அலை


நடிகர்கள்: சிம்பு, த்ரிஷா, ரகுவரன், விவேக், குறளரசன்
இசை: வித்யாசாகர்
இயக்கம்: விக்ரம்

அண்ணாமலை படத்தில் முதன் முதலாய் ரஜினிக்கு சின்ன பல்புகள் கொண்டு ஒவ்வொன்றாய் மின்னி Super Star என்று வருமாறு செய்திருப்பார்கள்.. அதே பாணியில் சிம்புவுக்கு இந்தப் படத்தில் Little Super Star என்று ஆரம்பிக்கிறார்கள்.. ISO முத்திரை மாதிரி அவரது trademark முத்திரை வேறு.. அப்போது துவங்கும் டார்ச்சர் கடைசி வரை நம்மை விடுவதாய் இல்லை.. ஆதி என்ற கேரக்டரில் சிம்பு ரசிகர்களைக் கும்பிட்டபடி அறிமுகமாகிறார்.. அறிமுகமாகி ஒரு சல்யூட் வைத்து விட்டு ஏதாவது பேச வேண்டுமே என்ற கவலையெல்லாம் இல்லாமல், வலது கையில் பெருவிரலை மேலே தூக்கி, சுண்டு விரலை நேராக நீட்டி, மற்ற விரல்களை மடக்கிக் கொண்டு விஷ்க் விஷ்க் என்று ஆட்டி ஏதோ செய்து விட்டு "அலை அடிக்குது.. என்னை சுத்தி அலை அடிக்குது.." என்று பாட்டுப் பாடி டத் தொடங்கி விடுகிறார்.. கஷ்டம்டா சாமி..!!

பெற்றோர், தம்பி என அளவான குடும்பம்.. மொத்த குடும்பமும் சிம்புவின் மேல் பாசம் பொழிகிறார்கள்.. த்ரிஷாவோடு சிம்புவுக்கு முதலில் மோதல்.. பிறகு என்னவாகும் என்று உங்களுக்கே தெரியும்.. நண்பர்கள் வீட்டை எதிர்த்துத் திருமணம் செய்ய சிம்புவும் த்ரிஷாவும் உதவுகிறார்கள். அதனால் நண்பனின் வீட்டில் நடக்கும் அதிர்ச்சிகரமான விஷயங்களால் துவண்டு, தங்கள் காதலைத் துறக்கும் முடிவுக்கு வருகிறார்கள்.. கடைசியில் சேர்கிறார்கள்.

சிம்புவின் தந்தையாக ரகுவரன்.. அப்பழுக்கில்லாத performance.. "பறக்கிறதுக்கு ஆசைப்படணும்.. அப்போ தான் இருக்கிறதையாவது காப்பாத்திக்க முடியும்..” என்று அவர் சொல்வது வித்தியாசமான, ரசிக்கத்தக்க லாஜிக்..

சிம்புவின் தம்பியாக டி.ஆரின் அடுத்த படைப்பு குறளரசன்.. கொஞ்சம் குண்டுப் பையனாக வரும் அவரை சிம்பு படத்தில் கன்னா பின்னாவென்று கிண்டலடித்துத் தள்ளுகிறார்.. வீட்டுக் கோபமோ என்னவோ..??

படத்தில் சிம்புவையும் டாமினேட் செய்து நமக்கு ஆறுதல் அளிக்கிறார் விவேக்.. படம் முழுக்க காமெடி சாம்ராஜ்யம் நடத்துகிறார்.. குறிப்பாக ட்ரெய்னிலிருந்து இறங்கி நண்பன் வீட்டுக்குப் போய்ச் சேரும் வரையிலான காட்சியில் வயிறு புண்ணாகிறது.. எதற்காக 2500 ரூபாய்க்கு சரியாக எல்லோரையும் ஏமாற்றுகிறார் என்பது கடைசி வரை தெளிவாக்கப்படவில்லை..

த்ரிஷா.. வந்து போகிறார்..!! பாடல் காட்சிகளில் அவருக்கு சுளுக்கா, தசைப்பிடிப்பா என்று தெரியவில்லை.. சிம்பு கண்ட இடங்களில் கை வைத்துத் தடவி விட்டுக் கொண்டேஏஏஏஏ இருக்கிறார்.. எனக்கென்னமோ South Indian Drew Barrymore ஜோதிகாவின் “கண் நிறைந்த” அழகை ரசித்து விட்டு த்ரிஷா மாதிரி குச்சி குச்சி ராக்கம்மாக்களை ரசிக்க முடியவில்லை..

க்ளைமாக்ஸ் வில்லனாக நாசர்.. ஒன்றும் அதிரடியாக செய்யாமல், கடைசியில் ரகுவரனைப் போல் இவரும் கருத்து கந்தசாமியாகி விடுகிறார்..

ரொமான்ஸ் காட்சிகள் கொஞ்சம் பரவாயில்லை..

சமீப காலமாக நல்ல பாடல்களை அளித்து வந்த வித்யாசாகருக்கு என்ன ஆயிற்றோ தெரியவில்லை.. பாடல்கள் எதுவும் மனதில் நிற்பது போல இல்லை.. சண்டைக் காட்சிகளிலும் பிண்ணனி இசை அவ்வளவாக ஈர்க்கவில்லை..

க்ளைமாக்ஸ் காட்சியைப் பார்த்து விட்டு டி.ஆர். உணர்ச்சி மேலிட கண்கலங்கி விட்டதாக எதிலோ படித்தேன்.. எனக்கு சிரிப்புத்தான் வந்தது.. தயாரிப்பாளரை நினைத்து அழுதாரோ என்னமோ..?? இருக்கும்..!!

"க்ளாஸ் பாதி.. மாஸ் பாதி.. ரெண்டும் சேர்ந்து தான் ஆதி..!!", "தம்மும் நான் தான்.. அலையும் நான் தான்.." என்று சம்பந்தமில்லாமல் சில காட்சிகளில் டயலாக் விடுகிறார் சிம்பு..

படத்தில், தம்பி குறளரசனிடம் சிம்பு, "சின்னவன் எப்பவும் சின்னவனாத்தான் இருக்கணும்.. ரொம்ப ஆடக் கூடாது.." என்று சொல்கிறார்.. கண்ணாடி முன்னால் நின்று ஒருமுறை தனக்கே அதைச் சொல்லிக் கொண்டால் தேவலை..!!

0 Comments:

Post a Comment

<< Home

Old Commenting System: |

Very Old Commenting System: