திருடா திருடி


நடிகர்கள்: தனுஷ், சாயா சிங், கருணாஸ், மாணிக்க விநாயகம்
இசை: தினா
எழுத்து, இயக்கம்: சுப்பிரமணியம் சிவா

திருடா திருடி ஒரு வெற்றிப் படம் என்று திரைப்பட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வெற்றிப் படமாகும் அளவுக்கு படத்தில் எதுவுமே இல்லை என்பதே உண்மை. தனுஷ் என்ற ஒரு நடிகருக்கு அண்மைக்காலத்தில் கிடைத்திருக்கும் நற்பெயரும், இதன் கூட வெளிவந்த இன்னொரு படம் கெட்ட பெயர் சம்பாதித்து விட்டதன் காரணமாகவும் மட்டுமே திருடா திருடி ஓடிக்கொண்டிருக்கிறது எனலாம். வேறு எந்தக் காரணமும் எனக்குத் தோன்றவில்லை..

கதை ரொம்பவும் சாதாரணமானது. பொறுப்பில்லாமல் ஊரைச் சுற்றித் திரியும் தனுஷ், அவரது தந்தையால் அடிக்கடி கண்டிக்கப்படுகிறார். தனுஷின் அண்ணனோ ரொம்ப பொறுப்போடு வேலைக்குப் போய் வருகிறார், தனுஷ், அரியர்ஸ் முடிக்காமல் சுற்றிக் கொண்டிருக்கிறார். தந்தையின் கோபத்திற்குக் கேட்கவா வேண்டும்??

முதலில் தந்தையின் கோபத்தை வழக்கம்போல அலட்சியப்படுத்தும் தனுஷ், ஒரு கட்டத்தில் தந்தை தன்னுடன் பேசுவதில்லை என்று உணர்ந்ததும் ரொம்ப அதிர்ச்சியடைந்து விடுகிறார். அவரிடம் நல்ல பேரெடுக்கும் விதமாக சென்னைக்கு வந்து வேலையில் சேர்ந்து, முன்னேறுகிறார். இதன் கிளைக்கதையாக நாயகியுடன் உருவாகும் மோதல்-காதல் சூழ்நிலைகளும் வருகின்றன. இரண்டு வார்த்தைகளில் சொல்ல வேண்டுமென்றால், உப்புச் சப்பில்லாத கதை. காதல் கொண்டேனுக்கு அடுத்த படம் என்ற வகையில் ரொம்ப ஏமாற்றுகிறது..

தனுஷ் இரவு லேட்டாக வீட்டுக்கு வர, தந்தை கண்டிக்கும் காட்சி, நன்றாக இருக்கிறது.. வேறு எந்தக் காட்சியும் குறிப்பிட்டுச் சொல்லும்படி இல்லை..

தனுஷ்க்கு நடிப்பில் ரொம்ப வேலை இல்லை. "இந்தியன் ப்ரூஸ் லீ" விளம்பரப் படுத்தியிருக்கிறார்கள்.. சண்டைக் காட்சிகளில் அப்படி ஒன்றும் பொறி பறக்கவில்லை. தனுஷின் ஒல்லியான உடல் வாகும் ஒத்துழைக்கவில்லை. கிருதா, தாடியெல்லாம் வைத்துக் கொண்டு பார்க்கவும் நன்றாக இல்லை..

புதுமுகம் சாயா சிங்கின் நடிப்பு பரவாயில்லை.. மோதல் காட்சிகளில் நன்றாகத் திட்டித் தீர்க்கிறார். நன்றாக நடனமாடவும் வருகிறது. வருங்காலம் உண்டு எனலாம். தனுஷின் தந்தையாக வரும் மாணிக்க விநாயகம் நன்றாக நடித்திருக்கிறார். ஒரு மகன் நன்றாய் இருக்க ஒருவன் மட்டும் தான்தோன்றித்தனமாய் இருப்பதால் ஒரு தந்தை படக் கூடிய வேதனையையும் எதிர்பார்ப்பையும் அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

தனுஷ், சாயா சிங் இருவரும் மோதிக் கொண்டே இருக்கிறார்கள்.. திடீரென்று ஒரு நாள் சாயா சிங்கின் தோழி, "நீ அவன் மேல கோபப்பட்டுக் கிட்டே இருக்கிறே இல்லையா..?? அப்படின்னா அவனை லவ் பண்றே-ன்னு அர்த்தம்.." என்று சொல்லவும் சாயா சிங் உடனே ரொமாண்டிக் லுக் விட்டு கனவில் ஒரு டூயட்டெல்லாம் பாடுகிறார்.. என்ன லாஜிக் என்றே புரியவில்லை..

ஒரு பெண்ணின் கால் பெருவிரல், கால் கட்டை விரலை விட நீளமாய் இருந்தால் அவள் அடங்காப்பிடாரியாய் இருப்பாள் என்று ஒரு லாஜிக், படத்தில் அடிக்கடி உபயோகிக்கப்படுகிறது.. என்னைக் கேட்டால், படத்தில் சில அசிங்கங்களைக் கூட மன்னிக்கலாம், இது போன்ற அபத்தங்களை மன்னிக்கவே கூடாது.

தினாவின் இசையில் பாடல்கள் பரவாயில்லை. 'மன்மத ராசா..' பாடல் மட்டும் ஒன்ஸ் மோர் ரகம்.

மசாலா படம் பண்ணுவதில் கூட, "தூள்" போன்ற படங்களில் ஒரு நேர்மை இருந்தது. திருடா திருடியில் அது கூட இல்லை.

சமீப காலமாய் ஓரளவு தரமான படங்கள் வெற்றி பெற்றதைக் கண்டு நீங்கள் தமிழ் சினிமா திருந்தி விட்டது என்று மகிழ்ந்திருந்தால், மன்னிக்கவும், தமிழ் சினிமா அவ்வளவு சீக்கிரம் திருந்தாது போலத் தான் தெரிகிறது..

0 Comments:

Post a Comment

<< Home

Old Commenting System: |

Very Old Commenting System: