ஏழு/'எ' வானவில் குடியிருப்பு வளாகம்

(முன் குறிப்பு-1: தாமதமான விமர்சனத்துக்கு மன்னிக்கவும். பெங்களூரில் பிற மொழிப் படங்கள் வெளியிடப்படுவதில் சிக்கல் நீடிப்பதால் சென்னை செல்லும்போது மட்டுமே படங்களைப் பார்த்து விமர்சனம் எழுத முடிகிறது. திரையரங்கில் பார்த்து மட்டுமே படத்தை விமர்சனம் செய்ய வேண்டும் என்பது எனது கொள்கை.)

(முன் குறிப்பு-2: இந்தத் திரைப்படம் மீதான விமர்சனத்தை தூய தமிழில் எழுத முயன்றுள்ளேன், பெயர்களைத் தவிர.)

நடிகர்கள்: ரவிகிருஷ்ணா, சோனியா அகர்வால், சுமன் ஷெட்டி, விஜயன்
இசை: யுவன் ஷங்கர் ராஜா
இயக்கம்: செல்வராகவன்

திரைப்படம் என்னும் ஊடகத்தின் வலிமையான சாத்தியக்கூறுகளை அறிந்து, எடுத்துக்கொண்ட கதைக்குப் பொருத்தமாக காட்சிகளை வடிவமைத்துப் பார்வையாளர்களுக்குத் திருப்தி அளிக்கின்ற இயக்குனர்களின் வரிசையில் செல்வராகவன் என்னும் இளைஞருக்கு சிறப்பான இடம் உண்டு என்று நிரூபித்திருக்கும் படம் இது.

வாழ்வின் போலித்தனமான உற்சாகங்களின் மீது பிடிப்புக் கொண்டு தன் மீதே நம்பிக்கை இல்லாமல் ஏனோதானோவென்ற இயல்பில் காலந்தள்ளிக் கொண்டிருக்கும் இளைஞன், பெற்றோரின் தற்காலிகத் துயரினைத் துடைக்கும் பொருட்டு அவர்களின் கட்டாயத்தினால் உந்தப்பட்டு தன் வாழ்க்கையைப் பணயம் வைக்கும் தறுவாயில் இருக்கும் இளம்பெண் - இவர்கள் இருவரின் இடையேயான உணர்ச்சிக் கொந்தளிப்புகளின் தொகுப்பை சிந்தாமல் சிதறாமல் அள்ளித் தந்திருக்கிறார் இயக்குனர். 'இரு கடின மனங்களின் கதை' என்று முன்னறிவிப்புகளில் கூறியிருப்பது மிகப் பொருத்தமே.

காதலின் நினைவுகளை மிக அலங்காரமாகவும், அதன் வெளிப்பாடுகளை மிக இயல்பாகவும் படம்பிடித்துக் காட்டியிருப்பது படத்துக்கும், காதல் என்ற அற்புத உணர்வுக்கும் நல்ல கனத்தை ஏற்றிக் காட்டியிருக்கிறது.

தந்தைக்கும் மகனுக்குமிடையான உணர்வுபூர்வமான சித்தரிப்புகளில் நம்மை இழக்கிறோம். "காசுக்காகத் தான் நம்ம அப்பா நம்மளை மதிக்கிறாருன்னு அவன் நெனைச்சிடக் கூடாது பாரு" என்று மனைவியிடம், 'அவன் தூங்கிட்டானா' என்று உறுதிப்படுத்திக் கொண்ட பிறகு அப்பா விஜயன் பேசும் காட்சி அபாரம். கதாநாயகனுடம் சேர்ந்து நமது விழிகளிலும் பொங்குகிறது புரிதலின் கண்ணீர்.

மௌனத்தின் மொழியை இயக்குனரோடு சேர்ந்து வலிமையாகப் பேசுகிறது படத்தின் பிண்ணனி இசை. தேவையான இடங்களில் தேவையான அளவுகளில் இசையைப் பிரவாகமாக்கி உலவ விட்டிருக்கும் யுவன் ஷங்கர் ராஜாவுக்கு உள்ளம் கனிந்த பாராட்டுகளை உரித்தாக்குவோம். குறிப்பாக, முதன்முதலாக நாயகன் நாயகியை மொட்டை மாடியில் வைத்துப் பார்க்கும் காட்சியில், இசைத் தேரில் ஏறி அவன் மனதில் மட்டுமில்லாமல் பார்வையாளர்களான நம் மனதிலும் நுழைந்து விடுகிறாள் நாயகி. அற்புதம்.

நடிக்கத் தெரிந்த நடிகர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்கள் நடிக்குமளவுக்கு சிறப்பான காட்சிகளை அமைத்த இயக்குனருக்கு, அந்தக் காட்சிகளை அழகாகப் படம்பிடித்து மெருகூட்டி உதவி புரிந்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் அரவிந்த்கிருஷ்ணா. அவரும் நமது பாராட்டுப் பத்திரத்தில் இடம் பிடிக்கிறார்.

நண்பர்களின் எச்சரிக்கைகளைப் பொருட்படுத்தாமல் காதல் என்று தான் புரிந்து கொண்ட உணர்வை வெளிப்படுத்தத் துடிக்கும் போதும் சரி, அவள் மறுதலித்து அவமானப்படுத்திய பிறகு இயலாமையை மறைத்துக் கொண்டு அடுத்த கட்டம் நோக்கி நகர முயன்று, முடியாமல் மீண்டும் அவளிடம் போய் நிற்கும் போதும் சரி, அவள் ஒப்புக் கொண்ட பிறகு முகத்தில் அந்த மகிழ்ச்சியைப் பிரதிபலித்தபடி உலா வரும்போதும் சரி, அருமையாக அனுபவித்துச் செய்திருக்கிறார் நாயகன் ரவிகிருஷ்ணா. இறுதிக்கட்டக் காட்சிகளில் இவரது பங்களிப்பு படத்தைத் தூக்கி நிறுத்துகிறது.

சோனியா அகர்வால் படத்தின் உயிர்நாடி. அவரின்றி படத்தில் ஓரணுவும் அசையாது. மிகக் குறுகிய அவரது திரையுலக அனுபவத்தில் கிடைத்த நல்லதொரு கதாபாத்திரத்தை இந்த அளவு சிறப்பாக வெளிப்படுத்தியிருப்பது அவரது திறமைக்கு சான்று கூறுகிறது. அவருக்கு ஒரு ஒளிமயமான எதிர்காலம் தமிழ்த் திரையுலகில் அமையட்டும் என்று வாழ்த்துவோம்.

நண்பனாக வரும் சுமன் ஷெட்டி அனைவரையும் கவரும் வகையில் மிக இயல்பான ஒரு நண்பனாகத் திகழ்கிறார். கண்மூடித்தனமான ஆதரவை நட்பு என்று எடுத்துக் காட்டும் சில திரைப்படங்களுக்கு மத்தியில் இது போன்ற பாத்திரப்படைப்புகள் நம்பிக்கையூட்டுகின்றன.

'கண் பேசும் வார்த்தைகள் தெரிவதில்லை' பாடல் ஒரு நல்ல கவித்துவப்பூர்வமான அனுபவத்தை அளிக்கிறது.

படத்தில் சலிப்பூட்டும் அம்சங்கள் இரண்டு. சோனியா அகர்வாலைத் திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டிருக்கும் 'மாப்பிள்ளை' எதிர்பார்த்தபடியே ஒரு கேவலனாக இருப்பது. பிறகு, இறுதிக்கட்டக் காட்சிகளின் நீளம். அங்கு இடம்பெறும் பாடலை வெட்டி இன்னும் இறுக்கமாகப் படத்தைக் கட்டுமானம் செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

காதல், ஆசை, கோபம், துயரம், மகிழ்ச்சி என்று அத்தனை உணர்வுகளின் வெளிப்பாட்டிலும் பிண்ணனியில் மழை ஒரு குறியீடாகப் பயன்படுத்தப்பட்டிருக்கும் உத்தியின் இனைமையில் நாம் நனைகிறோம். செவ்வனே செய்திருக்கிறார்கள்.

கலாசார ரீதியில் சில அதிர்ச்சிகளை ஏற்படுத்தக் கூடிய காட்சிகள் இருப்பதாக சிலர் குற்றச்சாட்டுகளை முன்வைக்கலாம். கதைப்போக்கின் கட்டுமானச் சிறப்பினால் அவை எனக்குப் பொருட்படுத்தத் தக்கவையாக இல்லை.

பார்த்து முடிக்கையில் ஒரு வித திருப்தியை அளித்து, பார்த்து முடித்து சில காலம் கழிந்த பிறகும் நமக்குள்ளே தங்கியிருந்து அதிர்வுகளை ஏற்படுத்துவதே நல்ல திரைப்படம் என்பது எனது கட்சி. இந்தப் படம் அதை முழுமையாக நிறைவேற்றுகிறது.

0 Comments:

Post a Comment

<< Home

Old Commenting System: |

Very Old Commenting System: