விருமாண்டி

நடிகர்கள்: கமல்ஹாசன், பசுபதி (கொத்தாளத் தேவர்), அபிராமி (அன்னலட்சுமி), நெப்போலியன் (நல்லம நாயக்கர்)
இசை: இளையராஜா
இயக்கம்: கமல்ஹாசன்

ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளை எதிர்கொண்டு சிறப்பான படமொன்றை அளிப்பது மிகக் கடினமான வேலை.. அதனை ஓரளவு (கவனிக்கவும், ஓரளவு) நடத்திக்காட்டியிருக்கும் இயக்குனர் கமலுக்கு முதலில் நமது பாராட்டுக்கள். இந்தப் படத்திற்குப் போய், அந்தத் தலைப்புக்குப் போய் ஏன் எதிர்ப்புத் தெரிவித்தோம் என்று சிலர் வெட்கப்படும்படி படமெடுத்த இயக்குனர் கமலுக்கும் நமது பாராட்டுக்கள்.

விருமாண்டியில் நல்ல திரைக்கதை உண்டு. அழுத்தமான காட்சிகள் உண்டு. அழகான வசனங்கள் உண்டு. ஆனால், பல வேறுபட்ட களங்களின் மேல் இவை பயணம் செய்வதால் எடுத்துக் கொண்ட மையக் கருத்துக்கு போதுமான ஆழம் கிடைக்கச் செய்வதில் அவை தவறி விடுகின்றன.

தூக்குத் தண்டனை குறித்த சிந்தனை, சிறைச்சாலைகளில் நடக்கும் சட்ட மீறல்கள் குறித்த கேள்விகள், கிராம விவசாயம் மற்றும் தண்ணீர்ப் பிரச்சினை பற்றிய பார்வைகள் என்று பல களங்களின் ஆளுமையில் விருமாண்டி சிக்கித் தவிப்பதால் முழு மனதாக ஒன்ற முடியவில்லை.

ஒரே சம்பவங்களை, கொத்தாளத் தேவர் முதலில் சொல்லும் போது தன் வசதிப்படி சுருக்கிச் சொல்கிறார்.. விருமாண்டி குறித்த நமது சந்தேகங்கள், தொடர்ந்து விருமாண்டியே தன் கதையை விரிவாகச் சொல்லும் போது அகலுகின்றன. சிறப்பான கதை சொல்லும் உத்தியைக் கடைப்பிடித்திருக்கிறார்கள்.

சுற்று வட்டாரத்திலேயே இருபதடியில் தண்ணீர் கிடைக்கும் கிணறு உடைய விருமாண்டியின் நிலம் மீது அவன் ஊரைச் சேர்ந்த கொத்தாளத் தேவர், பக்கத்து ஊரைச் சேர்ந்த நல்லம நாயக்கர் இருவருக்கும் ஒரு கண். நல்லம நாயக்கருக்கு எதிராகக் கொத்தாளத் தேவரால் பகடைக் காயாகப் பயன்படுத்தப் படுகிறான் விருமாண்டி. கொத்தாளத் தேவரின் அண்ணன் மகள் அன்னலட்சுமிக்கும் விருமாண்டிக்கும் காதல். அவளுக்குக் கொத்தாளத் தேவர் மீது வந்த சந்தேகம் தீராதபடியால் இருவரும் கள்ள மணம் புரிந்து கொண்டு வேற்றூர் செல்கிறார்கள். அன்னலட்சுமி அங்கிருந்து கவர்ந்து வரப்பட்டு, தற்கொலை செய்து கொள்கிறாள். அவளைக் கற்பழித்த பழியும், பழைய கொலைகளின் பழியும் விருமாண்டி மீது விழுமாறு கொத்தாளத் தேவர் சதி செய்கிறார். வெகுண்டெழும் விருமாண்டியின் சீற்றத்துக்கு பல உயிர்கள் பலியாகின்றன.. இடையில் விருமாண்டிக்குத் தஞ்சம் அளித்த நல்லம நாயக்கரை கொத்தாளத் தேவர் கொல்கிறார். விருமாண்டிக்குத் தூக்குத் தண்டனையும், கொத்தாளத்தேவருக்கு ஆயுள் தண்டனையும் என்று தீர்ப்பாகிறது.

தூக்குத் தண்டனையை அகற்ற வேண்டுமென்ற நோக்குடன் ஆராய்ச்சி செய்து வரும் ரோகிணி, சிறையில் இவர்களின் கதையைப் பதிவு செய்கிறார். நேர்மையான ஜெயிலரைக் கொல்ல சதி செய்யும் வார்டனின் திட்டம் குறித்து அறிந்து அங்கிருந்து தப்ப முயலுகையில், திட்டமிட்ட கலவரம் உருவாக்கப் படுகிறது. இறுதியில் கொத்தாளத் தேவர் மடிந்து, விருமாண்டி ரோகிணிக்கு உதவி, அவரது கருணை மனு குறித்த சன் டிவி சிறப்புப் பார்வையுடன் படம் முடிவடைகிறது.

வசனங்கள் அத்தனையும் கன ஜோர். காளை மாட்டை மொபட்டில் கட்டிக் கொண்டு அபிராமி செல்லும் போது கமல் அவரைச் சீண்டியபடியே செல்லும் காட்சி ஒன்று போதும் சாட்சிக்கு. குபீர் ஜாலி பிரதர்ஸ் என்று செட்டு சேர்த்துக் கொண்டு கமல் அடிக்கும் கும்மாளங்கள் அத்தனையும் கிராமத்து மண்ணின் வெள்ளந்தி மணம் கமழும் காட்சிகள். ரசிக்கத்தக்கவை. மிக மிக. அப்பத்தா மடிந்து விடும் காட்சியில் விருமாண்டி பேசும் வசனங்கள் கொஞ்சம் அதிகப்படி என்றாலும், சண்டியர் வேறெப்படிப் பேசுவான் என்ற சமாதானம் உண்டு, நம்பும்படியாக.

இசை பற்றி என்ன சொல்ல.? இளையராஜா இப்போது தரும் இசை, அவரது நீண்ட அனுபவத்தின் உதவியோடு அவர் நமக்குப் போடும் பிச்சை. அதையும் பாத்திரமறிந்து போடுகிறார் பாருங்கள், அதுதான் அவரது சிறப்பு. "மாட விளக்கை யாரு இப்போ தெருவோரம் ஏத்தினா", "சண்டியரே சண்டியரே", "கொம்புல பூவச் சுத்தி" என்று எல்லாம் ஒரே அட்டகாசம். பொருத்தமான பிண்ணனி இசை. (ஆனாலும், எப்படி எடுக்கப் போகிறார்கள் என்று நான் மிகவும் எதிர்பார்த்த "கருமாத்தூர் காட்டுக்குள்ளே ஒரு காலத்தில்" மற்றும் "கொட்டை எடுத்து வையி.." ஆகிய பாடல்கள் படத்தில் இடம்பெறவில்லை. தியேட்டர்காரர் சதியா என்று தெரியவில்லை.)

வன்முறைக் காட்சிகள் கொஞ்சம் அதிகமே. அதிலும், கைகள், கால்கள், தலைகள் எல்லாம் துண்டாக சீவப்படுவது போல இதுவரை தமிழ் சினிமாவில் கண்டிராத தத்ரூபக் காட்சிகள் மனதைப் பிசைகின்றன.

ஜல்லிக்கட்டு காட்சியின் போது காமிரா புகுந்து விளையாடுகிறது. "ஒன்னை விட.." பாடலில் இரவின் கருநீலப் பின்னணியில் சில காட்சிகள் செதுக்கி வைத்த கவிதைகள்.

ஆர்ட் டைரக்டரின் உழைப்புக்கு ஒரு ராயல் சல்யூட். விருமாண்டி கோயில், குளம், கோர்ட் வளாகம், சிறை என்று அசத்தியிருக்கிறார்.

பார்வையாளர்களுக்கு அன்பே சிவம் தந்த திருப்தியை விருமாண்டி தரவில்லை. ஆனால், கமல்ஹாசனுக்கு அன்பே சிவம் தராத வெற்றியை விருமாண்டி தரக்கூடும். அடுத்தொரு அன்பே சிவம் கிடைப்பதற்காக, இடையில் ஒரு விருமாண்டியை ஆதரிப்பதில் தவறில்லை. (அன்பே சிவத்தை வெற்றியாக்காததற்குப் பிராயச்சித்தமாகவும்..!!)

ரசிக்கத்தக்க படம்.

0 Comments:

Post a Comment

<< Home

Old Commenting System: |

Very Old Commenting System: