கில்லி

நடிகர்கள்: விஜய், த்ரிஷா, பிரகாஷ்ராஜ், ஆசிஷ் வித்யார்த்தி, தாமு
இசை: வித்யாசாகர்
இயக்கம்: தரணி

தெலுங்கில் மாபெரும் வெற்றியைப் பெற்ற 'ஒக்கடு' படத்தின் லேசான தழுவல் தான் கில்லி. மூலத்திலிருந்து சில காட்சிகளை மட்டும் எடுத்துக் கொண்டு, பரவலாகச் சொந்தச் சரக்கைத் தூவியிருக்கிறார் இயக்குனர் தரணி.

ஆசிஷ் வித்யார்த்தி ஒரு கடமை உணர்வு மிக்க போலீஸ் அதிகாரி. அவரது மகன் தான் ஹீரோ கில்லியான விஜய். அரியர்ஸ் முடித்து வேலைக்குப் போவதில் அக்கறை இல்லாமல் ஓட்டேரி நரி, டுமீல்குப்பம் கஜா போன்ற நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு கபடி விளையாட்டில் தேசிய அளவில் சாதனை செய்வதைக் குறிக்கோளாகக் கொண்டிருக்கிறார். அப்பாவியான அம்மாவும், வால்த்தனம் மிக்க தங்கையும் குடும்பத்தின் மற்ற உறுப்பினர்கள்.

ஒரு கபடிப் போட்டியில் பங்கு பெற மதுரை செல்கிறார்கள் விஜய் குழுவினர். அங்கே பிரகாஷ்ராஜ் வில்லன் கில்லியாக அறிமுகமாகிறார். தமிழ் சினிமாவின் அண்மைக்கால பார்முலாவின் படி பாட்டுப் பாடி அறிமுகமாகும் ஹீரொயின் கில்லி த்ரிஷாவின் அத்தை மகன் தான் பிரகாஷ்ராஜ். மிக அதிகமான வயது வித்தியாசம் இருந்தும் த்ரிஷாவை மணக்க விரும்புகிறார் பிரகாஷ்ராஜ். இதை எதிர்க்கும் த்ரிஷாவின் இரண்டு சகோதரர்களையும் கொலை செய்து விடுகிறார். பிரகாஷ்ராஜ், தமிழக மந்திரி ஒருவரின் ஒரே மகன் என்பதால் போலீஸ், கீலீஸ் என்ற பேச்சுக்கெல்லாம் இடமில்லை.

திருமணத்திற்கான ஏற்பாடுகள் பலமாக நடக்க, அமெரிக்காவிலிருக்கும் பெரியப்பாவை நாடித் தப்பித்து ஓடுகிறார் த்ரிஷா. சந்தர்ப்ப சூழ்நிலையின் காரணமாக விஜய் அவரைக் காப்பாற்ற நேர்கிறது. அவரது கதையைக் கேட்ட விஜய் பரிதாபபட்டு அவரைத் தன் வீட்டில் தங்க வைத்து பிரகாஷ்ராஜ் கண்ணில் சிக்காமல் வெளிநாடு அனுப்ப முயல்கிறார். இதற்குள் விஜய், த்ரிஷா ஆகியோரின் "மனசுக்குள்ளே காதல் வந்துச்சா, வந்தல்லோ வந்தல்லோ" ஆகிவிடுகிறது. இருந்தாலும் இருவருமே வெளியே சொல்லிக் கொள்வதில்லை.

த்ரிஷா, விஜய் ஆகியோரைக் கண்டுபிடிக்கும் பொறுப்பு ஆசிஷ் வித்யார்த்தியிடம் ஒப்படைக்கப்படுகிறது. தேசிய கபடிப் போட்டியின் இறுதிப் போட்டியன்று கஷ்டப்பட்டு த்ரி்ஷாவை விமான நிலையத்தில் விட்டு விட்டு போட்டி மைதானத்துக்கு விரைகிறார் விஜய். மிச்சத்தை (விஜய் ஜெயித்தாரா, அப்பா அவரை ஏற்றுக் கொண்டாரா, த்ரிஷாவும் அந்தக் காதலும் என்ன ஆனது) வெள்ளித் திரையில் பார்க்க வேண்டும்.

வெவ்வேறு கேரக்டர்களை கருவாக்கி உருவாக்கி நம் கண் முன்னால் உலவ விடுவதில் போதிய கவனம் செலுத்தாமல் விட்டு விட்டார் இயக்குனர். அது தான் படத்தின் மிகப் பெரிய குறை. குறிப்பாக ஒரு கட்டத்தில் விஜய், "நான் ஒரு பிரச்சினையில இறங்கிட்டா அப்புறம் உயிருக்கு பயந்து பின் வாங்குறதெல்லாம் கிடையாது. கடைசி வரைக்கும் போராடிப் பார்த்துடுவேன்" என்று சொல்லும் போது, கதாசிரியர் இதை முன் பகுதிகளில் எங்காவது establish செய்திருக்கலாமே என்று தோன்றுவதைத் தடுக்க முடியவில்லை.

"அந்தப்புரம்" என்று சில ஆண்டுகள் முன்னால் வந்த ஒரு படத்தில் இதே பிரகாஷ்ராஜிடமிருந்து ஒரு பெண்ணை விமான நிலையத்திற்கு அழைத்துச் செல்லும் சேஸிங் காட்சிகள் இருக்கும். அந்தப் படத்தின் ஞாபகம் வருவதும் படத்தின் குறை. இதற்காக இயக்குனரைக் குறை சொல்ல முடியாது என்றாலும் படத்திற்கு மைனஸ் தான்.

படத்தின் துணை கேரக்டர்கள் யாரும் மனசில் பதியுமளவிற்கு இல்லை. திருமலை படத்தில் ரகுவரன், கௌசல்யா ஆகியோர் ஏற்படுத்திய பாதிப்பில் பாதி கூட இந்தப் படத்தில் ஆசிஷ் வித்யார்த்தி, தாமு போன்றோர் ஏற்படுத்துவதில்லை.

ஒரு மாஸ் ஹீரோவாகத் தன்னைக் காட்டிக்கொள்ளும் விஜய்க்கு இந்தப் படத்தில் அதற்கு ஏற்றபடி ஒரு ஓபனிங் இல்லை. படு சொதப்பலான ஆரம்பக் காட்சிகள். கூடவே, "நான் கீழ போனாலும் மேல வந்துடுவேன்", "வாழ்க்கையில விழுந்து தான் எந்திரிக்கணும், அடங்கித் தான் விஸ்வரூபம் எடுக்கணும்" போன்ற வெட்டியான தத்துவங்களின் டார்ச்சர் வேறு. இதையெல்லாம் நான் படம் பார்த்த தியேட்டரில் ரசிகர்கள் கூட ரொம்ப வரவேற்ற மாதிரி தெரியவில்லை.

விஜய் - த்ரிஷாவை வில்லன் ஆட்கள் துரத்தும் காட்சிகள் மெகா சீரியல் போல் இழுத்துக் கொண்டே போகின்றன. மழையில் வரும் சண்டைக்காட்சி அரதப் பழசு.

படத்தின் சூப்பர் சொதப்பல் இசை தான். குத்துப் பாடல் என்றும் கொண்டாட முடியாத சில பாடல்கள், நல்ல மெலடி என்றும் பாராட்ட முடியாத சில பாடல்கள் என்று சுமாரான சில பாடல்கலோடு வித்யாசாகர் ஏமாற்றுகிறார். ஷல்லல்லா ஷல்லல்லா மற்றும் கொக்கரக்கொக்கரக்கோ மட்டும் பரவாயில்லை ரகம்.

விஜய்யின் நடிப்பு குறித்து குறைகள் ஏதும் சொல்வதற்கில்லை. கொடுத்த பாத்திரத்தில் மிளிர்கிறார். குறிப்பாக காமெடி அவருக்கு இந்தப் படத்தில் மிக நன்றாக வந்திருக்கிறது. வடிவேலு டைப் வசனங்களை அவர் அநாயாசமாகச் சொல்வது மிக அழகு. குடும்பத்தின் அந்நியோன்யங்களை அழகாக சில காட்சிகளில் படம் பிடித்துக் காட்டியுள்ளார் தரணி. பாராட்ட வேண்டிய காட்சிகள் இவை. குறிப்பாக விஜய்க்கும் அவரது தங்கைக்கும் இடையே படம் முழுக்க நடக்கும் செல்ல கலாட்டாக்கள் அசத்தல்.

த்ரிஷா, நடிப்பு கிலோ எவ்வளவு என்று தான் இந்தப் படத்திலும் கேட்டிருக்கிறார். க்ளைமாக்ஸ் காட்சி மட்டும் விதிவிலக்கு. சில பாடல் காட்சிகளில் பொருத்தமான ஆடைகள் அணிந்து அழகாகக் காட்சி தருகிறார்.

கபடிப் போட்டிகளில் நல்ல விறுவிறுப்பு. கபடிப் போட்டி ரசிகராக வரும் மயில்சாமியிடம் உண்மையான விளையாட்டு ரசிகர் ஒருவரின் உற்சாகம் கொப்பளிக்கிறது. அருமையாகச் செய்திருக்கிறார்.

படத்தின் ஹைலைட் பிரகாஷ்ராஜின் அசத்தலான வில்லத்தனம் தான். மனிதர் பின்னியெடுத்து விட்டார். த்ரிஷாவிடம் கொஞ்சலாக, "ஐ லவ் யூடா செல்லம்" என்று வழிந்தபடியே சொல்வதாகட்டும், "அதெல்லாம் நீ சொல்லக் கூடாது, ஏன் சொல்றே?" என்று தனக்கு எதிராக ஏதாவது சொல்பவர்களிடமெல்லாம் சீறி விழுவதாகட்டும், "பாக்கெட்லயே பதிலை வச்சுக்கிட்டு புடிக்க மாட்டேங்குது பார் இந்தப் போலீஸ்" என்று ஆயாசப்படுவதாகட்டும், அசத்தலோ அசத்தல்.

மற்றொரு குறிப்பிடத்தகுந்த அம்சம் வசனங்கள். கைதட்டல்களை பல இடங்களில் அள்ளுகிறார் வசனகர்த்தா. பிளேடை வைத்து எதிரணியைத் தாக்கி வெல்ல நினைக்கும் கபடி டீமுக்கு விஜய் சொல்வது: "டேய், எப்போ நீ உன்னை நம்பாம இந்த பிளேடை நம்பினியோ அப்பவே நீ தோத்துட்டே.." அதே போல், பிரகாஷ்ராஜின் அப்பாவான தமிழக மந்திரி, "தமிழ்நாடே என் பின்னால இருக்கு" என்று அடிக்கடி சொல்லும்போது கடுப்பாகும் பிரகாஷ்ராஜ் சொல்வது: "என்னய்யா பின்னால இருக்கு? நீ என்ன தமிழ்நாடு பார்டர்லயா நிக்குறே? தமிழ்நாடே உன் பின்னால இருக்கறதுக்கு?" பாராட்டுக்கள்.

போன படத்தில் சில சிக்ஸர்களை அடித்து செஞ்சுரி போட்ட விஜய், இந்தப் படத்தில் 49 ரன்னில் பரிதாபமாக ரன்-அவுட் ஆகி விட்டது மாதிரி எனக்கு ஒரு feeling. தில், தூள் என்று பட்டயைக் கிளப்பிய தரணி இங்கு கொஞ்சம் சறுக்கி விட்டார் என்று தான் நான் சொல்வேன்.

விஜய்யின் காமெடி நடிப்புக்காகவும் பிரகாஷ்ராஜின் சூப்பர் வில்லத்தனத்துக்காகவும் ஒரு தடவை பார்க்கலாம்.

0 Comments:

Post a Comment

<< Home

Old Commenting System: |

Very Old Commenting System: