கோவில்

நடிகர்கள்: சிம்பு, சோனியா அகர்வால், ராஜ்கிரண், நாசர், வடிவேலு
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
இயக்கம்: ஹரி

அப்பாடா, சில்லறை சேட்டைகள் ஏதுமில்லாமல் சிம்புவின் முதல் படம். அதற்காக இயக்குனர் ஹரிக்கு ஒரு ஓ போட்டு இந்த விமர்சனத்தை துவக்கலாமா??

அலைகள் ஓய்வதில்லை படத்தின் இந்துப் பையன், கிறித்தவப் பெண் காதல் கதையை, இரு ஊர்களின் மதப் பிரச்சினையோடு கலந்து ஒரு ருசியான தயிர்சாதம் பரிமாறியிருகிறார் ஹரி. "சாமி" படத்தில் பிரியாணி தருகிறேன் என்ற பெயரில் சில எல்லைகளை அங்கங்கே கடந்திருந்தார். இதில் சுத்தமான, அப்பழுக்கற்ற தயிர்சாதம். (குடும்பப் படம்..)

முதலில் சொன்னது போல் சிம்புவை அநாவசியமான கை விளையாட்டுக்கள் செய்ய விடாமல், "நான் பெரிய பருப்பு" என்பது போன்ற வசனங்கள் இல்லாமல் ஒழுங்கு புள்ளையாக வந்து போக வைத்திருக்கிறார். "காலேஜுக்குப் போவோம் கட்டடிக்க மாட்டோம், கோவிலுக்குப் போவோம் சைட்டடிக்க மாட்டோம்" என்ற அறிமுகப் பாடலில் வருவது போல் தரமான பையன் தான் சிம்பு. புளியங்குளம் என்ற இந்துக்கள் மிகுந்த ஊரில் மரியாதைக்குரிய ராஜ்கிரண் குடும்பத்தின் ஒரே வாரிசு. பள்ளிப் படிப்பு முடித்து கல்லூரிக்கு இப்போ தான் போக ஆரம்பிக்கிறார்.

வேப்பங்குளம் என்பது பக்கத்தில் கிறித்துவர்கள் பெரும்பான்மையாக வாழும் ஊர். அங்கே மரியாதைக்குரிய நாசரின் மகள் ஏஞ்சல் தான் சோனியா அகர்வால். பெயருக்கேற்ற மாதிரி படம் முழுக்க ஏஞ்சல் மாதிரி இருக்கிறார். படம் முழுக்க தாவணியில் ரொம்ப க்யூட்டாகத் தான் இருக்கிறார். இவரும் பள்ளிப் படிப்பு முடித்து சிம்பு படிக்கும் காலேஜில் போய்ச் சேருகிறார்.

ஏற்கெனவே இரு ஊர்களுக்கும் அடிக்கடி மதக்கலவரம் ஏற்பட்டு வரும் சூழ்நிலையில், சிம்புவும் சோனியாவும் காதல் வயப் பட நேரிடுகிறது. அதனால் வரும் பிரச்சினைகள் மற்றும் முடிவினை சுவாரஸ்யமாகச் சொல்வதில் இயக்குனர் வெற்றி பெறுகிறார். முடிவு மட்டும் கொஞ்சமே கொஞ்சம் சொதப்பல். பரவாயில்லை, மன்னிக்கப்படலாம்..

சிம்புவின் கதாபாத்திரம், "தம்பி தங்கக் கம்பி" என்பது போல். குறைவில்லாமல் ஜொலிக்கிறார் சிம்பு. நடனம், சண்டைக்காட்சிகள் இரண்டிலும் அவரது திறமை பளிச்சிடுகிறது.. முகபாவங்களையும், நடிப்பையும் இன்னும் கொஞ்சம் மெருகேற்றினால், சிறப்பாக பரிமளிக்க முடியும்.

சோனியா அகர்வாலுக்கு காதல் கொண்டேன் போலவே தேவதை கதாபாத்திரம். வெட்கப்படுவது முதல், உணர்ச்சி வசப்பட்டு அழுவது வரை நன்றாகவே செய்கிறார். இளம்பெண்களுக்கு தாவணி ரொம்ப அழகான உடை என்ற பரவலான எண்ணத்தை மீண்டும் நிரூபிக்கிறார்.

ராஜ்கிரண் கண்ணியமான பாத்திரத்தை திறமையாகச் செய்திருக்கிறார். ஊர் நன்மைக்காக ரொம்ப அடங்கிப் போவது போல் இருப்பதை மட்டும் தவிர்த்திருக்கலாம்.

நாசரின் கதாபாத்திரம் ரொம்ப அடாவடி என்பதால் சினிமாத்தனமாக இருப்பதாக நமக்கு ஒரு உணர்வு வருவதைத் தவிர்க்க முடியவில்லை.. ஆனாலும் நாசர் அதை மீறிப் பின்னுகிறார். வண்டியில் அவர் போய்க் கொண்டிருக்கும் போது பின்னால் வரும் லாரி, வழி கேட்டு ஹாரன் அடிக்க, இவர் வண்டியை நிறுத்தி இறங்கி, லாரி டிரைவரை அழைத்து ஓங்கி ஒரு அறை விட்டு, "பெரிய இவனா நீ?? வேப்பங்குளம் போய்ச் சேர்ற வரைக்கும் பின்னாலயே வா.." என்று அதிரடி காட்டுகிறார். படம் முழுக்க அதை maintain செய்கிறார்.. ஆனால் கடைசியில் பாவம் இவரது பாத்திரத்தை ரொம்ப சொதப்பி விடுகிறார்கள்..

புல்லட் பாண்டி என்ற பெயரில் சிம்புவின் சித்தப்பாவாக வரும் வடிவேலு ஒரு டுபாக்கூர் பேர்வழி.. சிலம்பம் கற்றுத்தரும் மாஸ்டராக படம் முழுக்க ஒரு அல்டாப்பு ராஜாங்கம் நடத்துகிறார்.. சிம்புவுக்கு ஒன்று என்றதும் அரிவாளோடு கிளம்பி விடும் அவரது "வீரத்தை" ரசிக்காமல் இருக்க முடியாது. சிம்புவின் கனவில், நாசரும் அவரது அடியாள்களும் வீடு புகுந்து வடிவேலுவை வெட்டுவது போல் வருகிறது என்பதைக் கேட்டுவிட்டு, "அப்பக் கூட பிரச்சினையின்னா உன்னைத் தானே வெட்டணும்?? என்னை எதுக்கு?? கனவில கூட ஒரு நியாய தர்மம் வேண்டாமா..??" என்று பரிதாபமாக அவர் புலம்புவது நல்ல நகைச்சுவை. ஆனால் இரண்டாம் பாதியில், மிருகங்களால் அவருக்குக் கண்டம் என்று ஜோசியர் சொல்லிவிட அவர் நாய், மாடு, யானை என்று பயந்து நடுங்குவது அவ்வளவு சிறப்பாக இல்லை..

படத்தில் குறிப்பிடத்தக்க இன்னொரு அம்சம் வசனங்கள். அங்கங்கே மனசைத் தொடுகின்றன நாகர்கோவில் மண்வாசனையோடு எழுதப்பட்டிருக்கும் அழகான வசனங்கள். ஒரு இடத்தில் சோனியாவும் அவரது வேப்பங்குளத்துத் தோழிகளும் கல்லூரிக்குச் செல்லும் பஸ் வழியில் நின்றுவிட, பரீட்சைக்கு நேரமாகி விட்டதால் வேறு வழியில்லாமல் சைக்கிளில் செல்லும் சிம்பு மற்றும் அவரது நண்பர்களோடு செல்கிறார்கள்.. இதனைக் கேள்விப்பட்டு பெண்களின் பெற்றோரெல்லாம் அவர்கள் திரும்பி வந்ததும் கண்டபடி பேசி விட, அங்கு செல்லும் சிம்பு, "உங்க பொண்ணுங்க மேல கூடப் படிக்கிற பசங்களா நாங்க வச்சிருக்கிற நம்பிக்கையும் மரியாதையும் கூட ஒரு அப்பா-அம்மாவா நீங்க வைக்கலையே, சே..!!" என்று வெடிப்பது அருமை.

அதே போல் இன்னொரு இடத்தில், "பார்த்து பேசிக்கிட்டு இருந்தா மட்டும் தான் காதல்-னு இல்லை.. நெனைச்சுக்கிட்டு இருந்தாலே காதல் தான்.." வசனகர்த்தா வாழ்க..!!

சோனியாவின் அண்ணனுக்கு எதிராக சிம்பு-சோனியா அடிக்கும் காதல் லூட்டிகள் நயமாகக் கையாளப் பட்டிருக்கின்றன. ஒரே ஒரு தொலைபேசியை வைத்துக் கொண்டு நல்ல நகைச்சுவையாகக் காட்சி அமைத்திருப்பது இயக்குனரின் திறமையைக் காட்டுகிறது.

இசை ஓகோவென்று சொல்ல முடியாவிட்டாலும், ரசிக்க வைக்கிறது.. காலேஜுக்குப் போவோம், காதல் பண்ண, கொக்கு மீனைத் திங்குமா ஆகிய மூன்று பாடல்களுக்காக ஹாரிஸ் ஜெயராஜ் பாஸ்-மார்க் பெறுகிறார்.

சாமி படம் மூலம் சூப்பர் ஸ்டார் படத்துக்கு வலுவான அப்ளிகேஷன் போட்ட ஹரி, இரண்டாவது ரவுண்டிலும் தேறி விட்டார் என்றே சொல்ல வேண்டும்.

சிம்புவுக்கு முதல் வெற்றிப்படமாக கோவில் அமையும் என்பதில் சந்தேகம் இல்லை. ஒரு சிக்ஸர் அடித்து, தனுஷ்-சிம்பு ரேசில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறார் சிம்பு. புதுக்கோட்டையிலிருந்து வரும் சரவணன் என்ன ஆவார் என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்து விடும்.

0 Comments:

Post a Comment

<< Home

Old Commenting System: |

Very Old Commenting System: