காக்க.. காக்க..
நடிகர்கள்: சூர்யா, ஜோதிகா, ஜீவன்
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
எழுத்து, இயக்கம்: கௌதம் மேனன்
காக்க காக்க ஒரு அழுத்தமான action படம் என்று அதன் ட்ரெய்லர்கள் கட்டியம் கூறுகின்றன.. ஆனால் ஒரு இனிய ஆச்சர்யமாக படத்தில் என்னை மிகவும் கவர்ந்தவை காதல் காட்சிகளே ஆகும்.. பார்த்துப் பார்த்து செதுக்கப்பட்டிருக்கும் காதல் காட்சிகளில் சூர்யாவும் ஜோதிகாவும் அசத்தியிருக்கிறார்கள்.. குறிப்பாக ஜோதிகாவின் வசனங்கள் மிகவும் அருமையாக எழுதப்பட்டுள்ளன.. கீழ்வருபவை உதாரணங்கள்..
சூர்யா: உனக்கு ஒரு ஆபத்து.. என்னால.. என் வேலையால.. யாரு, என்னன்னு விசாரிச்சுக்கிட்டிருக்கோம்.. அது வரைக்கும் நீ ஒரு பாதுகாப்பான இடத்தில இருந்தா எனக்கு கொஞ்சம் comfortable-ஆ இருக்கும்..
ஜோதிகா: உங்க தோளில சாய்ஞ்சுக்கட்டுமா?? அதை விட பாதுகாப்பான இடம் எதுன்னு எனக்குத் தெரியலை..!!
ஜோதிகா: உங்களைக் கல்யாணம் பண்ணிக்கணும்.. இப்போ மாதிரியே எப்பவும் உங்க மேல பைத்தியமா இருக்கணும்.. இந்தக் கண்கள் என்னைப் பார்த்துக்கிட்டே இருக்கணும்.. மூணு குழந்தைகள் பெத்துக்கணும்.. ஒவ்வொருத்தரும் உங்களை மாதிரியே.. அப்புறம் ஒரு நாள் செத்துப் போயிடணும்..!!
சூர்யா: ஏன்? Why me??
ஜோதிகா: It's a girl thing..!! சொன்னா உங்களுக்குப் புரியாது.. ஒரு பொண்ணா இருந்து யோசிச்சுப் பாருங்க..!!
ஜோதிகா: எனக்கு என்ன வயசு தெரியுமா??
சூர்யா: 24
ஜோதிகா: ஏன் கேட்டேன்-னு கேட்க மாட்டீங்களா??
சூர்யா: ஏன் கேட்டே??
ஜோதிகா: 24 வருஷமா இந்த முத்தத்துக்காகக் காத்திருந்தேன்.. இனிமே ஒரு second கூடக் காத்திருக்க முடியாது..!!
இப்படிப் படமெங்கும் பல இடங்களில் காதல் மழை பொழிகிறது.. ஜோதிகா ரொம்பவும் உணர்ந்து செய்திருக்கிறார்.. "என்னைக் கொஞ்சம் மாற்றி, என் நெஞ்சில் உன்னை ஊற்றி.." பாடலில் Wood House-க்குப் போய்ச் சேர்ந்த பிறகு சூர்யாவுக்கு coffee எடுத்து வருவார். அதை சூர்யாவிடம் நீட்டும் போது காதலும் குறும்பும் கலந்து வழிந்திட ஒரு பார்வை பார்ப்பார் பாருங்கள்.. நேற்றைக்கெல்லாம் என் கனவில் அந்தப் பார்வை தான்..!! மிக நேர்த்தியாகச் செய்திருக்கிறார் ஜோதிகா..
சூர்யாவுக்கு அருமையான பாத்திரம்.. அன்புச்செல்வன் IPS-ஆகப் புது அவதாரம் மட்டுமல்ல, அதில் விஸ்வரூபமும் எடுத்திருக்கிறார்.. ரொம்ப சீரியஸான பாத்திரம்.. நடுவில் அத்தி பூத்தாற்போல் எப்போதாவது சிரிக்கிறார்.. ரொம்ப அழகு..!! மீசையை அவர் அடிக்கடி தடவி விட்டுக் கொள்வதும், ஜோதிகா அதை imitate செய்வதும் கன ஜோர்..சூர்யாவின் உழைப்பு படம் முழுக்கத் தெரிகிறது..
தாதா பாண்டியாவாக வருகிற ஜீவனின் நடிப்புத்தான் படத்தில் நச்சென்று நம் மனதில் பதிந்து நிமிர்ந்து உட்கார வைக்கிறது.. வெறி கொண்ட பார்வையோடும், அலைபாயும் கூந்தலோடும் அவர் வரும்போதெல்லாம் அடிமனதில் ஒரு திகில் ஏற்படுகிறது.. சூர்யாவைத் தொலைபேசியில் அடிக்கடி அழைத்து அவர் விடும் சவால்கள் அத்தனையும் சரவெடி ரகம்.. குறையின்றிச் செய்திருக்கிறார்.. ஆனால் அவர் பேசத் தொடங்கினாலே நம் காதுகளில் கூவத்தைக் காய்ச்சி ஊற்றிய மாதிரி ஒரு effect.. தவிர்த்திருக்கலாம்..
படத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் ஒரு இசை சாம்ராஜ்யம் நடத்தியிருக்கிறார்.. நீண்ட நாட்களுக்குப் பிறகு படத்தில் அனைத்து பாடல்களுமே நெஞ்சை அள்ளிச் செல்லும் ரகம்.. குறிப்பாக "உயிரின் உயிரே" மற்றும் "தூது வருமா" இரண்டு பாடல்களும் அதி அற்புதம்.. "கலாபக் காதலா" பாடலில் பாடலாசிரியர் தாமரை பளிச்சிடுகிறார்..
படத்தின் ஒளிப்பதிவும் எடிட்டிங்கும் நம்மைக் கட்டிப்போட்டு வைக்கின்றன.. நேர்த்தியான உழைப்பு..
"An episode in a police officer's life." என்று படத்தை விளம்பரப்படுத்தியிருக்கிறார்கள்.. அந்த வகையில் திறமையான திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது.. நாயகன் பல இழப்புகளைச் சந்தித்துத் தான் தன் கடமையை நிறைவேற்ற முடிகிறது என்பது இயல்பான முடிவாக நம்மைக் கவர்கிறது.. இயக்குனரின் "டச்"கள் அங்கங்கே பிரமிக்க வைக்கின்றன.. பாடல் காட்சிகளில் பல புதுமைகள்.. "உயிரின் உயிரே" பாடல் மயக்க நிலைக்குப் போகும் நாயகனின் கனவுப் பாடலாக இருக்கிறது.. "என்னைக் கொஞ்சம் மாற்றி.." பாடலில் ஆண்குரலுக்கு சூர்யா வாயசைப்பதில்லை.. பெண்குரலுக்கு ஜோதிகா மட்டும் வாயசைப்பார்.. இப்படி நிறைய..
மருத்துவமனையில் சூர்யாவுக்கு உணர்வு திரும்பும்போது நடந்த சம்பவங்களெல்லாம் அவர் நினைவில் அலைமோத, ஒரு உதறலோடு துள்ளிக் கண் திறப்பார்.. அருமையான காட்சி அது.. இப்படி அங்கங்கே இயக்குனர் கௌதமின் முத்திரைகள் அழுத்தமாகப் பதிக்கப்பட்டிருக்கின்றன.. வன்முறைக் காட்சிகளை இன்னும் கொஞ்சம் கவனத்துடன் கையாண்டிருக்கலாம்..
Technically brillaint-ஆன ஒரு தரமான திரைப்படம்..!!
<< Home