எனக்கு 20 உனக்கு 18
நடிகர்கள்: தருண், த்ரிஷா, ஷ்ரேயா, விவேக், மணிவண்ணன்
இசை: ஏ. ஆர். ரஹ்மான்
இயக்கம்: ஏ. எம். ஜோதிகிருஷ்ணா
'எனக்கு 20 உனக்கு 18'-ல் ஆரம்பித்து 'எனக்கு 22 உனக்கு 20'-ல் வந்திருக்கும் படம். முதல் பத்து நிமிடங்கள் வசனமே இல்லை என்று சொல்லியிருந்தார்கள். நாயகனுக்கும் நாயகிக்கும் இடையே வசனம் இல்லை. மற்றபடி எல்லோரும் பேசிக் கொண்டு தான் இருக்கிறார்கள். ஜே ஜே, உன்னைப் பார்த்த நாள் முதல் மாதிரி இவர்களும் Serendipity ஆங்கிலப் படத்திலிருந்து கதையை சுட்டிருக்கிறார்கள்.. ஆனால் கொஞ்சம் தான்..
தருணும் த்ரிஷாவும் மும்பை-சென்னை ரயிலில் சந்திக்கிறார்கள். ஒருவரோடொருவர் பேசிக் கொள்வதில்லை.. சில தவறாகப் புரிந்துகொள்தல்கள், சில முறைப்புகள், சில சரியாகப் புரிந்துகொள்தல்கள், சில புன்னகைகள் என்று பேசிக்கொள்ளாமலேயே ஒரு understanding வந்து விடுகிறது ரெண்டு பேருக்கும்.
சென்னையில் இறங்கிப் போகும் போது கொஞ்சமாய் தைரியம் வந்து என்ன யாரென்று விசாரிப்பதற்குள் த்ரிஷாவின் அண்ணன் ரியாஸ் கான் வந்து அவரைக் கூட்டிப் போய் விடுகிறார். தருண் ஏதோ காலேஜில் மூன்றாம் ஆண்டு மாணவர் என்பதும் த்ரிஷா ஏதோ காலேஜில் முதலாம் ஆண்டு மாணவி என்பவை மட்டுமே பறிமாறிக்கொள்ளப்பட்ட தகவல்கள்.
சென்னையில் தருண் படிக்கும் கல்லூரியில் விவேக் ப்யூனாக இருக்கிறார்.. அவ்வப்போது ப்ரின்சிபாலைக் கலாய்த்துக் கொண்டு காமெடி பண்ணிக் கொண்டு இருக்கிறார்..
தங்கள் உள்ளம் கவர்ந்த கள்ளனையும் கள்ளியையும் தருணும் த்ரிஷாவும் தேடுகிறார்கள்.. தருண் தினமும் எத்திராஜ், மீனாட்சி, ஸ்டெல்லா என்று சுற்றித் திரிகிறார்.. த்ரிஷா தினமும் லயோலா, பச்சையப்பாஸ் என்று சுற்றித் திரிகிறார்.. ஒரு கட்டத்தில் சந்தித்துக் கொள்கிறார்கள்.. ஆனால் அடுத்தவர் மனதிலும் காதல் இருக்கிறதா என்ற சந்தேகம் வருவதால் மனதில் இருப்பதைக் காட்டிக் கொள்ளாமல் பிரிகிறார்கள்.
த்ரிஷா கல்யாணம் செய்து கொள்ள மும்பைக்கும், தருண் மேற்படிப்பு படிக்க அமெரிக்காவுக்கும் போய் விடுகிறார்கள்.
மூன்று ஆண்டுகள் கழித்து மறுபடியும் மும்பை-சென்னை ரயிலில் கையில் குழந்தையோடு த்ரிஷா. பக்கத்தில் ரீமா சென்னுடன் தருண். ஒரு வழியாய் ரீமா சென் colleague மட்டுமே என்றும், குழந்தை த்ரிஷாவின் அண்ணனின் குழந்தை என்றும் சொல்லி காதலர்களைச் சேர்த்து வைக்கிறார்கள்.
படம் ஆரம்பம் முதல் இறுதி வரை ரொம்ப மெதுவாகவே செல்கிறது. பிறகென்ன, படப்பிடிப்பு வேகம் தான் படத்திலும் தெரியும். இன்னும் கொஞ்சம் சுவாரஸ்யத்கைத கூட்டியிருக்க வேண்டும் இயக்குனர். நடு நடுவில் தேவையில்லாத செண்ட்டிமெண்ட் காட்சிகளாய் தருணின் அக்கா-அம்மா சம்பந்தப்பட்ட காட்சிகள். ஒன்றுமே ஒட்டவில்லை.
படத்தில் இரண்டு ஆறுதல்கள், ஷ்ரேயாவும் விவேக்கும் மட்டுமே. கல்லூரி கால்பந்தாட்ட அணிக்கு student-cum-coach-ஆக வருகிறார் ஷ்ரேயா. (நான் படிச்ச கல்லூரியில எல்லாம் இப்படி எதுவுமே நடக்கலீங்கோ..!!) த்ரிஷாவை விட கண்ணுக்கு அழகாக இருக்கிறார். ஆனால் இவர் பேசும் தமிழ் ரொம்ப படுத்துகிறது. விவேக்கின் காமெடி கொஞ்சம் ரசிக்க வைக்கிறது, great என்று சொல்ல முடியாவிட்டாலும்.
ஏ. ஆர். ரஹ்மானின் இசை படத்துக்கு கொஞ்சம் மெருகு சேர்க்கிறது. "அஸ்காவா, குஸ்காவா" பாடலும் "ஏதோ ஏதொ ஒன்று" பாடலும் வெரிகுட் ரகம்.
தயாரிப்பாளரின் மகனே இயக்குனராக இருந்தால் மட்டுமே இது போன்ற படங்கள் எடுக்கப்படும். அது கூட நடக்காமலிருந்தால் நல்லதே.
பார்க்க வேண்டிய படம் அல்ல.