களைக் கலந்து கட்டி ஊட்டுகிறது.

காமெடியில் வடிவேலு பின்னி எடுக்கிறார். சில 'ஒரு மாதிரி' காட்சிகளைத் தவிர்த்திருக்கலாம் என்று தோன்றினாலும், மொத்தத்தில் ரசிக்கும்படி இருக்கிறது. குறிப்பிட்டு சொல்ல வேண்டிய ஒரு காட்சி, 'ஆவிகள் வரும் போது என்னவெல்லாம் நடக்கும்' என்று ரஜினி வடிவேலுவிடம் ஒவ்வொன்றாய் விளக்க, அவை ஒவ்வொன்றாய் நடக்க, இருவரும் பயப்படும் காட்சி. என்னமாய் புகுந்து விளையாடுகிறார்கள் இருவரும்? Outstanding.!!

பிரபுவுக்கு வேலையே இல்லை. வந்து போகிறார். முதல் காட்சியில் ரஜினியைப் பார்த்து, "எப்படி இந்த வயசிலயும் ட்ரிம்மா இருக்கீங்க?" என்று கேட்க, ரஜினி அவரைப் பார்த்து, "கண்ணா! நான் குண்டானா நல்லா இருக்காது, நீ இளைச்சா நல்லா இருக்காது" என்று கலாய்ப்பது சுவாரஸ்யம்.

Which reminds me, அவ்வ்வ்வ்வ்வளவு இளமையாகத் தெரிகிறார் ரஜினி. மாமனார் ரஜினியும் மருமகன் தனுஷும் பக்கத்துல பக்கத்துல நின்றால் அண்ணன் தம்பி மாதிரி இருப்பார்கள். ரஜினி தம்பி மாதிரி இருப்பார்..!! (அடே மீனாக்ஸ், போதும், உனக்கே இது ஓவராத் தெரியலையா? யாராவது கத்தியைத் தூக்கிக்கிட்டு வர்றதுக்குள்ள நீயா நிறுத்திடு - அறிவுரை அளிப்பது மிஸ்டர் மனசாட்சி)

அப்புறம் நம்ம ஆளு ஜோதிகா. கடைசி முப்பது நிமிடங்கள் தான் படத்துல முன்னணிக்கு வருகிறார். ஆனாலும் மனசில் நிற்கும் பெர்ஃபார்மன்ஸ். ஷோபனா, சௌந்தர்யா போன்ற நடனமணிகள் பிற மொழிகளில் ஆடிய க்ளைமேக்ஸ் பரதநாட்டியத்தை நம்ம குத்தாட்ட ஸ்பெஷலிஸ்ட் எப்படி சமாளிக்கப் போறாங்களோன்னு பயந்துகிட்டு இருந்தேன். டைரக்டர் பி.வாசு சமயோசிதமா ஒரு சமாளிஃபிகேஷன் பண்ணியிருக்காரு.

ஜோதிகாவின் இறுதிக்கட்ட மேக்கப்பை இன்னும் கொஞ்சம் குறைத்துப் போட்டிருக்கலாம். ஓவராகத் தோன்றுகிறது. ஆனாலும் அவர் முறைத்தபடி "லக்கலக்கலக்கலக்க" என்று ஆவேசமாய்க் கத்தும் போது ஆடியன்ஸ் கை தட்டலை மொத்தமாக அள்ளுகிறார்.

நயன் தாரா நல்ல அழகு. குறிப்பாக துருக்கியில் எடுக்கப்பட்டுள்ள "கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம்" பாடல் நன்றாக இருக்கிறது. நல்ல விஷுவல்கள். மற்றபடி அவருக்கு செய்வதற்கு ஒன்றும் பெரிதாக இல்லை. அவ்வப்போது ரஜினியுடன் சண்டை பிடிக்கிறார். காதல் வயப்படுகிறார், காணாமல் போகிறார்.

நாசர், செம்மீன் ஷீலா போன்றோர் சம்பிரதாயத்துக்கு இருக்கிறார்கள். குறிப்பாக ஷீலாவும், அவரது பணியாளும் பெரிய பில்டப்பிற்குப் பிறகு அம்போவென்று போகிறார்கள்.

படத்தில் சுவை கூட்டியிருக்கும் இன்னொரு அம்சம், கிராஃபிக்ஸ். குறிப்பாக இறுதிக்காட்சிகளில் ஜோவின் ஸ்ப்ளிட் பெர்சனாலிட்டியைக் காட்டும் விதத்தில் நல்ல பயன்பாடு.

அடடா, பாடல்களைப் பற்றிச் சொல்ல மறந்து விட்டேனோ? எல்லாப் பாடல்களுமே பொருத்தமான் இடங்களில் நிறைவாக இருக்கின்றன. நல்ல படமாக்கம். குறிப்பாக முதல் பாதியில் மூன்று பாடல்களும் படத்தைத் தொய்வில்லாமல் கொண்டு செல்ல உதவுகின்றன. வித்யாசாகர் பின்னணி இசையில் ஒன்றும் பெரிதாய்ப் பிரமாதப்படுத்தி விடவில்லை. தேவையான அளவுக்குச் செய்திருக்கிறார். பளபளவென பட்டு வேட்டி சட்டையில் முதல் பாதியிலும், குளுகுளுவென இளமைத் துள்ளலுடன் இரண்டாம் பாதியிலும் ரஜினி கலக்கியிருக்கும் "அண்ணனோட பாட்டு" தேவுடாவுக்கு அடுத்து இரண்டாம் இடத்தில்.

சண்டைகளைக் குறைத்து, காமெடியை அதிகரித்து முழு நீள என்டெர்டெயினராக இருக்கிறது சந்திரமுகி.

ரசிக்க, ருசிக்க என்டெர்டெயினர் கொடுப்பதில் ரஜினியை அடிக்க யாரிருக்கா? எவருமில்லை.
Old Commenting System: |

Very Old Commenting System: