பேரழகன்

நடிகர்கள்: சூர்யா (2), ஜோதிகா (2), விவேக், மனோரமா
இசை: யுவன் ஷங்கர் ராஜா
இயக்கம்: சசி ஷ்ங்கர்

கூனன் சின்னாவாக ஒரு சூர்யா. எஸ்.டி.டி பூத் வைத்து நடத்திக் கொண்டிருக்கிறார், "கிட்டத்தட்ட அரசாங்க வேலை மாதிரி" என்று சொல்லித் திரிந்தபடி. அவரது நண்பர், மேரேஜ் அஸெம்ப்ளர் விவேக். கார்த்திக் - ப்ரியா என்பது கல்லூரியில் பயிலும் ஒரு சூர்யா - ஜோதிகா காதல் ஜோடி. ஜோதிகாவின் அப்பா போலீஸ் மேலதிகாரி, சூர்யாவின் அப்பா அவருக்குக் கீழதிகாரி. மேலதிகாரி காதலை எதிர்க்கிறார். ஓடிப்போயி கல்யாணந்தான் கட்டிக் கொள்ள இருவரும் முடிவெடுத்து, அதற்கு சின்னாவின் உதவியோடு முயல்கிறார்கள். போகும் வழியில் கதையின் பார்ட்-டைம் வில்லனால் ஜோதிகா கொல்லப்படுகிறார். இதற்கிடையில் கண் தெரியாத செண்பகம் என்றொரு ஜோதிகா, சின்னாவிடம் நட்பு கொண்டு வலம் வருகிறார். இறந்த ஜோதிகாவின் கண்களை செண்பகத்துக்கு வைக்க, அவருக்குப் பார்வை வந்து விடுகிறது. இப்போது பார்வை கொடுத்த சின்னா, ப்ரியாவின் கண்களுக்குச் சொந்தக்காரன் கார்த்திக் என்று இருவர் போட்டிக்கிடையே செண்பகம்.

ட்ரேட்மார்க் ஏ.வி.எம் திரைப்படம். பதினைந்து நிமிடம் காமெடி, ஐந்து நிமிடம் சோகம் என்று மாறி மாறிப் பயணிக்கும் திரைக்கதை கொஞ்சம் பழசாகத் தோன்றினாலும், இது பார்க்க வேண்டிய படமாக இருப்பதற்குக் காரணம் மூன்று பேர்.

முதலில் சின்னாவாக வரும் கூனன் கதாபாத்திர சூர்யா. கொஞ்சமே கொஞ்சம் ஆண்டுகளில் இந்த மனிதரிடம் தான் எத்தனை வளர்ச்சி. அநாயாசமாக நடிப்பில் சில உச்சங்களைத் தொடும் கலையை இவர் எங்கு, எப்படிக் கைவரப்பெற்றார் என்பதை நினைத்து நான் இன்னும் பிரமித்துக் கொண்டிருக்கிறேன்.

சலிக்காத உற்சாகத்துடன் இவர் வளைய வரும் காட்சிகள் அனைத்திலும் ஜீவன் இருக்கிறது. குறிப்பாக க்ளைமாக்சுக்கு முந்தின காட்சியில், பார்வை பெற்ற ஜோதிகாவை இவர் பார்க்க வரும்போது, பார்வை கிடைத்து விட்டது பற்றிய மகிழ்ச்சியைத் தன் கண்களால் வெளிப்படுத்தி, அடுத்த கணமே தன்னை அவளுக்குப் பிடிக்காமல் போய்விடுமோ என்ற தாழ்வு உணர்ச்சியுடன் அதே கண்களில் கொஞ்சம் சோகத்தைக் காட்டிவிட்டுத் தலைகுனியும் காட்சி அபாரம். "நன்கு நடிக்கவும் தெரிந்த முன்னணி நடிகர்" என்ற தமிழ்த் திரையுலக ரேஸில் டாப் கியரில் முன்னேறுகிறார் சூர்யா. அவரது உழைப்புக்கு ஒரு ராயல் சல்யூட். (இதைப் பார்த்தாவது, பெயருக்கு முன்னால் பட்டப் பெயரைப் போட்டுக் கொண்டு விரல் சேஷ்டை காட்டிக் கொண்டிருப்பவர்கள் திருந்துதல் நலம்.)

"காதலுக்குப் பள்ளிக்கூடம் கட்டப் போறேன் நானடி" என்ற பாடலின் இடையில் இவர் போடும் உற்சாகத் தெம்மாங்கு ஆட்டம் பட்டையைக் கிளப்புகிறது.

அடுத்து கண்பார்வை இழந்த செண்பகமாக ஜோதிகா. பண்பட்ட நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். கண்களையும் முகத்தையும் வைத்துக் கொண்டு பலவித சேஸ்ஹ்டைகளை மற்ற படங்களில் செய்து பழகிய ஜோவுக்கு இப்படம் ஒரு வித்தியாசமான திருப்புமுனை. அதெல்லாம் எதுவும் இல்லாமலும் தன்னால் அழகானதொரு நடிப்பை வெளிப்படுத்த முடியும் என்று நிரூபித்திருக்கிறார். என் போன்ற ஜோதிகா ரசிகர்களுக்காக வழக்கமான ஜோவாக ப்ரியா, சில நேரமே வந்தாலும் மலையாளம் பேசிக் கொண்டு அழகாக வந்து போகிறார். குறிப்பாக பெண்பார்க்கும் காட்சி ஒன்றில் சந்தன கலர் சேலையில் அவர் வரும்போது, "தேவதைகள் இப்படித்தான் படைக்கப்படுகிறார்கள்" என்று பிரம்மா செய்முறை விளக்கம் அளித்தது போல் இருக்கிறார். ஹி ஹி..!!

அடுத்தவர் விவேக். குழந்தைவேலுவாக இவர் அடிக்கும் கமெண்ட்டுகள் அனைத்தும் சிரிப்பு சரவெடி. வசனகர்த்தா சிங்கம்புலியின் வசங்களின் உதவியோடு மனிதர் பின்னியெடுத்திருக்கிறார். முதல் பாதி முழுக்க தியேட்டரில் கைதட்டிக் கொண்டே இருந்தார்கள். அருமையான காமெடி.

கார்த்திக்காக வரும் சூர்யா கண்களில் வெறியைக் காட்டப் பட்டிருக்கும் அக்கறையில் இன்னும் கொஞ்சம் மற்ற வித பாடி லேங்வேஜிலும் காட்டியிருக்கலாம். ரொம்ப ஒட்டாதது போல் வந்து போகிறது இவரது கேரக்டர்.

இந்த மாதிரி இரட்டை வேடக் கதைகளில், நாயகர்கள் இருவரும் சகோதரர்கள் என்று காட்டிவிடுவது வழக்கமாதலால் கொஞ்சம் பயந்தபடியே தான் இருந்தேன். மனோரமா வேறு சின்னாவை வளர்க்கும் வளர்ப்புத் தாய் போல இருந்ததால் கிட்டத்தட்ட முடிவே செய்து விட்டேன். ஆனாலும் அப்படிக் காட்டாமல் நம் வயிற்றில் பால் வார்த்த இயக்குனருக்கு ஒரு ஓ.

முதல் சண்டைக் காட்சியில் ஒளிப்பதிவாளர் இரத்தினவேலு மிரட்டியிருக்கிறார். சூர்யா எதிராளியின் மேல் விடும் குத்து ஒவ்வொன்றும் நம் கன்னத்தில் விழுவது போல் இருக்கிறது. பாராட்டுக்கள். அம்புலிமாமா பாடலின் கான்செப்ட்டும் படமாக்கியிருக்கும் விதமும் பரம சுகம்.

யுவன் ்ஷங்கர் ராஜா பின்னணி இசையில் தன் தந்தையிடம் கற்றுக் கொள்ள இன்னும் நிறைய உண்டு. காதலுக்குப் பள்ளிக்கூடம் பாடல் மிக அருமையான ஒரு மேளதாளக் கச்சேரி.

முற்பகுதியில் நகைச்சுவை அழகன். பிற்பகுதியில் நடிப்புப் பேரழகன்.

சூர்யாவுக்கு ஓட்டுப் போட்டுத் தேர்ந்தெடுக்கும் விதமாகப் பார்க்க வேண்டிய படம்.
Old Commenting System: |

Very Old Commenting System: