தொட்டி ஜெயா

நடிகர்கள்: சிம்பு, கோபிகா
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
இயக்கம்: V.Z. துரை

அடியாள் வேலை செய்யும் ஒருவன் வாழ்வில் குறுக்கிடுகிறாள் தேவதை மாதிரி ஒருத்தி. அவனது கட்டாந்தரை மனசுக்குள் பூப்பூக்க வைக்கிறாள் அவள். அவர்களின் காதலுக்கும் வரும் குறுக்கீடுகளும் அவர்கள் இறுதியில் இணைகிற கதையும் தான் படம். (அதெப்படி இணையாமல் போவார்கள்? தமிழ் சினிமாவில்?!)

பள்ளியில் தமிழ்ப் பாடத்தில் செய்யுள் பகுதியில் மனப்பாடப் பகுதி இருக்கும். பல சமயம் 'என்னடா ரோதனை இது' என்ற நினைப்புடன் தான் அவற்றைப் பலரும் மனப்பாடம் செய்ய முக்கி முனகுவார்கள். ஆனாலும், அவற்றில் ஒன்றிரண்டு, கருத்தின் வளத்தோடும் அழகின் நயத்தோடும் இருந்து அசத்தி விடும். அதைப் போலத் தான் தொட்டி ஜெயாவும். சுமாரான ஒரு படத்தில் அங்கங்கே கவிதை மாதிரி காட்சிகள்.

நாயகன், அமரன், ரன், போன்ற தமிழின் வெற்றிகரமான gangster moviesகளின் ஞாபகம் அவ்வப்போது வந்து தொலைத்தாலும் படத்தில் தென்படும் ஒரு freshness-க்காக மன்னிக்கலாம்.

முக்கியமாய் சிம்பு வாயை மூடிக் கொண்டு நடிப்பில் மட்டும் கவனம் செலுத்த முயன்றிருக்கிறார் என்பது மிக வரவேற்க வேண்டிய அம்சம். நடிப்பில் அப்படியொன்றும் பிய்ச்சு உதறவில்லையென்றாலும் பாராட்டத்தக்க கட்டுப்படுத்திய நடிப்பை அவ்வப்போது வெளிப்படுத்துகிறார். சண்டைக் காட்சிகளில் நல்ல உக்கிரம். தாடி வேறு ஒரு சீரியஸ் உணர்வைப் படம் முழுக்கத் தொடர்ந்து தந்து கொண்டே இருப்பதால் திருப்தியாகவே இருக்கிறது. எப்போதாவது குறிஞ்சி பூத்த மாதிரி அவர் சிரிக்கும் போது நமக்குப் பிடிக்கிறது.

ஒரு மத்திய வர்க்கக் குடும்பப் பெண்ணாக படம் முழுக்க சுடிதார் அணிந்து கொண்டு வந்தால் கோபிகா நிஜமாகவே தேவதை மாதிரி தான் இருக்கிறார். (அல்லது ஒருவேளை 'நெடில்+குறில்+கா' என்று பெயர் வைத்திருக்கும் நடிகைகள் என்றால் எனக்கு ரொம்பப் பிடிக்குமோ என்னவோ!!) கல்கத்தாவில் ரயிலைத் தவற விட்டு விட்டு, சிம்புவுடன் அவர் கன்யாகுமரிக்கு பயணப்படும் காட்சிகளில் அருமையாக செய்திருக்கிறார். இரண்டாம் பாதியில் அவருக்கு வேலை ஒன்றும் இல்லை. முதல் பாதியில் கிடைத்த வாய்ப்புகளை சிறப்பாகப் பயன்படுத்தி ஜொலித்திருக்கிறார்.

இடை வேளை வரையிலான காட்சிகள் சுவாரஸ்யமாக இருக்கின்றன. தியேட்டரில் பலரும் அடுத்து இப்படித் தான் நடக்கப் போகிறது என்று ஊகித்து அதைக் கத்த, சிம்புவும் கோபிகாவும் அதையே செய்ய நல்ல காமெடி. ஆனாலும் ரசிக்கும்படியாகவே இருந்தது.
ஆனால், தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை ஒரு பெயர் இல்லாத சாபம் இருக்கிறது போலும். "Well begun is half done; Half done is enough done!!" என்று இயக்குனர்கள் பலரும் நினைத்து விடுவது தான் அந்த சாபக் கேடு.

இரண்டாம் பாதியில் எந்தப் பக்கம் போவது என்று சிம்புவும் கோபிகாவும் தவிப்பது போலவே திரைக்கதையும் தவித்து, தடுமாறி நொண்டுகிறது. அமெரிக்காவின் வேலைகளை இந்தியாவுக்கு அவுட்சோர்ஸ் செய்வது போல், சிம்புவையும் கோபிகாவையும் 'போட்டுத் தள்ளும்' வேலையை ஏரியா ஏரியாவாய் இருக்கிற ரௌடிகளைக் கூப்பிட்டு அவுட்சோர்ஸ் செய்கிறார் வில்லன். மதுரையிலிருந்து வரும் கோஷ்டியிடம் நேராய் சென்று அவர்கள் மனதை மாற்றும் வகையில் பேசி அவர்களை சைடு மாற்றி அவர்களுடனே சிம்பு ஒரு குத்தாட்டம் போடுவது காமெடி என்றாலும் கொஞ்சம் ஓவர்.

சென்னையின் மிகப்பெரிய தாதாவான வில்லனின் அடியாட்கள் எல்லோரும் இந்த 2005-ம் ஆண்டில் போய் கத்தி, கோடாலி போன்ற அரதப் பழசான ஆயுதங்களை வைத்துக் கொண்டு நாயகனைத் தேடி வந்து அடி வாங்கி ஓடிப் போகும் கொடுமையை எங்கே போய் அழுவது என்று எனக்குப் புரியவில்லை.

ஹாரிஸ் ஜெயராஜின் பிண்ணனி இசை படத்திற்கு ஒரு பெரிய பலம். குறிப்பாக சண்டைக் காட்சிகளின் பிண்ணனியாக வரும் மிரட்டலான தீம் ம்யூசிக், சிம்புவுக்கும் கோபிகாவுக்கும் காதல் மலரும் தருணங்களில் மனதை வருடிக் கொடுக்கும் மெலடி என இரண்டு விதமாகவும் பின்னியிருக்கிறார். பாடல்களில் உறுத்தாத இசையும் அருமையாகவே இருக்கிறது.

காமிரா ஆங்கிள்களில் மிகவும் மெனக்கெட்டு வித்தியாசம் காட்டியிருக்கிறார் ஆர்.டி.ராஜசேகர். மிக நம்பிக்கையூட்டும் விதமான ஒளிப்பதிவை அளித்திருக்கிறார். குறிப்பாக ஒரு காட்சியில் சிம்பு-கோபிகாவைத் தேடி வில்லன் கோஷ்டியினர் வருகிறார்கள். மாடிப் படிகளில் இறங்கி அவர்களை எதிர்கொள்ள வருகிறார்கள் சிம்புவும் கோபிகாவும். அப்போது அவர்களின் நிழல் முன்னே வர வர வில்லன் கோஷ்டியினர் பின் வாங்குவதை ஒரு டாப் ஆங்கிளில் படம்பிடித்திருப்பது மிக அருமை.

இயக்குனர் துரையின் உழைப்பு முதல் பாதியில் தெரிகிறது. இரண்டாம் பாதியில் திரைக்கதை தன்னைத் தானே எழுதிக் கொள்ளட்டும் என்று விட்டு விட்டார் போலிருக்கிறது. இருந்தாலும் ஒரு பாராட்டத்தக்க படமாகவே இருக்கிறது என்பது எனது அபிப்ராயம்.
பெருத்த ஏமாற்றத்துக்கு வழியில்லாத ஓரளவு நல்ல படம்.

4 Comments:

Blogger லதா said...

ஒருவேளை 'நெடில்+குறில்+கா' என்று பெயர் வைத்திருக்கும் நடிகைகள் என்றால் எனக்கு ரொம்பப் பிடிக்குமோ என்னவோ!!)

உங்களுக்கு(ம்) தேவிகா / ராதிகா / ஜோ(!) பிடிக்குமோ?

7:43 AM  
Blogger கீதா said...

"தொட்டி ஜெயா" படத்திற்க்கான உங்களின் விமர்சனம் படித்தேன். அருமை. படம் பார்த்த திருப்தி கிடைத்தது.

5:27 PM  
Blogger அன்பு said...

"தொட்டி ஜெயா" படத்திற்க்கான உங்களின் விமர்சனம் படித்தேன். அருமை. படம் பார்த்த திருப்தி கிடைத்தது...

அதனால் இதுவரை திரையரங்கு சென்று பார்க்கலாம என்றிருந்த அரைமனதுக்கு சமாதானம் சொல்லி... படம் பார்க்கப் போவதில்லை. மிக்க நன்றி!

8:11 PM  
Blogger inomeno said...

இடைவேளையில் எழுந்து வந்துவிட்டால் இது சூப்பரான படம்.

1:25 AM  

Post a Comment

<< Home

Old Commenting System: |

Very Old Commenting System: