மன்மதன்

நடிகர்கள்: சிலம்பரசன், ஜோதிகா, சிந்து தொலானி, கவுண்டமணி, சந்தானம்
இசை: யுவன் ஷங்கர் ராஜா
கதை, திரைக்கதை, இயக்கம்-மேற்பார்வை: சிலம்பரசன்
இயக்கம்: ஏ.ஜே. முருஹன்

கதாநாயகனாக நடிக்க ஆரம்பித்து ஐந்து படங்கள் ஆகியிருக்கும் சிம்பு, தானே கதையும் திரைக்கதையும் அமைத்து நடிக்கும் படம் என்பதால் ஒரு மெல்லிய அவநம்பிக்கையுடன் தான் உள்ளே போனேன். பரவாயில்லை, சிம்பு என்னை ஏமாற்றவில்லை. அரதப்பழசான சிகப்பு ரோஜாக்கள் கதையை சுட்டு தன் பெயரில் போட்டுக் கொண்டிருக்கிறார். திரைக்கதை என்ற பெயரில் மருந்துக்கும் லாஜிக் இல்லாத காட்சிகளை அமைத்திருக்கிறார்.

ஆனால்.. 'சரி அவ்வளவு தான், அவரது வழக்கமான படங்களின் வரிசையில் ஐந்தோடு ஆறு' என்று சுலபமாய் ஒதுக்கிவிட முடியாத சில விஷயங்கள் இருப்பதால் இந்தப்படம் கவனம் பெறுகிறது.

முதல் விஷயம் சிம்புவின் நடிப்பு. மிரள வைத்து விட்டார் மனிதர். நான் சந்தித்த பலரும் தம்பியாக வரும் சிம்புவின் ஆர்ப்பாட்டமில்லாத நடிப்பை விரும்பி கருத்து தெரிவித்தார்கள். ஆனால் எனக்கு அண்ணன் சிம்புவின் நடிப்பு மிகப் பிடித்திருந்தது. குறிப்பாக முதல் காட்சியில் மனநல மருத்துவர் மந்திரா பேடியிடம் அவர் தனது காதல் தோல்வி பற்றி 'நடிக்கும்' காட்சியில், "காதல்னு சொன்னாலே ரோஜா தான். அவளை நான் ஒரு ரோஜா மாதிரி அழகா என் மனசுக்குள்ள வளர்த்து வச்சிருந்தேன். அவ போகும்போது அதை எனக்குள்ளே இருந்து வேரோட பிடுங்கி எடுத்த போது அந்த முள்ளெல்லாம் என் கையில குத்தி.. அய்யோ..!!" என்று அவர் துடிக்கும் காட்சியில் அவர் முகத்தில் காட்டும் expressionகள்.. அடேங்கப்பா.. அட்டகாசம்!! இப்படி ஆரம்பிக்கும் அவரது உணர்ச்சி பூர்வமான நடிப்பு, இறுதிக் காட்சியில் ஜன்னலின் வழியாக மனம் பதைபதைக்க அவர் கதறி அழுவது வரை ராஜபாட்டையில் பயணிக்கிறது. பட்டையைக் கிளப்பி விட்டார் சிம்பு. காதல் கொண்டேன் தனுஷின் நடிப்புக்கு சொடக்குப் போட்டு செமத்தியாக ஒரு நடிப்புச் சவால் விட்டிருக்கிறார். வெல்டன்.

அடுத்த விஷயம், யுவன் ஷங்கர் ராஜாவின் இசை. பிரமாதப்படுத்தியிருக்கிறார் மனிதர். பாடல்களிலும் சரி, பிண்ணனி இசையிலும் சரி, இசையின் துள்ளல் படத்திற்கு கனம் சேர்க்கிறது. படத்தில் வசனங்கள் குறைச்சலே. பெரும்பாலான காட்சிகள் இசையின் துணையோடு தான் பேசியிருக்கின்றன என்பதால் யுவனின் பங்கு படத்தில் பெருமளவு இருக்கிறது. கீழ்த்தளத்தில் துவங்கும் "காதல் வளர்த்தேன்.." பாடல் படிப்படியாக முன்னேறி மேல்தளத்தை அடையும்போது உருக்குகிறது. "செடி ஒண்ணு முளைக்குதே.." என்ற ஆர்ப்பாட்டமான சிறு சிறு பத்திகளாய் வரும் பாடலும் காதலின் துள்ளலுக்கு ஈடு கொடுத்து சுவை சேர்க்கிறது. டிரம்ஸ் போட்டியின் போது சிம்பு வாசிக்கும் அதிரடிக் குத்து நீண்ட நாள் மறக்காது. யுவனுக்கு ஒரு ராயல் சல்யூட்.

அடுத்த விஷயம் டெக்னிக்கல் மெனக்கெடல்கள். இரண்டு சிம்புகள் தோன்றும் காட்சிகளின் ஸ்பெஷல் எஃபெக்டுகள், பாடல்களைப் படமாக்கியிருக்கும் விதங்கள், போடப்பட்டிருக்கும் செட்டுகள், காட்சிக் கவிதைகளாய் விளங்கும் சில காமிரா கோணங்கள் என்று இப்படி நிறையவே ரசிக்கும்படியான உழைப்பு நேர்த்தி, பரவலாகப் படமெங்கும் தூவப்பட்டிருக்கிறது.

அப்புறம் ஜோவும் அந்த அதிரடி 'என் ஆசை மைதிலியே' ரீமிக்ஸ் கும்மாங்குத்தும்.. (ஆஹா, ஆரம்பிச்சுட்டான்யா அன்று யாராவது ஆரம்பிக்கும் முன் அடுத்த விஷயத்துக்கு எஸ்கேப் ஆகி விடுகிறேன்.)

அடுத்த விஷயம், லொள்ளு சபா புகழ் சந்தானம். பின்பாதியில் வரும் இருபது நிமிடங்களும் டோட்டல் கலாட்டா செய்து கலக்கி விட்டுப் போகிறார். சிந்து தொலானி வீட்டு மதில் சுவரேறி உள்ளே குதித்து விட்டு சிம்புவை வரச் சொல்லி இவர் சுவற்றின் பக்கம் பார்த்துக் கொண்டிருக்க, அவர் எப்படியோ உள்ளே பிரதட்சண்யமாகி பின்னாலிருந்து சந்தானத்தின் தோளைத் தொட, சந்தானம் பயத்தில் விழுந்தடித்துப் பதறி வார்த்தை குழறி, "அய்யோ நான் இல்லீங்க" என்று சொல்லி சிம்புவைக் கண்டு நிம்மதி அடையும் காட்சி ஒரு சின்ன உதாரணம். காமெடியில் மனிதர் இன்னும் கலக்க வாழ்த்துகள்.

படத்தில் இப்படி எல்லாமே நல்ல விஷயங்கள் தானா என்று கேட்டால், அதுவும் இல்லை. அதுல் குல்கர்னி மகா மட்டமான ரோலில் முழுமையாக வீணடிக்கப்பட்டிருக்கிறார். கவுண்டமணியும் கிட்டத்தட்ட அப்படியே.

அப்புறம் ஜோதிகா. 'காக்க காக்க' படத்துக்குப் பிறகு நல்ல ரொமாண்டிக் நடிகையாக பெயர் பெற்று விட்ட ஜோவை என்னமாய் வீணடித்திருக்கிறார்கள்?! சிம்புவுக்கும் அவருக்கும் காதல் தோன்றும் காட்சிகள் மிகக் கண்றாவி. வயிறு எரிகிறது. ஒல்லியான ஜோவை நிறைய பேர் ரசிப்பதாகத் தெரிகிறது. எனக்கு ஏனோ புஷ்டியான ஜோவிடம் இருந்த அழகு இங்கே மிஸ்ஸிங். அது சரி, ஜோ சிறுத்தாலும்.. :-)

கொலை செய்வதற்கான காரணமும் கொலை செய்யும் முறைகளும் லாஜிக்கை ரொம்பவே சோதிக்கின்றன. முதல் பாதி முழுவதுமே தலை சொறிய வைக்கும், உடல் நெளிய வைக்கும் காட்சிகளால் நிரப்பப்பட்டிருக்கின்றன. போரடிக்காமல் போகிறது என்பது மட்டுமே நிறை.

ஆனால் எல்லாவற்றுக்கும் சேர்த்து வைத்து இரண்டாம் பாதியில் வெளுத்துவாங்கி விடுகிறார்கள்.

அஜீத்தை ரொம்பவும் சிலாகித்து ஓரிரண்டு காட்சிகள் வருகின்றன. என்ன காரணமோ தெரியவில்லை.

படத்தின் குறிப்பிடத்தக்க ஒரு ப்ளஸ் - இறுதிக் காட்சி. ஆனால் இதை சிம்பு பின்னணிக் குரலில் ஆடியன்ஸுக்கு விலாவாரியாக விளக்குவது சோதிக்கிறது. இப்படிச் செய்யாமல் காட்சிகளாலேயே இறுதிக் காட்சியை நிறுவியிருக்க முடியும். அப்படிச் செய்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

படத்தில் சிலாகிக்கத்தக்க அம்சங்களும், அருவருக்கத்தக்க அம்சங்களும் கலந்தே இருப்பது உண்மை. சிம்பு பேட்டிகளில் தன் முதுகில் தானே தட்டிக் கொள்ளும் அளவுக்கு கதை திரைக்கதையெல்லாம் அப்படி ஒன்றும் சிறப்பானதில்லை. இருந்தாலும் சிம்புவின் நடிப்பும் யுவன் ஷங்கரின் இசையும் படத்தை வலுவாகத் தூக்கி நிறுத்துகின்றன. அவற்றுக்காகப் படத்தைக் கண்டிப்பாகப் பார்க்கலாம்.

அப்புறம், இந்தப் படத்திற்காகவெல்லாம் சிம்புவின் வலது கை சுண்டு விரல் நகத்தைக் கூட வெட்டத் தேவையில்லை!

6 Comments:

Blogger Alex Pandian said...

மீனாக்ஸ்,

நல்ல விமர்சனம். கூடவே - படம் பார்க்கப்போன சூழல், தியேட்டர், அங்கு கண்ட
காட்சிகள், தியேட்டரின் ஒலி/ஒளி அமைப்பு, வசதிகள் (அல்லது இல்லாமை)
போன்ற விஷயங்களும் பதிந்தால் - ஒரு ட்ரிப் போன அனுபவம் எல்லோருக்கும்
கிடைக்கும்.

சிம்பு தன்னுடைய - ரஜினி மகள் ஐஸ் - நட்பு/காதல் - மறுப்பை (அந்த கோபத்தை வைத்துத்தான் இந்தக் கதையை அமைத்தாரா ?

- அலெக்ஸ்

11:36 PM  
Blogger ரவியா said...

//அப்புறம், இந்தப் படத்திற்காகவெல்லாம் சிம்புவின் வலது கை சுண்டு விரல் நகத்தைக் கூட வெட்டத் தேவையில்லை!
//

:D :D

11:58 PM  
Blogger Kannan Ramanathan said...

எல்லாரும் என்னமோ ரொம்ப நல்லா இருக்குன்னு சொல்றாங்களே, பாட்டும் சும்மா கும்முன்னு இருக்கேன்னு போய் படத்தை பார்த்து நொந்துட்டேன்!! உண்மையா சொல்லணும்னா, இதே கதையை வேற ஒரு நல்ல டைரக்டர்கிட்ட கொடுத்திருந்தா படம் ரொம்ப நல்லா வந்திருக்கும் (தரணி மாதிரி ஒரு பக்கா மசாலா பட டைரக்டர்தான் இதுக்கு லாயக்கு!). பட ஆரம்பத்துல குண்டா தெரியும் ஜோதிகா,second halfல ஒல்லியா தெரிவாங்க. கவனிச்சீங்களா?

12:47 AM  
Blogger பினாத்தல் சுரேஷ் said...

//அப்புறம், இந்தப் படத்திற்காகவெல்லாம் சிம்புவின் வலது கை சுண்டு விரல் நகத்தைக் கூட வெட்டத் தேவையில்லை!//

சரிதான் - இந்தப்படம் ஓடாமல் இருந்திருந்தால், எதையும் வெட்டத் தேவை இருக்காது.

வெற்றிக்குக் காரணமாக நான் கருதுவது இன்றைய பெரும்பான்மை திரை ரசிகர்களான (அரங்குக்கு சென்று ரசிக்கும்) கல்லூரி-பள்ளி மாணவர்களின் விடலைத்தனமான "பெண்கள் ஏமாற்றுபவர்கள்" என்னும் கருத்தை உரக்கச் சொன்னதுதான்.

கேனத்தனமான கருத்தை நியாயப்படுத்திவிட்டு இந்தப்பட வெற்றிக்கு கதை-திரைக்கதை தான் காரணம் என பீற்றிக்கொள்ளும் சிம்புவின் பார்ட்- 2வை நினைத்தாலே பயமாக இருக்கிறது!

வெட்டினாலாவது திருந்துவானா இவன் என்ற ஆதங்கம்தான்!

2:05 AM  
Blogger மீனாக்ஸ் | Meenaks said...

சுரேஷ்,

வெற்றிக்குக் காரணம் நீங்கள் நினைக்கும் ஒரு விஷயம் மட்டுமல்ல, சொல்லப்போனால் அதுவே கிடையாது என்ற எனது கருத்தை பதிவில் முழுமையாக அளித்துள்ளேன்.

அன்றியும் "வெட்டு, குத்து" போன்ற emotional response பரபரப்பிற்கு வேண்டுமானால் உதவுமே தவிர வேறு எந்த உருப்படியான காரியத்தையும் சாதிக்காது என்று நான் நம்புகிறேன்.

3:04 AM  
Blogger donotspam said...

ஸ்வதேஸ் பத்தி விமர்சனம் எதிர்பார்க்கிறேன். ஹிந்நி படம் என்பதால் விதி விலக்கா? ஹிந்தி தெரியாது என்று சொல்ல மாட்டீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்.

நன்றி

1:17 AM  

Post a Comment

<< Home

Old Commenting System: |

Very Old Commenting System: