திருமலை
நடிகர்கள்: விஜய், ஜோதிகா, ரகுவரன், மனோஜ் கே. ஜெயின், விவேக்
இசை: வித்யாசாகர்
இயக்கம்: ரமணா
நீண்ட நாட்களாச்சு, விஜய்யை ஒரு நல்ல ரோலில் பார்த்து.. அதிரடி தாதா (பகவதி), புரட்சிகரமான இளைஞன் (புதிய கீதை), soft romantic காதலன் (வசீகரா) என்று எதுவுமே திருப்தியளிக்காத நிலையில் "திருமலை" அந்தக் குறையை ஓரளவு நிவர்த்தி செய்யும் வகையில் வந்திருக்கிறது.. மேலே குறிப்பிட்ட மற்ற படங்களைப் போல் இதிலும் அங்கங்கே தேவையில்லாத சில வசனங்கள் உண்டென்றாலும், கட்டுக்கோப்பான காட்சிகளோடு படம் நிறைவை அளிப்பதால் அவற்றை மன்னித்து விடலாம்..
அநாதையான புதுப்பேட்டை மெக்கானிக் பாத்திரத்தில் விஜய் புகுந்து விளையாடியிருக்கிறார்.. அதிரடியான, யாருக்கும் எதற்கும் பயப்படாத ஒரு கேரக்டர்.. அதே நேரத்தில் பொறுப்பான முடிவுகளை எடுக்கும் இளைஞனாகவும் இருக்கிறார்.. ஒரு cute, lovable ராஸ்கல் எனலாம்.. சிறப்பான பாத்திரப் படைப்புக்காக இயக்குனர் ரமணாவைப் பாராட்டலாம்.. குறிப்பாக விஜய்யின் நண்பன், வேறொருவருடன் திருமணம் நடக்கவிருக்கும் தன் காதலியை, கல்யாண மண்டபத்திலிருந்து அழைத்து வந்து விட, விஜய் அவர்களுடன் மண்டபத்துக்கே மீண்டும் சென்று அனைவருக்கும் திருப்தி அளிக்கும் விதத்தில் அந்தப் பிரச்சினையைத் தீர்த்து வைக்கும் காட்சியில் விஜய்யின் பாத்திரத்தின் இயல்பு அழகாக வெளிப்படுகிறது..
கதை ரொம்ப சாதாரணம் தான்.. ஒரு புதுவருட நாளன்று ஜோதிகாவை சந்திக்கிறார் விஜய்.. அன்று பார்க்கும் முதல் நபர் என்று ஜோதிகா அவரை வாழ்த்தி விட்டுப் போக, எதிர்பாராமல் அதற்குப் பிறகு எல்லாம் நல்லதாகவே நடக்கிறது விஜய்க்கு.. இதனால் ஜோ மேல் விஜய்க்கு ஒரு அபிமானம்.. பக்கத்து வீட்டில் குடியிருக்கும் ரகுவரன், கவுசல்யா தம்பதியிடம் பேசும்போது அது காதல் என்று உணர்கிறார்.. ஜோவிடமும் சொல்லிவிடுகிறார்.. முதலில் புரிந்து கொள்ளாமல் சற்று முரண்டு பிடிக்கும் ஜோதிகா, பிறகு காதலை ஏற்றுக் கொள்கிறார்..
ஜோவின் அப்பா, ஒரு பெரிய தனியார் தொலைக்காட்சி சாம்ராஜ்யத்தின் அதிபர்.. சும்மா இருப்பாரா..?? 'அரசு' என்ற பெயரோடு தமிழகத்தையே கலக்கும் ஒரு தாதாவின் மூலம் காதலுக்குத் தடை போட முயலுகிறார்.. அதை மீறிக் காதல் ஜோடி சேர்வது தான் மீதிக் கதை என்று நான் சொல்ல்லவும் வேண்டுமோ..??
விஜய்யின் தொடர்ச்சியான காதல் கலாட்டாக்களில் வெறுப்படையும் ஜோ, ஒரு கட்டத்தில் சும்மானாச்சுக்கும் விளையாட்டுக்கு "ஐ லவ் யூ" என்று சொல்லும் போது அதைப் புரிந்து கொள்ளும் விஜய் ஒரு பொங்கு பொங்குகிறார் பாருங்கள்.. அருமையான காட்சி அது.. "உனக்கு என்னைப் பிடிக்கலைன்னா கூடப் பரவாயில்லை.. கடைசி வரைக்கும் அதையே அடிச்சு சொல்லிடு.. நான் தாங்கிப்பேன்.. ஆனா பொய் சொல்லாதே.. ஏன்னா நீ என் தேவதை.. என் தேவதை பொய் சொன்னா என்னால தாங்கிக்க முடியாது.. பழி வாங்குறதுக்கு காதலை தயவு செஞ்சு ஆயுதமா உபயோகிக்காதே.." என்று வெடிக்கும் கட்டத்தில் மிக நிறைவாகச் செய்திருக்கிறார் விஜய்..
படத்தின் ஆரம்பத்தில் ஒரு பைக் ரேஸ் நடக்கிறது.. விஜய் அதில் லாரன்ஸ¤க்கு விட்டுக் கொடுத்து விட்டு, "ரேஸில் ஜெயிப்பது முக்கியமல்ல, வாழ்க்கையில் ஜெயிக்கறது தான் முக்கியம்..", "எனக்கு அப்பப்போ வந்து ஓரமா நின்னு ஒத்து ஊதிட்டு போறவனை விட, எப்பவும் என் முன்னால எதிர்த்து நிக்கிறவனைத் தான் பிடிக்கும்.." என்றெல்லாம் பேசுகிறார்.. ரசிகர்களின் விசில் சத்தத்தை வைத்து ஊகிக்கும் போது அஜித்தைத் தாக்குவது போலத் தெரிகிறது.. தவிர்க்கப்பட வேண்டிய வசனங்கள் இவையெல்லாம்..
தாதா 'அரசு'வோடு மோதும் கட்டங்களில் விஜய் தன் எகத்தாளமான நடிப்பு மூலம் ஸ்கோர் செய்கிறார்.. குரல் மாடுலேஷனும் நக்கல் பார்வைகளும் அருமை.. நடனங்கள் பற்றிச் சொல்லவே வேண்டாம்.. வித்யாசாகர் இதற்காகவே போட்டுத் தந்திருக்கும் குத்துப் பாடல்களில் பட்டையைக் கிளப்பியிருக்கிறார்.. நீண்ட நாட்களுக்குப் பிறகு எனக்கு பழைய விஜய்யைப் பார்த்த திருப்தி..!! வெல்டன்..!!
ஜோதிகாவுக்கு "குஷி" படம் அளவுக்கு இதில் வேலையில்லை.. தேவதை மாதிரி அவ்வப்போது வந்து போக வேண்டிய வேலை தான்.. (ஜோவிடம் குறை ஏதேனும் இருந்தாலும் என் கண்களுக்குத் தெரியாது என்பதால் அது பற்றி நான் சொல்வதற்கில்லை.. !!) "திம்சு கட்டை" பாடலில் cho chweet..!!
ஜோதிகாவின் தந்தையாக வரும் நடிகர் யாரோ புதுமுகம்.. எந்தக் காட்சியிலும் ரொம்ப ஒட்டவில்லை.. ஏனோ தானோவென்ற ஒரு நடிப்பு.. சுகமில்லை..
விஜய்யின் மெக்கானிக் ஷெட் அருகில் குடிவரும் தம்பதியாக ரகுவரன்-கவுசல்யா.. ரகுவரனை இந்தக் கேரக்டரில் வேஸ்ட் செய்து விட்டார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.. நிறைய வேலையில்லை.. யார் வேண்டுமானாலும் செய்து விடலாம்.. இருந்தாலும் ரகுவரன், மற்றவர்களிடம் இல்லாத ஏதோ ஒன்றைத் தன் கேரக்டருக்குக் கொண்டு வருவது உண்மையே.. கவுசல்யாவை விஜய்யை விட இளமையானவராகக் காட்டுவதா அல்லது மூத்தவராகக் காட்டுவதா என்ற இயக்குனரின் தடுமாற்றம் அத்தனை காட்சிகளிலும் வெளிப்படுகிறது.. வேறு யாரையாவது அந்தக் கேரக்டருக்கு உபயோகப் படுத்தி இருக்கலாம்.. ரகுவரன், கவுசல்யா இருவருமே தங்கள் பெண்பார்க்கும் படலத்தைப் பற்றிப் பேசும் காட்சியில் அருமையாக நடித்திருக்கிறார்கள்..
தாதா 'அரசு'வாக மனோஜ் கே. ஜெயின்.. புதுமையான பாத்திரம் இல்லை என்றாலும் முயற்சி செய்து கொஞ்சம் வித்தியாசம் காட்டியிருக்கிறார், பரவாயில்லை.. மெரீனா கடற்கரைச் சாலையில் கமிஷனர் அலுவலகம் எதிரே உதவி கமிஷனரை வில்லனின் ஆட்கள் என்கவுண்ட்டர் செய்வது நல்ல காமெடி..
விவேக்கின் காமெடி தனி டிராக்.. வேலைக்குப் போகும் இளைஞனுக்கு ஏற்படக்கூடிய தடங்கல்கள் என்ற கருத்திலே செய்திருக்கிறார்.. ரொம்ப சுமார் ரகம் தான்..
இசை வித்யாசாகர்.. "நீ என்பது எதுவரை எதுவரை", "திம்சு கட்டை" மற்றும் அறிமுகப் பாடல் மூன்றும் அருமை.. பின்னணி இசையிலும் நிறைவாகச் செய்திருக்கிறார்.. சண்டைக் காட்சிகளில் இசை மிரட்டுகிறது..
ஒளிப்பதிவு சிறப்பானதொரு முயற்சி.. குறிப்பாக இடைவேளைக்கு முந்தின காட்சியில் மெரீனாவில் ஜோதிகா காத்திருக்கும் நேரத்தில் க்ரேன் ஷாட்டுக்கள் அமர்க்களம்.. "நீ என்பது எதுவரை எதுவரை.." பாடலிலும் காமிரா கோணங்கள் கவிதை பேசுகின்றன..
கடைசியில் அரசுவிடம் போய் விஜய் பேசும் காட்சியில் ஒரு வசனம்.. "நீ எப்போவாவது காதலிச்சிருக்கிறியா அரசு..?? கத்தி தூக்கறதை விட கஷ்டம்..!!" வசனகர்த்தாவுக்கு ஒன்றல்ல, பல "ஓ" போடலாம்..!!
சண்டைக் காட்சிகளில் நல்ல அழுத்தம்.. பாராட்ட வேண்டிய முயற்சி..
படத்தில் obvious குறைகள் என்று சில இருந்தாலும், விஜய்யின் பாத்திரப் படைப்பில் இருக்கும் நேர்மையும், கட்டுக்கோப்பான திரைக்கதை அமைப்பும் அவற்றை மறக்க, மன்னிக்க வைக்கின்றன..
"திருமலை", நீண்ட நாட்களுக்குப் பிறகு விஜய்க்கு வைட்டமின் ஏற்றும் வெற்றிப் படம் என்பதே என் கருத்து..
0 Comments:
Post a Comment
<< Home